அரச வங்கியில் மாயமான 3.5 கோடி பணம்; இரு பெண்களிடம் விசாரணைகள் ; திடுக்கிடும் தகவல்கள்
ஹொரண அரச வங்கி ஒன்றிலிருந்து 3 கோடியே 50 இலட்சம் (3.5 கோடி) ரூபாய் பணம் காணாமல்போன சம்பவம் தொடர்பில், கைது செய்யப்பட்டுள்ள வங்கியின் உதவி மேலாளருடன் பணப் பரிமாற்றங்களை மேற்கொண்ட நல்லுருவ – மோதரவில பகுதியைச் சேர்ந்த இரு பெண்களிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகப் பாணந்துறை கோட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
பொலிஸ் விசாரணைகளின்போது , சந்தேக நபரான உதவி மேலாளர் இதற்கு முன்னர் நல்லுருவ பகுதியில் உள்ள அரச வங்கி கிளையொன்றில் பணியாற்றியுள்ளார்.
அங்கு வைத்து அவருக்கு அறிமுகமான, வட்டிக்குப் பணம் கொடுக்கும் பெண் ஒருவரிடமிருந்து அவர் 25 இலட்சம் ரூபாவைத் கடனாகப் பெற்றுள்ளார்.
வட்டிக்குப் பணம் கொடுக்கும் பெண்
அக்கடனுக்காக வட்டியுடன் சேர்த்து இதுவரை 72 இலட்சம் ரூபாவை அவர் செலுத்தியுள்ளதுடன், அதன் பின்னரும் அவ்வப்போது தலா 10 இலட்சம் ரூபாய் வீதம் பலமுறை பணம் பெற்றுள்ளதாகப் புலனாய்வு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
வங்கியிலிருந்து பணம் காணாமல்போன சம்பவத்திற்கு முதல் நாள், தான் வட்டிக்குக் கொடுத்த 37 இலட்சம் ரூபாய் பணத்தைத் திருப்பித் தருமாறு குறித்த பெண் சந்தேக நபருக்குத் குறுஞ்செய்தி (SMS) மூலம் அழுத்தம் கொடுத்துள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நான் அரசியலில் இருக்க மாட்டேன், ஆனால் நீங்கள் பார்ப்பீர்கள்; அருச்சுனா எம்பி ஆரூடம்!
நான் அரசியலில் இருக்க மாட்டேன், ஆனால் நீங்கள் பார்ப்பீர்கள்; அருச்சுனா எம்பி ஆரூடம்!
மேலும், நல்லுருவ பகுதியைச் சேர்ந்த மற்றுமொரு பெண்ணிடமிருந்தும், இத்தாலியிலிருந்து இலங்கை வந்திருந்த பெண் ஒருவரிடமிருந்தும் தலா 25 இலட்சம் ரூபாய் வீதமும், வேறொரு நபரிடமிருந்து 37 இலட்சம் ரூபாவும் இவர் கடனாகப் பெற்றுள்ளார்.
இவ்வாறாகப் பல தரப்பிலிருந்தும் பெறப்பட்ட கடன் தொகைகளைத் திருப்பிச் செலுத்துமாறு சந்தேக நபருக்குத் தொடர்ச்சியாகக் கடும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வந்ததாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வங்கியில் பணம் காணாமல்போனதாகக் கூறப்படும் தினத்திற்கு அடுத்த நாள், சந்தேக நபரான உதவி மேலாளர் வேறொரு வங்கிக் கிளைக்கு இடமாற்றம் பெற்றுச் செல்லவிருந்தமையும் விசாரணைகளில் அம்பலமாகியுள்ளது.
பாணந்துறை கோட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் ரொஹான் விஸ்வநாத்தின் அறிவுறுத்தலின் பேரில், பொலிஸ் அதிகாரிகள் இரு பெண்களிடமும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.