இஸ்ரேலும் ஈரானும் உடனடியாக தாக்குதல்களை நிறுத்துங்கள்: டொனால்ட் டிரம்ப்
இஸ்ரேலும் ஈரானும் உடனடியாகத் தாக்குதல்களை நிறுத்துமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் – ஈரான் இடையே இரு மாதங்களாக போர்நிறுத்தம் நிலவி வரும் நிலையில், இரு நாடுகளும் பரஸ்பரம் மீண்டும் போர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த மோதல் தீவிரமடைந்தால் வளைகுடா பகுதியில் மீண்டும் பெரியளவிலான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
இதனைத் தொடர்ந்து, இரு நாடுகளும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறு டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஈரான் நேற்று இரவு இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. அதற்கு பதிலடியாக இஸ்ரேலும் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றது. இந்த விவகாரத்தில் நிதானத்தைக் கடைபிடிக்குமாறு இஸ்ரேல் அதிபர் நெதன்யாகுவிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறிய நிலையில், அதனை மீறி தாக்குதல் நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் ஈரான் பதிலடி கொடுக்கும் என தொடர்ந்து எச்சரித்து வந்தது. ஆனால், பெய்ரூட்டில் உள்ள ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பின் நிலைகள் மீது இஸ்ரேல் நடத்தியத் தாக்குதல்களைத் தொடர்ந்து, இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளை வீசியுள்ளது.
அமெரிக்கா உடன் ஈரான் நடத்திவந்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்டால், ஹோர்முஸ் நீரிணை திறக்கப்பட்டு உலகளவில் பல நாடுகளில் ஏற்பட்டுள்ள எரிசக்தி தட்டுப்பாடு பிரச்னைகள் தீர்க்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது மீண்டும் போர் மேகம் சூழந்துள்ளதால் அந்த நம்பிக்கை தகர்ந்துள்ளது.
ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு உடன்படவில்லை என்றால் அவர்களை அழித்துவிடுவேன் என டிரம்ப் நேற்று ஒரு நேர்காணலில் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.