;
Athirady Tamil News

அமெரிக்காவுடன் அமைதி ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளதா ஈரான் பதில்

0

மத்திய கிழக்கு போரில் அமெரிக்கா-ஈரான் இடையே தற்காலிக போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில் அமைதி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது. அணுசக்தி திட்டங்கள், ஹார்முஸ் ஜலசந்தி உள்ளிட்ட விவகாரங்களில் உடன்பாடு எட்டப்படவில்லை. மேலும் கடந்த ஒரு வாரமாக அமெரிக்காவும், ஈரானும் பரஸ்பர தாக்குதல்களில் ஈடுபட்டன. இதனால் அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் இந்த வார இறுதியில் ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து இருந்தார். ஆனால் இதனை ஈரான் மறுத்துள்ளது.

இதுதொடர்பாக ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி கூறும்போது, ’இதுவரை அமெரிக்காவுடனான ஒப்பந்தம் குறித்து ஈரான் எந்தவொரு இறுதி முடிவையும் எடுக்கவில்லை. ஒப்பந்தத்தின் பெரும்பகுதி ஏற்கனவே இறுதி செய்யப்பட்டிருந்தது. ஆனால் அமெரிக்கர்கள் தங்கள் நிலைப்பாடுகளைத் தொடர்ந்து மாற்றிக்கொண்டே இருந்தனர். நாங்கள் சிவப்புக் கோடுகள் என்று வரையறுக்கப்பட்ட விஷயங்களில் சமரசம் செய்துகொள்ள மாட்டோம் என்பதை ஈரான் நிரூபித்துள்ளது’ என்றார்.

மேலும் ஈரான் அரசின் தஸ்னிம் செய்தி நிறுவனம் கூறியதாவது:- கடந்த 2 மாதங்களில் மட்டும், ஒப்பந்தம் விரைவில் ஏற்படவுள்ளதாக டிரம்ப் 38 முறை அறிவித்துள்ளார். சாத்தியமான ஒரு புரிதல் அல்லது ஒப்பந்தம் குறித்த தகவலை ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை இது தொடர்பாக டிரம்ப் வெளியிடும் செய்திகளை அவரது முந்தைய அறிவிப்புகளைப் போலவே கருத வேண்டும் என்று தெரிவித்தது. அதேபோல் ஈரானின் பார்ஸ் செய்தி நிறுவனம் கூறுகையில், அமெரிக்காவுடனான ஒரு ஆரம்பக்கட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கான எந்தவொரு வரைவு ஆவணமும் இதுவரை அங்கீகரிக்கப்படவில்லை என்று தெரிவித்தது. ஈரான் மறுப்பு காரணமாக அமைதி ஒப்பந்த விவகாரத்தில் குழப்பம் நீடிக்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.