யாழில், சுகாதார சீர்கேட்டுடன் ஐஸ் கிறீம் விற்றவருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை
யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் சுகாதர சீர்கேட்டுடன் வாகனத்தில் ஐஸ் கிறீம் விற்பனையில் ஈடுபட்டுவருக்கு 06 மாத கால சிறைத்தண்டனை விதித்த நீதிமன்று , அதனை 06 மாத காலத்திற்கு ஒத்தி வைத்ததுடன், 23 ஆயிரம் ரூபாய் தண்டமும் விதித்துள்ளது.
கடந்த வாரம் சங்கானை , சுழிபுரம் மற்றும் அராலி பகுதியில் உணவு கையாளும் நிலையங்களில் பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
அதன் போது , சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகம் , பாண் மற்றும் ஐஸ் கிறீம் விற்பனை வாகனங்கள் இனம் காணப்பட்டன.
அவ்வாறு விற்பனையில் ஈடுபட்ட 10 பேருக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் பொது சுகாதார பரிசோதகரால் வழக்கு தொடரப்பட்டது
அதன் போது 10 பேருக்கும் அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் தனித்தனியே வாசித்து காட்டிய போது , அவர்கள் தம் மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டதை அடுத்து , ஐஸ் கிறீம் விற்பனையாளருக்கு 06 மாத கால சிறைத்தண்டனை விதித்த நீதிமன்று , அதனை 06 மாத காலத்திற்கு ஒத்தி வைத்ததுடன், 23 ஆயிரம் ரூபாய் தண்டமும் விதித்தது. ஏனைய 09 பேரையும் கடுமையாக எச்சரித்த மன்று , அவர்களுக்கு தலா ஒரு இலட்ச ரூபாய் தண்டம் விதித்தது.