;
Athirady Tamil News

தெல்லிப்பழை புற்றுநோய் வைத்திய நிபுணர் மீதான அவதூறு – காணொளிகளை அகற்றுமாறு அருச்சுனாவிற்கு நீதிமன்றம் உத்தரவு

0
நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் மற்றும் மருத்துவர் ஜெயக்குமார் உள்ளிட்டோருக்கு எதிராக தெல்லிப்பழை புற்றுநோய்ப் பிரிவு மருத்துவர், நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றில் வழங்கப்பட்டுள்ளது.
தன்னை தொந்தரவு செய்யும் வகையில் சமூக வலைத்தளங்கள் வாயிலாக அவதூறுகளை மேற்கொள்கின்றனர் குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன், மருத்துவர் ஜெயக்குமார் ஆகியோருக்கு எதிராக தெல்லிப்பழை புற்றுநோய்ப் பிரிவு மருத்துவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தீர்ப்பு கட்டளைக்காக  நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றில் நீதிவான் நஜ்மி ஹூசைன் தலைமையில் எடுக்கப்பட்டது.

இதன்போது முதலாவது எதிர்த்தரப்புவாதியான மருத்துவர் ஜெயக்குமார் பேசிய கருத்துகள் தவறானவை அல்ல என நீதிமன்றம் நம்புவதாகக் கருதி வழக்கிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டார்.

இரண்டாவது எதிர்த்தரப்புவாதியான மருத்துவர் அர்ச்சுனா தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி, “அவர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்பதால் அவருக்குப் பேச்சுச் சுதந்திரம் உள்ளது” எனக் விளக்கமளிக்கபட்டிருந்திருந்தாலும்
எனினும் அதனை வன்மையாக நிராகரித்த நீதிவான், நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும், சாதாரண குடிமகனாக இருந்தாலும் பேச்சுச் சுதந்திரத்துக்கு என்று ஒரு வரையறுக்கப்பட்ட எல்லை உண்டு என சுட்டிக்காட்டினார்.

எந்தவித முறையான சான்றுகளும் இன்றி ஒரு மருத்துவ அதிகாரியின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தோ, அல்லது அவர் ஊழல் புரிந்தார் என்றோ அவதூறு பரப்ப யாருக்கும் உரிமை இல்லை.

பாதிக்கப்பட்ட பெண் மருத்துவருக்கு எதிராக இனி எவ்விதமான அவதூறு மற்றும் போலிப் பரப்புரைகளையும் சமூக ஊடகங்களிலோ அல்லது வௌியிலோ முன்னெடுக்கக் கூடாது. அத்துடன் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவருக்கு எதிராக இதுவரை வௌியிடப்பட்ட அனைத்து அவதூறான மற்றும் போலிப் பிரச்சாரக் காணொலிகளையும் உடனடியாக நீக்க வேண்டும் என்றும் நீதிவான் கட்டளையிட்டார்.

இதேவேளை புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்ட 2024 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ், இலங்கையில் தீர்ப்பளிக்கப்பட்ட இரண்டாவது விசேட வழக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.