;
Athirady Tamil News

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி!

0

லெபனான் நாட்டின் தெற்கு மாகாணங்களில் உள்ள ஹிஸ்புல்லா படைகளின் கட்டமைப்புகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக, இஸ்ரேலிய ராணுவம் அறிவித்துள்ளது.

ஈரானின் ஆதரவைப் பெற்ற லெபனானின் ஹிஸ்புல்லா கிளர்ச்சிப்படைக்கு எதிராக அந்நாட்டின் தெற்கு மாகாணங்களின் மீது நேற்று (ஜூன் 18) இரவு முதல் இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில், இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் இதுவரை 16 பேர் கொல்லப்பட்டதாகவும், இஸ்ரேலிய படைகளின் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தாக்குதலில் ராணுவ வீரர்கள் 4 பேர் கொல்லப்பட்டதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான அமைதி ஒப்பந்தத்திற்கு அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறது. மேலும், ஹிஸ்புல்லா படைகளின் அச்சுறுத்தல் முழுவதுமாகத் தீர்க்கப்படும் வரையில் தாக்குதல் தொடரும் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.

ஏற்கெனவே, சர்வதேச அளவில் எதிர்பார்க்கப்பட்டு வந்த ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான அமைதி ஒப்பந்தம் கடந்த புதன்கிழமை அன்று கையெழுத்தானது. சுவிட்சர்லாந்தில் இன்று மத்தியஸ்தரான பாகிஸ்தான் முன்னிலையில் முறைப்படி ஒப்பந்தத்தில் ஈரான் மற்றும் அமெரிக்க பிரதிநிதிகள் கையெழுத்திடுவார்கள் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில், அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தலைமையிலான குழுவினர் பங்கேற்பதாகக் கூறப்பட்ட நிலையில், போக்குவரத்து சிக்கல்களால் இந்தப் பயணம் ஒத்திவைக்கப்படுவதாக அமெரிக்க அரசு கூறியுள்ளது.

ஆனால், லெபனானின் ஹிஸ்புல்லா படை மீதான இஸ்ரேலின் தாக்குதலைத் தொடர்ந்து சுவிட்சர்லாந்துக்குத் தங்களின் பிரதிநிதிக் குழுவை அனுப்புவதற்கு ஈரானிய அரசு தாமதித்து வருவதால்தான் இன்று நடைபெற வேண்டிய நிகழ்வு தள்ளிப்போனதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் இணைந்து ஈரான் மீது கடந்த பிப். 28 அன்று நடத்திய தாக்குதலில் அந்நாட்டின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதையடுத்து, போரில் களமிறங்கிய ஈரான் வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்தியதுடன், ஹோர்முஸ் நீரிணையை முடக்கியது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.