;
Athirady Tamil News

நெதன்யாகுவை யூதர்களே வெறுத்து விட்டார்கள்; டிரம்ப் கருத்தால் அரசியல் பூகம்பம்

0

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகிய இருவருக்கும் இடையே நிலவி வரும் ரகசிய மோதல்கள் மற்றும் கடுமையான வார்த்தைப் போர்கள் தற்பொழுது சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ளது.

நியூயார்க் டைம்ஸ் ஊடகத்தின் புகழ்பெற்ற புலனாய்வு பத்திரிகையாளர்களான மேகி ஹேபர்மேன் மற்றும் ஜொனாதன் ஸ்வான் ஆகியோர் இணைந்து எழுதியுள்ள “Regime Change: Inside the Imperial Presidency of Donald Trump” என்ற புத்தகம் அண்மையில் வெளியாகி உலக அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

டிரம்ப் கருத்தால் உலக அரசியல் வட்டாரத்தில்   பூகம்பம்

டிரம்பின் இரண்டாவது அதிபர் பதவிக்காலத்தின் பின்னணியை விவரிக்கும் இந்த புத்தகத்தில், கடந்த 2025 செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தின் போது டிரம்ப் மற்றும் நெதன்யாகு இடையே நடைபெற்ற ஒரு ரகசிய தொலைபேசி உரையாடல் அப்படியே விவரிக்கப்பட்டுள்ளது.

காசா போர் நிறுத்த ஒப்பந்தம் மற்றும் 20 அம்ச அமைதித் திட்டத்தை அமெரிக்கா தீவிரமாக முன்னெடுத்த போது, அதிலிருந்து பின்வாங்க முயன்ற நெதன்யாகு மீது டிரம்ப் கடுமையான ஆத்திரமடைந்துள்ளார்.

அப்போது நெதன்யாகுவை நோக்கி, “பிபி (Bibi), எல்லாரும் உன்னை நினைத்து வெறுத்துப் போய்விட்டார்கள். உலகிலுள்ள அனைத்து யூதர்களும் உன்னை வெறுக்கிறார்கள். ஏன், இந்த போன் காலில் இருக்கும் எனது யூத ஆலோசகர்களான ஜாரெட் குஷ்னர், ஸ்டீவ் விட்காஃப் ஆகிய இருவர்கூட உன்னை நினைத்து சலிப்படைந்து விட்டார்கள்” என்று டிரம்ப் மிக ஆக்ரோஷமாகக் கத்தியதாக அந்தப் புத்தகம் விவரிக்கிறது.

அதுமட்டுமல்லாது டிரம்ப் தனது பிரத்யேக உரையாடல்களில் நெதன்யாகுவை ஒரு “ஏமாற்றுப் பேர்வழி” அல்லது “போலி மனிதன்” என்று வர்ணித்துள்ளதாகப் புத்தகம் குறிப்பிடுகிறது, இது டிரம்பின் அகராதியிலேயே மிக மோசமான ஒரு வசவுச் சொல் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இஸ்ரேலுக்குக் கிடைத்த மிகச் சிறந்த நண்பன் நான்தான்; உலகமே உன்னை வெறுத்தபோதும் நான் உனக்கு ஆதரவாக நின்றேன், ஆனால் இப்போது நீ இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை முறிக்கப் பார்க்கிறாய்” என்று டிரம்ப் நெதன்யாகுவை கடுமையாக எச்சரித்துள்ளார்.

சமீப வாரங்களில் நெதன்யாகுவிற்கு “புத்தி சுவாதீனம் இல்லை” என்றும், அவருக்கு “நிர்வாகத் தெளிவு இல்லை” என்றும் டிரம்ப் பொதுவெளியிலேயே கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசியுள்ளார்.

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பிராந்திய மோதல்களை முடிவுக்குக் கொண்டுவர எட்டப்பட்ட ஒப்பந்தங்களை இஸ்ரேல் தொடர்ந்து எதிர்த்த நிலையில் இந்த மோதல் வெடித்துள்ளது.

லெபனானில் ஹிஸ்பொல்லா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் மற்றும் கத்தாரில் ஹமாஸ் தலைவர்கள் மீது இஸ்ரேல் நடத்திய ஏவுகணைத் தாக்குதல் போன்றவற்றால் அமெரிக்க அமைதிப் பேச்சுவார்த்தைகள் முடங்கியதே டிரம்பின் கோபத்திற்குக் காரணம் என்று அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டணி என்பது நிபந்தனைகளுக்கு உட்பட்டது மட்டுமே என்பதை மோதல்கள் மூலம் தெரியவந்துள்ளதாகவும் சுட்டிகாட்டப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.