;
Athirady Tamil News

அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர்கள்.. அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தில் சீனா

0

சென்னை,

அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர்கள் பட்டியலில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி சீனாவின் ‘லைன்ஷைன்’ என்ற கம்ப்யூட்டர் முதலிடத்தை பிடித்துள்ளது.

டாப்500
அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர்கள் தரவரிசைப் பட்டியல் ஆண்டுக்கு 2 முறை மிகவும் துல்லியமாக வெளியிடப்பட்டு வருகிறது. சூப்பர் கம்ப்யூட்டிங் துறையில் உலகப் புகழ்பெற்ற பேராசிரியர்கள் மற்றும் கணினி வல்லுனர்கள் அடங்கிய “டாப்500” என்ற அமைப்பை சேர்ந்த குழு இந்த பட்டியலை வெளியிடுகிறது.

உலகின் பல நாடுகளில் உள்ள நிறுவனங்கள் தங்களின் சூப்பர் கம்ப்யூட்டர்களின் வேகத்தைச் சோதித்து இந்த அமைப்புக்கு தரவுகளை அனுப்புவார்கள். அதை ஆய்வு செய்து இந்த அமைப்பு பட்டியலை தயாரிக்கும்.

அசுர வளர்ச்சி
கடந்த 1993-ம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்த தரவரிசைப்பட்டியல் புதுப்பிக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுகிறது. உலக நாடுகளுக்கு இடையே சூப்பர் கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தில் உள்ள போட்டி மற்றும் அசுர வளர்ச்சியைத் துல்லியமாக இந்த அமைப்பு 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆவணப்படுத்தி வருகிறது.

சீனா முதலிடம்
அதன்படி, நடப்பாண்டில் ஜூன் மாதத்துக்கான அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர்கள் தரவரிசை பட்டியலை ஜெர்மனியில் நடைபெற்ற சர்வதேச சூப்பர் கம்ப்யூட்டிங் மாநாட்டில் வெளியிட்டு இருக்கின்றனர்.

இதில் சீனாவின் ஷென்சென் நகரில் உள்ள தேசிய சூப்பர் கம்ப்யூட்டிங் மையத்தில் நிறுவப்பட்டிருக்கும் ‘லைன்ஷைன்’ என்ற கம்ப்யூட்டர் முதலிடத்தை பெற்றிருக்கிறது. இது வினாடிக்கு 2 குவின்டில்லியனுக்கு அதிகமான வேகத்தில் கணக்கீடுகள் செய்துள்ளது.

எல் கேபிடன்
இதுவரை உலகின் அதிவேக கம்ப்யூட்டராக முதலிடத்தில் இருந்த அமெரிக்காவின் “எல் கேபிடன்” என்ற கம்ப்யூட்டரை விட இது 20 சதவீதம் கூடுதல் வேகம் கொண்டது ஆகும். அது இப்போது 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறது. இதன் மூலம் 2017-ம் ஆண்டுக்கு பிறகு சீனா இந்த பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பெற்றிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

‘லைன் ஷைன்’ கம்ப்யூட்டர்
அமெரிக்கா விதித்த கடுமையான தொழில்நுட்பத் தடைகளை மீறி சீனா இந்தச் சாதனையைச் செய்துள்ளதுதான் உலக அரங்கில் வியப்பாகப் பார்க்கப்படுகிறது. சீனா இந்த கம்ப்யூட்டரை முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட இயங்குதளத்தில் இயக்கியுள்ளது.

‘லைன் ஷைன்’ கம்ப்யூட்டர் பொதுவான அறிவியல் மற்றும் என்ஜினீயரிங் கணக்கீடுகளில் அதிவேகமாகச் செயல்பட்டாலும், செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) சார்ந்த பணிகளுக்கான சோதனையில் இது உலகளவில் 4-வது இடத்தில்தான் உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.