;
Athirady Tamil News

அயோத்தி கோவிலில் ரூ.200 கோடி மோசடி; 17 பேர் மீது வழக்குப்பதிவு

0

லக்னோ,

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ள அயோத்தி ராமர் கோவில் கடந்த 2024-ம் ஆண்டு ஜனவரி 22-ம் தேதி அன்று முறைப்படி திறக்கப்பட்டது. இக்கோவிலின் வரலாற்றுச் சிறப்புமிக்க பிராண பிரதிஷ்டை மற்றும் திறப்பு விழாவை பிரதமர் மோடி தலைமை தாங்கி நடத்தி வைத்தார். அந்தக் கோவிலில் பக்தர்கள் செலுத்தும் கோவில் உண்டியல் காணிக்கை பணம் மற்றும் நன்கொடை நிதியில் முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. மத்தியில் ஆளும் பா.ஜ.க மற்றும் உத்தரப் பிரதேச மாநில யோகி ஆதித்யநாத் அரசுக்கு கடும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

அயோத்தி ராமர் கோவில்
இந்தநிலையில், அயோத்தி ராமர் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.200 கோடி வரை மோசடி நடந்துள்ளதாக கூறப்படும் சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் அம்மாநில அரசால் அமைக்கப்பட்ட இந்த சிறப்பு விசாரணை குழு, தனது 20 பக்க முதற்கட்ட விசாரணை அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

முதற்கட்ட மதிப்பீடுகளின்படி, பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை பணத்தில் சுமார் ரூ.200 கோடி வரை முறைகேடு செய்யப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்ட தனியார் ஊழியர்களுக்கு முறையான சீருடைகளோ, சோதனைகளோ மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளோ பின்பற்றப்படவில்லை. வெறும் ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை மாத சம்பளம் வாங்கும் சாதாரண ஊழியர்கள் சிலர், வேலைக்கு சேர்ந்த சில மாதங்களிலேயே ரூ.40 லட்சம் முதல் ரூ.1.5 கோடி மதிப்பிலான நிலங்களை வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அறக்கட்டளை
இந்த திருட்டு வழக்கில் ஸ்ரீராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் மூத்த நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் உட்பட 17 பேரை எஸ்ஐடி குற்றவாளிகளாக குறிப்பிட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட லவ்குஷ் மிஸ்ரா போன்ற ஊழியர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில், மாட்டு சாண குவியலுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த லட்சக்கணக்கான ரூபாய் ரொக்கம் மற்றும் தங்கம் உட்பட இதுவரை சுமார் ரூ.2 கோடி வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தொடர்ந்து இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.