;
Athirady Tamil News

காலாவதியான சீனி கலப்படம் ; 42 இலட்சம் கிலோ சீனி பறிமுதல்

0

காலாவதியான சீனியை புதிய சீனியுடன் கலந்து மறுபொதியிடல் செய்து குறைந்த விலைக்கு சந்தையில் விநியோகித்து வந்ததாகக் கூறப்படும் பாரிய சீனி இறக்குமதியாளர் ஒருவருக்குச் சொந்தமான களஞ்சியசாலையை நுகர்வோர் விவகார அதிகார சபை (CAA) மற்றும் வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினர் இணைந்து நேற்று (07) முற்றுகையிட்டு சீல் வைத்துள்ளனர்.

கம்பஹா மாவட்டத்தின் களனி – பேலியகொட பகுதியில் அமைந்துள்ள இலங்கையின் முன்னணி சீனி இறக்குமதியாளர் ஒருவருக்குச் சொந்தமான களஞ்சிய வளாகத்திலேயே இந்த மோசடி இடம்பெற்றதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டு காலாவதியான சீனி இருப்புகள், காலாவதியாகாத புதிய சீனியுடன் கலந்து புதிய பொதிகளில் அடைக்கப்பட்டு சந்தைக்கு விநியோகிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இவ்வாறு கலப்படம் செய்யப்பட்ட சீனி, தற்போதைய சந்தை விலையை விட குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சோதனையின்போது தலா 50 கிலோகிராம் எடையுடைய சுமார் 85 ஆயிரம் சீனி மூடைகள் களஞ்சியசாலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது.

இதன் அடிப்படையில், மொத்தமாக 42 இலட்சம் கிலோகிராம் (4.2 மில்லியன் கிலோ) சீனியை அதிகாரிகள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தற்காலிகமாகப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் நிறைவடையும் வரை குறித்த களஞ்சிய வளாகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

பொதுமக்களின் ஆரோக்கியத்துக்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய இந்த மோசடி தொடர்பாக நுகர்வோர் விவகார அதிகார சபை மற்றும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.