;
Athirady Tamil News

நுவரெலியா செல்வோர் முகப்பு விளக்குகளை ஒளிரச் செய்யுங்கள்!

0

நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, பல பகுதிகள் அடர்ந்த பனிமூட்டத்தால் சூழப்பட்டுள்ளன. இதனால் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நேற்று (10) அதிகாலை முதல் நுவரெலியா நகரம், அம்பேவெல, பட்டிப்பொல, ஹக்கல, தலவாக்கலை, லிந்துலை, கொட்டகலை, அக்கரப்பத்தனை மற்றும் ஹட்டன் – நுவரெலியா, ஹட்டன் – கொழும்பு ஆகிய பிரதான வீதிகளில் அமைந்துள்ள உயர் பிரதேசங்களில் கடும் பனிமூட்டம் நிலவியது.

சில இடங்களில் பார்வைத் தூரம் 20 முதல் 30 மீற்றர் வரை மட்டுமே காணப்பட்டதால், பிரதான வீதிகளில் பயணித்த வாகனங்கள் மிகவும் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டன.

விபத்துகளைத் தவிர்ப்பதற்காக, பிரதான வீதிகளில் பயணிக்கும் போது வாகனங்களின் முகப்பு விளக்குகளை ஒளிரச் செய்தும், எதிரே வரும் வாகனங்களை அடையாளம் காண ஒளி சமிக்ஞைகளைப் பயன்படுத்தியும் மெதுவாகப் பயணிக்குமாறு பொலிஸார் சாரதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் தற்போது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தருவதால், சுற்றுலாப் பயணிகளும் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றி வாகனங்களைச் செலுத்துமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

வானிலை சீரற்ற தன்மை மேலும் தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால், அத்தியாவசியத் தேவையின்றி அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் நீண்ட தூரப் பயணங்களைத் தவிர்க்குமாறும் போக்குவரத்து பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

ஒவ்வொரு சாரதியும் போக்குவரத்து விதிகளை முழுமையாகக் கடைப்பிடித்துப் பொறுப்புணர்வுடன் செயல்படுவது அவசியம் என பொலிஸார் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.