சிறைச்சாலைகளில் அடுத்தடுத்து மோதல் ; உயிரிழந்த கைதிகளின் பிரேத பரிசோதனை தொடர்பில் வெளியான தகவல்
நீர்கொழும்பு – தளுபொத, பல்லன்சேன சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தையடுத்து, நீர்கொழும்பு பிரதான நீதவான் ஷிலானி பெரேரா சிறைச்சாலையைப் பார்வையிட்டுள்ளார்.
அத்துடன், நீர்கொழும்பு குற்ற விசாரணை அதிகாரிகள் சிறைச்சாலைக்குச் சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, புதிய மெகசின் சிறைச்சாலையில் உயிரிழந்த கைதியின் பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளதுடன், குருவிட்ட சிறைச்சாலையில் உயிரிழந்த இரு கைதிகளின் பிரேத பரிசோதனைகள் நாளை மறுதினம் நடத்தப்படவுள்ளன.
அமைதியின்மை மற்றும் மோதல்கள் பதிவான குருவிட்ட மற்றும் பல்லன்சேன ஆகிய இரு சிறைச்சாலைகள் உட்பட நாட்டின் அனைத்துச் சிறைச்சாலைகளின் பாதுகாப்பும் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, பொலிஸார் , பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படையினர் தொடர்ந்தும் சிறைச்சாலைகளின் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.