பணத்தை வைப்பிலிட்டு ஏமாற வேண்டாம்..! இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை
வனவியல் மற்றும் விவசாய திட்டங்கள் என்ற போர்வையில் செயல்படும் சட்டவிரோத பிரமிட் திட்டங்களால் ஏமாற வேண்டாம் என இலங்கை மத்திய வங்கி எச்சரித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி நேற்று முன் தினம் (29) இந்த சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி சிறப்பு விசாரணை
விவசாய மற்றும் வனவியல் திட்டங்களுக்குப் பணத்தைப் பயன்படுத்துவதாகக் கூறி, பொதுமக்களிடமிருந்து சட்டவிரோதமாக வைப்புகளைப் பெறும் பிரமிட் வகை நிறுவனங்களுக்கு எதிராக இலங்கை மத்திய வங்கி சிறப்பு விசாரணைகளையும் சட்ட நடவடிக்கைகளையும் தொடங்கியுள்ளது.
சில நிறுவனங்கள் ஆண்டுக்கு கிட்டத்தட்ட 100% அதிக வருமானத்தை வழங்குவதாக உறுதியளித்தாலும், விவசாய அல்லது வனவியல் வணிகத்திலிருந்து இத்தகைய அதிக இலாபத்தை வழங்குவது முற்றிலும் சாத்தியமற்றது என்று மத்திய வங்கி சுட்டிக்காட்டுகின்றது.
இதில் புதிய வைப்பாளர்களின் பணம் பழைய வைப்பாளர்களுக்குப் பலன்களை வழங்கப் பயன்படுத்தப்படுகின்றது.
புதிய வைப்பாளர்களின் எண்ணிக்கை குறையும்போது, இந்த பிரமிட் திட்டம் சரிந்து இறுதியில் பெரும்பாலான வைப்பாளர்கள் தங்களது வைப்பு பணத்தைக்கூட இழக்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களை மேலும் ஈர்ப்பதற்காக, சமூக ஊடகங்கள் மூலமான விளம்பர நடவடிக்கைகள் கிட்டத்தட்ட 100% அதிகரித்துள்ளன.
வைப்புத்தொகைகள் மோசடி
பொதுமக்களிடமிருந்து பெறப்படும் இந்த வைப்புத்தொகைகள், பணத்தைப் பெருக்குவதற்கு மட்டுமல்லாமல், பல்பொருள் அங்காடிகளை நடத்துதல், புதிய செய்தித்தாள்களைத் தொடங்குதல், சுற்றுலா வணிகங்களை நடத்துதல் மற்றும் இசை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தல் போன்ற பிற நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.
வைப்புத்தொகைதாரர்களின் பணத்தை பயன்படுத்தி, இந்த ஒழுங்கமைக்கப்பட்ட மோசடிக் கும்பல்களுக்காக பரிசுகளும் நிதியுதவிகளும் வழங்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
எனவே மரியாதைக்குரிய கலைஞர்கள் இதுபோன்ற முறைகேடான பணத்தையும் பரிசுகளையும் நிராகரிக்குமாறு மத்திய வங்கி கேட்டுக்கொள்கின்றது.
மேலும், குறிப்பிட்ட நிதிகளைப் பெறுவதன் மூலம் இதுபோன்ற சட்டவிரோத பிரமிட் திட்டங்களின் ஊக்குவிப்பிற்கு அவர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரவளிக்கக் கூடாது என்றும், ஊடக நிறுவனங்களும் சமூக ஊடக ஆர்வலர்களும் பொதுமக்களை ஏமாற்றும் இதுபோன்ற மோசடிகளிலிருந்து அவர்களைப் பாதுகாக்க பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.
முக்கிய அறிவுறுத்தல்
மத்திய வங்கியின் அனுமதியின்றி சட்டவிரோதமாகப் பொதுமக்களிடமிருந்து வைப்புத்தொகைகளைப் பெறும் நிறுவனங்களின் கணக்குகளைத் தடை செய்யவும், தொடர்புடைய சட்டத்தின் விதிகளுக்கு இணங்க சட்ட நடவடிக்கை எடுக்கவும் மத்திய வங்கி நடவடிக்கை எடுத்து வருகின்றது.
சம்பந்தப்பட்ட நிறுவனங்களை பற்றிய தகவல்களை அறிந்தவர்கள் அல்லது வைப்புத்தொகை செய்தவர்கள் முன்வந்து, மத்திய வங்கிக்கு தேவையான தகவல்களை வழங்கி உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.
மத்திய வங்கி எந்தவொரு விவசாய அல்லது வனத்துறை வணிகத்தையும் தடை செய்யவில்லை என்றும், யார் வேண்டுமானாலும் சட்டப்பூர்வமாக நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என தெரிவித்துள்ளது.
எனவே, அதிக இலாபம் தருவதாகக் கூறும் இதுபோன்ற சட்டவிரோத வைப்புத்தொகை வணிகங்களால் ஏமாற வேண்டாம் என்று மத்திய வங்கி பொதுமக்களை கேட்டுக்கொள்கின்றது.