போதைப்பொருள் கடத்தலில் இலங்கை கொலம்பியாவாக மாறாது!
இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம், நாட்டை ஆசியாவின் போதைப்பொருள் மையமாக மாறுவதைத் தடுப்பதற்கான தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இலத்தீன் அமெரிக்காவின் கொலம்பியா போன்று இலங்கை மாறிவிடக் கூடாது என்பதில் தற்போதைய அரசு உறுதியான சட்ட மற்றும் கள நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
இலங்கையை ஒரு சர்வதேச போதைப்பொருள் போக்குவரத்து மையமாக (Transit Hub) பயன்படுத்துவதைத் தடுப்பதிலும், உள்நாட்டில் இளைஞர்களைப் பாதுகாப்பதிலும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அரசாங்கம் கடுமையான பொலிஸ் மற்றும் சட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது.
முந்தைய காலங்களில் அரசியல் மற்றும் பாதுகாப்புத் துறையினரின் ஆதரவோடு இயங்கிய போதைப்பொருள் வலைப்பின்னல்களை முற்றாக ஒழிப்பதே தங்களின் நோக்கம் என NPP அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. அதனடிப்படையில், இலங்கையில் இலத்தீன் அமெரிக்க நாடுகளைப் போன்ற “நார்கோ-அரசியல்” (Narco-politics) மற்றும் நிழல் உலக சாம்ராஜ்யமாக உருவாவதைத் தடுக்க, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தற்போதைய NPP அரசாங்கம் கடுமையான சட்ட அமுலாக்கங்களையும் கூட்டு நடவடிக்கைகளையும் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.
நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஊழல் ஒழிப்பு ஆகியவை வெறும் பிரகடனங்களால் மட்டும் சாத்தியமாகாது. அவை உறுதியான சட்ட அமுலாக்கம் மற்றும் அரசியல் நேர்மை மீதே முழுமையாகத் தங்கியுள்ளது. கொள்கை விளக்கங்களை விட நடைமுறைச் செயல்களே இங்கு முக்கிய பங்கு வகிக்கின்றன.
சிங்கப்பூர், டென்மார்க் போன்ற நாடுகள் ஊழலற்ற மற்றும் பாதுகாப்பான நாடுகளாக மாறுவதற்குக் காரணம், அவர்களிடம் வெறும் கொள்கைகள் மட்டுமல்ல; மாறாக, சட்டத்தை யாருக்கும் அஞ்சாமல் நடு நிலையாகவும் கடுமையாகவும் நடைமுறைப்படுத்திய ஆட்சியாளர்களின் உறுதியான அரசியல் விருப்பமே ஆகும்.
அந்த வகையில், இடதுசாரி அரசியல் கொள்கையைக் கொண்ட அரசாங்கங்கள் மூலமே நாட்டின் பாதுகாப்பு, பொது ஒழுங்கு மற்றும் ஊழல் ஒழிப்பு போன்றவற்றை முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து சாதிக்க முடியும் என்ற பல்வேறுபட்ட கருத்துகள் உலக வரலாற்றிலும் அரசியல் விவாதங்களிலும் முன்வைக்கப்பட்டுள்ளன.
இடதுசாரிக் கொள்கைகள் பொதுவாக சமூகக் கட்டுப்பாடு மற்றும் சட்ட அமுலாக்கத்தில் அரசின் நேரடிப் பங்களிப்பை வலியுறுத்துகின்றன. இது போதைப்பொருள் கடத்தல் மற்றும் திட்டமிடப்பட்ட குற்றங்களைக் கட்டுப்படுத்த அதிகம் உதவுகின்றது.
வறுமை மற்றும் சமூகத் தேவைகளுக்கான சமத்துவமின்மையே குற்றச்செயல்களுக்கு அடிப்படைக் காரணம் என்று இடதுசாரி கொள்கைத்துவம் கருதுகிறது. கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்பை அரசு உறுதி செய்யும்போது குற்றங்கள் இயல்பாகவே குறையும் என்பது இடதுசாரி கொள்கைத் தத்துவமாகும்.
இலஞ்ச ஊழல்களைத் தடுக்க அதிகாரத்தையும், பெரு நிறுவனங்களின் தன்னிச்சையான போக்கையும் அரசு தனது கடுமையான கண்காணிப்பின் கீழ் வைத்திருப்பது மிக முக்கியமான விடயமாக நம்பப்படுகிறது. அந்த வகையில், இலங்கையின் தற்போதைய தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம், நாட்டின் பொருளாதார மற்றும் நிர்வாகக் கட்டமைப்பை சீரமைக்க பெருநிறுவனங்களின் ஏகபோகக் கட்டுப்பாட்டைக் குறைப்பதையும் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதையும் தனது முதலாவது கொள்கைசார் அணுகுமுறையாகக் கொண்டுள்ளது.
இடதுசாரி மற்றும் மக்கள் நலன்சார்ந்த (Populist) பின்னணியைக் கொண்ட தற்போதைய NPP அரசாங்கம், நுகர்வோர் பாதுகாப்பு, சந்தைப்போட்டி மற்றும் ஊழலற்ற நிர்வாகத்தை உருவாக்குவதில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றமை சர்வதேச பார்வையில் அதிகமான சாதக விளைவுகளை அரசாங்கத்தின் பக்கம் திருப்பியுள்ளது.
கடந்த காலங்களில் செல்வாக்கு மிக்கவர்கள் சட்டத்திலிருந்து தப்பிய நிலை மாறி, தற்போது அனைவருக்கும் சமமாக சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக மக்கள் நம்புகின்றனர். முக்கிய அரசியல்வாதிகள் மற்றும் உயரதிகாரிகளுக்கு எதிரான பழைய விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருப்பது அரசாங்கத்தின் துணிச்சலைக் காட்டுவதாகக் கருதுகின்றனர்.
மேலும், NPP அரசாங்கம் காவல்துறை மற்றும் நீதித்துறையை அரசியல் அழுத்தங்களின்றிச் சுதந்திரமாகச் செயற்பட அனுமதிக்கிறது என்ற கருத்து மக்களிடம் சென்று சேர்ந்துள்ளது என்பது அரசியல் ரீதியான ஒரு அவதானிப்பாக மாறியுள்ளது. இந்த நிலைப்பாடு நாட்டின் நிர்வாக முறை மீது மக்களின் நம்பிக்கையை அதிகரிக்க வழிவகுத்துள்ளது.
முன்னாள் இராணுவத் தலைவர்கள், பொலிஸ் மா அதிபர்கள், அமைச்சுகளின் செயலாளர்கள், கடந்த கால ஜனாதிபதிகள், அமைச்சர்கள் என எவ்வித தராதரமும் பாராமல் சட்டத்தை மீறியோருக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்கும் துணிவும், தைரியமும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும், அவருடைய NPP அரசாங்கத்திற்கும் இருக்கின்றது என்பது உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் மேலோங்கியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்னர் சிறைச்சாலைகளை மூடும் ஒரு இளம் தலைமுறையை நாம் உருவாக்க வேண்டும் என்று JVPயின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்திருந்தார். அதாவது குற்றவாளிகளை தண்டிப்பதை விட, குற்றங்கள் நிகழாத ஒரு சமூகப் பின்னணியை உருவாக்குவதே நாட்டுக்கு தேவையான இலக்காக இருக்க வேண்டும். வறுமை, கல்வியறிவின்மை மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வு போன்றவைகள் குற்றங்களை செய்வதற்கு வழிவகுக்கும் காரணிகளாக உள்ளது.
சிறைச்சாலைகளை மூடுவது என்பது சட்டத்தை தளர்த்துவது அல்ல, மாறாக ஒழுக்கமும் நெறியும் மிக்க ஒரு புதிய தலைமுறையை கல்வியின் மூலம் உருவாக்குவதாகும். வெறும் ஏட்டுக்கல்வியோடு நின்றுவிடாமல், மனித நேயம் மற்றும் சட்டத்தை மதிக்கும் பண்புகளை வளர்க்கும் கல்வி முறைக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதை இது காட்டுகிறது.
இடதுசாரி கொள்கைத் திட்டமிடலில் இது ஒரு குறுகிய கால அரசியல் முழக்கம் அல்ல, மாறாக பல தசாப்த கால சமூக மாற்றத்திற்கான ஒரு நீண்ட கால திட்டமாகும். இவ்வாறான ஒரு கொள்கைப் பிரகடனம், இலங்கையை சர்வதேச மட்டத்தில் அமைதியான மற்றும் பாதுகாப்பான ஒரு நாடாக மாற்றுவதற்கான தேசிய மக்கள் சக்தியின் அரசியல் பார்வையை பிரதிபலிக்கிறது.
கியூபா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் தங்களின் சோசலிச அரசியல் கொள்கைகள் மூலம் கல்வி மற்றும் சமூக சமத்துவத்தில் முன்னேற்றம் அடைந்துள்ள நாடுகளாக உள்ளன. அத்தோடு, இரண்டு நாடுகளுமே மார்க்சிச -லெனினிச ஒற்றைக் கட்சி ஆட்சியைப் பின்பற்றுகின்றன.
இரண்டு நாடுகளுமே தங்களது குடிமக்களுக்கு ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வி வரை இலவசமாகவோ அல்லது மிகக் குறைந்த செலவிலோ வழங்குகின்றன. உலகத்தரம் வாய்ந்த இலவச மருத்துவக் கட்டமைப்பு மற்றும் சர்வதேச மருத்துவ உதவிகளுக்காக உலகளவில் புகழ் பெற்றுள்ள நாடுகளில் முக்கியமான இடத்தில் கியூபா உள்ளது.
வியட்நாமில் போதைப்பொருள் கடத்தலுக்கு மரண தண்டனை வரை கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன. அங்கே கடுமையான அரசாங்கக் கண்காணிப்பு காரணமாக தெருக் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் புழக்கம் பல அண்டை நாடுகளை விடக் மிகக் குறைவாகவே உள்ளது.
ஆகவே, வலுவான அரசியல் கொள்கைகள், இலக்கை நோக்கிய சீர்திருத்தங்கள் மூலம் கல்வி மற்றும் சமூக நலன்களில் இந்த நாடுகள் பெரும் சாதனையாளர்களாக பார்க்கப்படுகின்றன. ஊழல் மற்றும் போதைப்பொருள் போன்ற சமூகச் சீர்கேடுகள் “க்ளீன்” (CLEAN) செய்யப்பட்டுள்ள நாடுகளாகவும் சர்வதேச அளவில் பேசப்படுகின்றன.
அந்த வகையில் எமது நாட்டிலும் NPP அரசாங்கம் ஆட்சியை பொறுப்பேற்றதில் இருந்து, கடந்த 9 மாத காலப்பகுதியில் மட்டும் நாடு தழுவிய ரீதியில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்புகளில் 239,384 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 995 பாரிய போதைப்பொருள் கடத்தல்காரர்கள் அடங்குவதோடு, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
போதைப்பொருள் வர்த்தகம் மூலம் சட்டவிரோதமாக சம்பாதித்த சொத்துக்கள் தொடர்பாக 378 பேருக்கு எதிராக சொத்து விபர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, தற்போதைய நிர்வாகத்தின் கீழ் 10 தொன்னுக்கும் அதிகமான ஹெரோயின், ஐஸ், கொக்கெய்ன் மற்றும் மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
வெளிநாடுகளில் தங்கியிருந்து போதைப்பொருள் வலையமைப்பை இயக்கி வந்த 58க்கும் மேற்பட்ட முக்கிய குற்றவாளிகள் சர்வதேச நாடுகளின் உதவியுடன் (பாகிஸ்தான், இந்தோனேசியா, நேபாளம் போன்ற நாடுகள்) கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அரசியல் பாதுகாப்பை தற்போதைய அரசாங்கம் முற்றாக நீக்கியுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கடத்தலுடன் தொடர்புடைய எதிர்க்கட்சி மற்றும் பிற அரசியல்வாதிகளை இலக்கு வைத்து கைது நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இலங்கை அமைந்துள்ள கடல்சார் அமைவிடம் காரணமாக, ஆசியாவின் முக்கிய கடத்தல் பாதையாக இலங்கை மாறுவதைத் தடுக்க, இந்தியாவின் முழுமையான பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை ஆதரவையும் தற்போதைய அரசாங்கம் கோரியுள்ளது. போதைப் பொருள் கடத்தலுக்கு உடந்தையாக இருக்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கையும் விடுத்துள்ளார். சட்ட அமுலாக்கத் துறையை குற்றவாளிகளின் பிடியிலிருந்து விடுவிப்பதே தங்களின் முதல் இலக்கு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து நாட்டைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட அதிகாரிகளின் துணிச்சலான சேவையையும், அர்ப்பணிப்பையும் பாராட்டி அவர்களின் உத்வேகத்தை வளர்க்கும் முகமாக அண்மையில் பொலிஸாருக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் சன்மானங்களும் பரிசில்களும் வழங்கி கெளரவிக்கவும் ஜனாதிபதியும் அரசும் தவறவில்லை.
ஆகவே, இலத்தீன் அமெரிக்கவின் கொலம்பியாவானது பல தசாப்தங்களாக போதைப்பொருள் மாஃபியாக்களின் பிடியிலும், அவர்களின் பண பலத்தினாலும் ஆட்டங் கண்டுள்ளது என்பது வரலாற்று ரீதியாக நிரூபிக்கப்பட்ட ஒன்றாகும். கொலம்பியாவின் மிக உயர்ந்த பதவியான ஜனாதிபதி நாற்காலியைத் தீர்மானிப்பதில் கூட போதைப்பொருள் கடத்தல் கும்பல்களின் தலையீடு இருந்தமை பலமுறை அம்பலமாகியுள்ளது.
போதைப்பொருள் வர்த்தகர்கள் நாட்டின் நீதித்துறை, காவல்துறை மற்றும் அரசியல்வாதிகளைத் தங்களது பண பலத்தாலும், துப்பாக்கிகளாலும் கட்டுப்படுத்தினர். தங்களுக்கு எதிராகச் செயல்பட்ட ஜனாதிபதி வேட்பாளர்கள், நீதிபதிகள் மற்றும் அமைச்சர்களை அவர்கள் பகிரங்கமாகப் படுகொலை செய்தனர். இதனால், உண்மையான மக்களின் விருப்பத்தின் பேரில் நேர்மையான ஆட்சிகள் அமைவது அங்கு மிகவும் அரிதான ஒன்றாகவே இருந்தது.
இதன் காரணமாகவே, கொலம்பிய அரசியல் வரலாற்றை ஆய்வாளர்கள் பெரும்பாலும் .”நார்கோ-ஜனநாயகம்”
(Narco-democracy) அல்லது போதைப்பொருள் மாஃபியாக்களால் நிர்வகிக்கப்பட்ட அரசாங்கம் என்றே குறிப்பிடுகின்றனர்.
அதைபோல இலங்கையும் அதன் அமைவிடம் காரணமாக போதைப்பொருள் கடத்தல்காரர்களின் கைகளில் அகப்பட்டு இன்னொரு கொலம்பியாவாக மாறும் அபாயத்திலிருந்து தடுக்கப்பட்டிருக்கிறது. காரணம் அதிர்ஷ்டவசமாக இந்த நாடு தற்போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கைகளில் இருக்கின்றது. இது இந்த நாட்டு மக்களுக்கு கிடைத்துள்ள வரப்பிரசாரமாகும்.
இலங்கையின் இறையாண்மையைப் பாதுகாக்கவும், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டவும், ஊழலை ஒழிக்கவும் அவர் முன்னெடுக்கும் தீர்க்கமான நகர்வுகள் பொதுமக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என்பதே அசைக்க முடியாத உண்மையாகும்.