;
Athirady Tamil News

ரூ.104 மில்லியன் செலவில் கல்முனை சந்தாங்கேணி உள்ளக விளையாட்டு அரங்கு; நீச்சல் தடாகமும் திறப்பு

0

ரூ.104 மில்லியன் செலவில் கல்முனை சந்தாங்கேணி உள்ளக விளையாட்டு அரங்கு; நீச்சல் தடாகமும் திறப்பு

காரைதீவு, சாய்ந்தமருது, அக்கரைப்பற்று விளையாட்டு மைதானங்களை களவிஜயம் செய்தார் அமைச்சர் சுனில் குமார!
எம்.பி. ஆதம்பாவாவின் அழைப்பில் கல்முனையில் விசேட அபிவிருத்தி விழா

பாறுக் ஷிஹான்

கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் 104 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் அமைக்கப்படவுள்ள உள்ளக விளையாட்டு அரங்கின் அடுத்த கட்ட நிர்மாணப் பணிகளுக்கான ஆரம்ப நிகழ்வும், புதிதாக அமைக்கப்பட்ட நீச்சல் தடாகத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கும் நிகழ்வும் நேற்று (30) மிக விமரிசையாக இடம்பெற்றன.

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவாவின் விசேட அழைப்பின் பேரில், இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு திட்டப் பணிகளை ஆரம்பித்து வைத்ததுடன் நீச்சல் தடாகத்தையும் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வைத் தொடர்ந்து, அம்பாறை மாவட்டத்தின் விளையாட்டு உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் நோக்கில் அமைச்சர் தலைமையிலான குழுவினர் பல இடங்களுக்கும் களவிஜயங்களை மேற்கொண்டனர்.

இதன்போது, சாய்ந்தமருது பொது விளையாட்டு மைதானத்தின் எதிர்கால அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்தும், காரைதீவு சண்முகா வித்தியாலய மைதானக் காணிப் பிரச்சினை குறித்தும் கேட்டறிந்தனர். மேலும் அட்டாளச்சேனை மற்றும் அக்கரைப்பற்று பொது விளையாட்டு மைதானங்கள், அக்கரைப்பற்று மத்திய கல்லூரியின் நீச்சல் தடாகம் ஆகியவற்றுக்கும் நேரில் சென்ற அமைச்சர், அங்குள்ள குறைபாடுகளைக் கேட்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்வதாக உறுதியளித்தார்.

கல்முனையில் இடம்பெற்ற இந்த விழாவில் கல்முனை மாநகர சபை ஆணையாளர் என்.எம். நௌபீஸ், அம்பாறை மாவட்ட பொறியியலாளர் சாஹீர், கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்காவின் தலைவர் எம்.ஐ. அப்துல் அஸீஸ், மாநகர சபை அதிகாரிகள், விளையாட்டுத் துறை பிரதிநிதிகள் மற்றும் பிரஜா சக்தி அமைப்பின் தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.