காஸாவில் உள்ள பாலஸ்தீனர்களை வெளியேற்ற தயார்! – இஸ்ரேல்!
அமெரிக்கா ஒப்புதல் வழங்கினால், காஸாவில் உள்ள பாலஸ்தீனர்களை வெளியேற்ற தயார் என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கூறியுள்ளார்.
அமெரிக்கா ஒப்புதல் வழங்கினால், காஸாவில் உள்ள லட்சக்கணக்கான பாலஸ்தீனர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி வெளியேற்ற தயார் என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கூறியிருப்பது சர்வதேச அளவில் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
இஸ்ரேலிய செய்தி நிறுவனங்கள் நேற்று (செப். 2) நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் காட்ஸ், இறுதியில் இந்த இடம்பெயர்வு இல்லாமல் காஸாவுக்கு உண்மையான தீர்வு எதுவும் இல்லை எனக் கூறியுள்ளார்.
இதுபற்றி, அவர் கூறுகையில்,
“பாலஸ்தீனர்களை வெளியேற்ற கடல் வழியாகவோ, வான் வழியாகவோ அல்லது சாத்தியமான அனைத்து வழிகள் மூலமாகவோ வெளியேற்ற இஸ்ரேலிய அரசு திட்டமிட்டுத் தயாராக இருக்கிறது.
காஸாவை விட்டு வெளியேறவே 80 சதவிகித பாலஸ்தீனர்கள் விரும்புகின்றனர். ஆனால், அவர்களை வெளியேற விடாமல் ஹமாஸ் படைகள் தடுக்கின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, காஸா பகுதியிலுள்ள 20 லட்சம் பாலஸ்தீனர்கள் வெளியேற வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியது சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியிருந்தது குறிப்படத்தக்கது.