;
Athirady Tamil News

முதுகு தசையை கடித்து குதறிய முதலை ; இறுதியில் இளைஞன் செய்த செயலால் வியப்பு

0

பொல்பித்திகம, மதகல்லை பகுதியைச் சேர்ந்த 26 வயதான இளைஞர் ஒருவர், ஹல்மில்லகொல்ல பகுதியில் உள்ள குளத்தில் குளித்துக் கொண்டிருந்தபோது முதலையின் தாக்குதலுக்கு இலக்காகி பலத்த காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.

முதலையின் தாக்குதலில் கை, கழுத்து மற்றும் முதுகுப் பகுதிகளில் பலத்த காயமடைந்த இளைஞர், தற்போது குருநாகல் போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக சிகிச்சை
மாலை வேளையில் குளத்தில் குளித்துவிட்டு கரைக்கு வந்த இளைஞர், தனது சோப்பை எடுப்பதற்காக மீண்டும் குளத்தின் படிகளில் இறங்கியுள்ளார். இதன்போது, நீரில் இருந்த முதலை அவரது காலை கவ்வி நீருக்குள் இழுத்துள்ளது.

குளத்தின் படியை இறுக்கமாகப் பற்றிக்கொண்ட இளைஞர், முதலையின் பிடியில் இருந்து தப்பிக்க போராடியபோது, முதலை அவரது தோள்பட்டையையும் கவ்வியுள்ளது.

இதையடுத்து, தைரியமாகப் போராடிய அவர், தனது கையை முதலையின் வாய்க்குள் செலுத்தி அதன் பிடியில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு கரைக்கு ஏறியுள்ளார்.

முதலையின் தாக்குதலில் முதுகில் சதைப்பகுதி துண்டிக்கப்பட்ட போதிலும், சுயநினைவுடன் இருந்த அவர் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

பின்னர் பொல்பித்திகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதேவேளை, சுமார் 13 அடி நீளமுள்ள பெரிய முதலை ஒன்று குறித்த குளத்தைச் சுற்றியுள்ள பகுதியில் அடிக்கடி நடமாடுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், அந்த முதலை அருகிலுள்ள குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்து நாய்கள் உள்ளிட்ட செல்லப்பிராணிகளை வேட்டையாடி வருவதாகவும் மக்கள் கூறுகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.