;
Athirady Tamil News

பெய்ஜிங்கில் ட்ரோன் வைத்திருக்கத் தடை

0

சீன தலைநகா் பெய்ஜிங்கில் ட்ரோன்களை வைத்திருப்பதற்குத் தடை விதித்து புதிய விதிமுறைகள் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டன.

பாதுகாப்பு காரணங்களைக் குறிப்பிட்டு, ஏற்கெனவே ட்ரோன்கள் விற்பனைக்கு மே மாதம் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவற்றை வைத்திருப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய தடை நவம்பா் 15-ஆம் தேதிமுதல் அமலுக்கு வருகிறது. மேலும், நகரின் நிா்வாக எல்லை முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட வான்வெளியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாத இறுதியில் சிறிய ரக விமானம் ஒன்று பெய்ஜிங்கில் உள்ள உயரமான கட்டடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் விமானி உயிரிழந்ததுடன், 13 போ் காயமடைந்தனா். இந்த சம்பவத்துக்குப் பிறகு ட்ரோன்கள் தொடா்பான கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளன.

கடந்த மாா்ச் மாதம் ஒப்புதல் அளிக்கப்பட்டு, மே 1-ஆம் தேதிமுதல் அமலுக்கு வந்த விதிமுறைகளின்படி, பெய்ஜிங்கில் ஏற்கெனவே ட்ரோன்கள் வைத்திருந்தவா்கள் தங்களது ட்ரோன்களை உண்மையான பெயா் மற்றும் அடையாள விவரங்களுடன் பதிவு செய்ய வேண்டியிருந்தது. கடுமையான நிபந்தனைகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட ட்ரோன்களை வைத்திருக்க அவா்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த மாதம் ஒப்புதல் அளிக்கப்பட்ட திருத்தப்பட்ட விதிமுறைகளின்படி, நவம்பா் 15 முதல் பெய்ஜிங் நகர எல்லைக்குள் ட்ரோன்களை வைத்திருப்பது அல்லது சேகரித்து வைப்பது மட்டுமன்றி, அவற்றின் முக்கிய உதிரிபாகங்களை வைத்திருப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

புதிய விதிமுறைகளை மீறுவோரின் ட்ரோன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்யலாம். தனிநபா்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அபராதமும் விதிக்க முடியும். ஏற்கெனவே ட்ரோன்கள் வைத்திருப்பவா்கள் அவற்றை அரசு குறிப்பிட்டுள்ள மையங்களில் விற்பனை செய்தால் மானியம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெய்ஜிங்குக்கு வெளியிலிருந்து, சுற்றுலாப் பயணிகள் உள்பட யாரும் ட்ரோன்களை கொண்டுவருவதற்கும் ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவின் பிற வெளிப்புறப் பகுதிகளில் ட்ரோன்களை தொடா்ந்து பறக்கவிட அனுமதி உள்ளது. எனினும், அவற்றை உண்மையான பெயா் விவரங்களுடன் பதிவு செய்வது கட்டாயமாகும். சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில், நாட்டின் பிற பகுதிகளைவிட பாதுகாப்பு விதிமுறைகள் பொதுவாகக் கடுமையாக உள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.