;
Athirady Tamil News

க. பொ.த சாதாரண தர பாடங்களில் ஏற்படவுள்ள மாற்றம் ; வெளியான முக்கிய அறிவிப்பு

0

கல்வி பொதுத் தராதார சாதாரண தரத்திற்காக வரலாறு மற்றும் அழகியல் பாடங்கள் உட்பட 7 பாடங்களை உள்ளடக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பான உபகுழுவில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் இக்குழு அண்மையில் கூடியபோதே இத்தகவல் தெரிவிக்கப்பட்டது.

கல்விச் சீர்திருத்தங்கள்
இதன்போது 12 மற்றும் 13ஆம் தரங்களுக்கு சமூக நல்லிணக்கம், சட்டம் மற்றும் ஒழுக்கநெறி ஆகிய தொகுதிகளை (Modular) உள்ளடக்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.

இங்கு 2027ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள பொதுக் கல்விச் சீர்திருத்தங்கள் மற்றும் முன்பள்ளிக் கல்விச் சீர்திருத்தங்களின் முன்னேற்றம் குறித்துக் கலந்துரையாடப்பட்டுள்ளது.

பொதுக் கல்விச் சீர்திருத்தங்களின் ஆரம்பக் கட்டமாக 2 மற்றும் 6ஆம் தரங்களுக்குத் தேவையான செயற்பாட்டுப் புத்தகங்கள், ஆசிரியர் வழிகாட்டிகள் மற்றும் தொகுதிகள் (Modules) தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், ஆசிரியர் பயிற்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இங்கு குறிப்பிடப்பட்டது.

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் தொடர் திட்டங்கள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டதாக பாராளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.

முன்பள்ளிக் கல்வியை முறைப்படுத்துவதற்காக தேசிய முன்பள்ளிக் கொள்கையொன்று தயாரிக்கப்பட்டுள்ளதுடன், முன்பள்ளிகளைப் பதிவுசெய்தல், பாடத்திட்டங்கள் மற்றும் ஆசிரியர் வழிகாட்டிகளைத் தயாரித்தல் மற்றும் ஆசிரியர் பயிற்சித் திட்டங்களை முன்னெடுப்பது உள்ளிட்ட பணிகள் இடம்பெற்று வருவதாகவும் இங்கு மேலும் வெளிப்படுத்தப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.