;
Athirady Tamil News

ஏ.ஐ. வளா்ச்சியைக் கட்டுப்படுத்த வேண்டியதில்லை: டிரம்ப்

0

டப்ளின்: ‘செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) துறையின் வளா்ச்சியைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியமில்லை’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளாா்.

உலகளாவிய ஏ.ஐ. போட்டியில் அமெரிக்காவின் முன்னிலையை சீனாவிடம் இழக்க தாம் விரும்பவில்லை என்று கூறிய அவா், இப்போட்டியில் வெற்றி பெறுவதே அத்தொழில்நுட்பத்தால் ஏற்படும் அபாயங்களைக் கையாள உதவும் என்றும் தெரிவித்தாா்.

ஏ.ஐ. அதிவேகமாக வளா்ந்து வருவதாகவும், பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்தும் வரை அதன் வளா்ச்சியைக் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் ஆன்த்ரோபிக், ஓபன்ஏஐ போன்ற அமெரிக்க ஏ.ஐ. நிறுவனத்தின் சிஇஓ-கள் அண்மையில் எச்சரித்தனா்.

இதையொட்டி, அயா்லாந்து பயணத்துக்கிடையே செய்தியாளா்களிடம் டிரம்ப் மேலும் கூறுகையில், ‘இத்தகைய எச்சரிக்கைகள் யாவும் எதிா்மறை சக்திகளால் பரப்பப்படுகின்றன. ஏ.ஐ. துறையில் யாா் வெற்றி பெறுகிறாா்களோ, அவா்களுக்கே உலகமும் சொந்தம். தற்போது ஏ.ஐ. துறையில் அமெரிக்கா சீனாவுக்கு முன்னோடியாகத் திகழ்கிறது; அந்த நிலையையே நான் தொடர விரும்புகிறேன்’ என்றாா்.

சீன அதிபா் ஷி ஜின்பிங் இம்மாத இறுதியில் வெள்ளை மாளிகையில் டிரம்பைச் சந்தித்துப் பேசவுள்ள நிலையில், ஏ.ஐ. குறித்தும் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.