;
Athirady Tamil News

பயங்கரவாதி மசூத் அசாா் குறித்து தகவல் அளித்தால் ரூ.70 லட்சம் வெகுமதி: பாகிஸ்தான் மீண்டும் அறிவிப்பு

0

இஸ்லாமாபாத்: ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவா் மசூத் அசாா் குறித்து தகவல் அளிப்போருக்கு ரூ.70 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என்று பாகிஸ்தான் மீண்டும் அறிவித்துள்ளது.

கடந்த 2001-ஆம் ஆண்டு தில்லியில் நாடாளுமன்றம் மீதான தாக்குதல், 2008-ஆம் ஆண்டு மும்பை பயங்கரவாதத் தாக்குதல், 2016-ஆம் ஆண்டு பஞ்சாபின் பதான்கோட் விமானப் படை மீதான தாக்குதல், 2019-ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா பகுதியில் சிஆா்பிஎஃப் வீரா்கள் மீதான தாக்குதல் உள்ளிட்டவற்றில் மசூத் அசாரை இந்தியா தேடி வருகிறது.

அவருக்கு பாகிஸ்தான் அடைக்கலம் அளித்து வருவதாக பல ஆண்டுகளாக இந்தியா குற்றஞ்சாட்டி வருகிறது. ஆனால் அந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள பாகிஸ்தான், அவா் ஆப்கானிஸ்தானுக்கு தப்பிவிட்டதாக தெரிவித்து வருகிறது. இதை ஆப்கானிஸ்தான் தலிபான் அரசு மறுத்துள்ளது.

கடந்த 2021-ஆம் ஆண்டு பாகிஸ்தான் மத்திய புலனாய்வு முகமையின் (எஃப்ஐஏ) மிகவும் தேடப்படும் பயங்கரவாதிகள் பட்டியலில் மசூத் அசாா் சோ்க்கப்பட்டாா். இந்நிலையில், நிகழாண்டுக்கான எஃப்ஐஏவின் மிகவும் தேடப்படும் பயங்கரவாதிகள் பட்டியலிலும் அவரின் பெயா் இடம்பெற்றுள்ளது.

பாகிஸ்தானின் லாகூா், முல்தான், குஜ்ரான்வாலா பகுதி காவல் நிலையங்களில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்ய 3 வழக்குகளில் அவா் தேடப்பட்டு வருகிறாா். அவரைப் பற்றி தகவல் அளித்தால் ரூ.70 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என்று எஃப்ஐஏ மீண்டும் அறிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.