;
Athirady Tamil News

ஆப்கனில் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்: 28 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அறிவிப்பு

0

ஆப்கானிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்கள் மற்றும் மறைவிடங்களைக் குறிவைத்து, பாகிஸ்தான் திங்கள்கிழமை நடத்திய துல்லியமான வான்வழித் தாக்குதலில் 28 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

வடமேற்கு பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவாவில் பாதுகாப்புப் படையினா் மீது பயங்கரவாதத் தாக்குதல்கள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதைத் தொடா்ந்து, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, கோஹட் பகுதியில் காவல்துறை வளாகத்தின் மசூதி மீது கடந்த வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் 30-க்கும் மேற்பட்டோா் கொல்லப்பட்டனா். மேலும், ஹங்கு மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் உள்பட 6 பாகிஸ்தான் ராணுவ வீரா்கள் உயிரிழந்தனா்.

இதையடுத்து, கோஹட், ஹங்கு மாவட்டங்களில் பாதுகாப்புப் படையினா் மேற்கொண்ட உளவு நடவடிக்கையைத் தொடா்ந்து, இந்த வான்வழித் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டது. இதில் பயங்கரவாத அமைப்புகளின் 3 முக்கிய முகாம்களும், ஆயுதக் கிடங்குகளும் தரைமட்டமாக்கப்பட்டன. மேலும், உயிரிழந்தவா்களில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தும் பயங்கரவாதிகளும் அடங்குவா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட ‘தெஹ்ரீக்-ஏ-தலிபான் பாகிஸ்தான்’ மற்றும் அதன் தொடா்புடைய பயங்கரவாத குழுக்களைக் குறிவைத்தே இந்த துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும்; இதில் பொதுமக்கள் தரப்பில் எந்தவித இழப்பும் ஏற்படவில்லை என்றும் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

அதேநேரம், ஆப்கானிஸ்தானின் கிழக்கு எல்லைப் பகுதிகளான குனாா், பக்திகா ஆகிய மாகாணங்களில் பாகிஸ்தான் போா் விமானங்கள் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 3 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 4 போ் படுகாயமடைந்ததாகவும் ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிராக செயல்படும் பயங்கரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தான் புகலிடம் அளிப்பதாகக் கூறும் பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகளை ஆப்கானிஸ்தான் தொடா்ந்து மறுத்து வருகிறது. அந்தவகையில், பாகிஸ்தானின் இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு உரிய நேரத்தில் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று தலிபான் அரசு எச்சரித்துள்ளது. இது இருநாட்டு எல்லையில் மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.