அனோஜனுக்கான கருணை மனு – வடமாகாண ஆளுநர் ஊடாக ஜனாதிபதிக்கு
;
‘சிவராசா அனோஜனுக்கான கருணை மனு’ எனத் தலைப்பிடப்பட்டுள்ள குறித்த மனுவில்,
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் இலங்கைப் பிரஜையொருவரின் நிலைமை அவரது குடும்பத்தினருக்கும் உயிரின் பெறுமதியை மதிக்கும் அனைவருக்கும் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விடயத்தில் உடனடி மற்றும் கருணையுடனான கவனத்தை செலுத்துமாறு ஜனாதிபதியிடம் கோரப்பட்டுள்ளது.
மேலும், இலங்கை அரசாங்கம் சவூதி அரேபிய அரசாங்கத்துடனும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனும் இராஜதந்திர, சட்ட மற்றும் மனிதாபிமான வழிமுறைகளின் ஊடாகச் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு, தண்டனையைத் தளர்த்துதல், மாற்றுதல் அல்லது அனோஜனின் உயிரைப் பாதுகாப்பதற்கான சட்டபூர்வ நிவாரணத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.
கோரிக்கை மனுவைப் பெற்றுக்கொண்ட ஆளுநர், இதனை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்களுக்கு உடனடியாக அனுப்பி வைத்து, உரிய கவனத்துக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார்.