;
Athirady Tamil News

தமிழர் பகுதியில் பயங்கரம் ; குடும்ப தகராறில் மனைவி உயிரை எடுத்த கணவன்; தவிக்கும் பிள்ளைகள்

0

மட்டக்களப்பு, சந்திவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சித்தாண்டிப் பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து நேற்று வியாழக்கிழமை (24) சந்திவெளி பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் சித்தாண்டிப் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய பெண்ணாவார்.

குடும்ப தகராறு
சம்பவம் குறித்துத் தெரிய வருவதாவது, மாவடிவேம்பு பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய கூலித் தொழிலாளிக்கு உயிரிழந்த பெண்ணுக்கு திருமணம் ஆகி 10 மற்றும் 7 வயதில் மகனும் மகளும் உள்ளனர். இந்நிலையில் கூலித் தொழிலாளியான கணவன் தினமும் மதுபானம் அருந்திவிட்டு வீட்டிற்குச் சென்று மனைவியை துன்புறுத்தி வந்துள்ளார்.

சம்பவ தினமான நேற்று, மனைவியின் கையடக்கத் தொலைபேசியைக் கணவன் எடுத்துச் சென்று அதனை விற்பனை செய்து, மதுபானம் வாங்கிக் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.

இதையடுத்து கணவன் மனைவிக்கிடையே நீண்டநேரம் தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் மனவேதனையடைந்த மனைவி, வீட்டிலிருந்து வெளியேறி கணவனின் தாயாரிடம் (மாமியார்) முறையிடுவதற்காக அங்கு சென்றுள்ளார்.

அப்போது மனைவியைப் பின்தொடர்ந்து சென்ற கணவன், தனது தாயாரின் வீட்டில் வைத்து மனைவியின் கழுத்தில் கத்தியால் குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து பொலிஸ் அவசர சேவை 119 இற்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, கத்தியால் குத்திய கணவன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளதாகப் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, குறித்த நபர் கடந்த மாதம் 24 ஆம் திகதி போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டவர் என்றும், தீவிர மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலத்தை மீட்டுப் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு நீதவானின் அனுமதியைப் பெறுவதற்கான நடவடிக்கைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைச் சந்திவெளிப் பெரும் குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.