;
Athirady Tamil News

உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் 170 புதிய வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு

0
உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு (ஐப்பசி 10), தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் “சொந்தமாக இருக்க இடம் – அழகான ஒரு வாழ்க்கை” என்ற தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 5,000 வீடுகளை மக்களிடம் கையளிக்கும் தேசிய வேலைத்திட்டம் இன்று (05.10.2026) காலை 9.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக, யாழ்ப்பாண மாவட்டத்தின் 15 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 170 வீடுகள் பயனாளிகளிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.

அதன் அடிப்படையில், நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட அரியாலை தென்கிழக்கு (உதயபுரம்) மற்றும் அரியாலை கிழக்கு ஆகிய பகுதிகளில் பயனாளிகளுக்காக நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்து பயனாளிகளிடம் கையளித்தார்.

இந் நிகழ்வில் நல்லூர் பிரதேச செயலாளர் யசோதா உதயகுமார், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் யாழ்ப்பாண மாவட்ட முகாமையாளர்  யோகேஸ்வரன் தனுஷன், நல்லூர் பிரதேச சபை உறுப்பினர்  சிவகுமார் உள்ளிட்ட கிராம மட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மேலும், யாழ்ப்பாண மாவட்டத்தில் சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவில் 22 வீடுகளும், கோப்பாயில் 18 வீடுகளும், நல்லூரில் 17 வீடுகளும், கரவெட்டி மற்றும் பருத்தித்துறையில் தலா 14 வீடுகளும், உடுவில் மற்றும் தெல்லிப்பழையில் தலா 12 வீடுகளும், சண்டிலிப்பாயில் 11 வீடுகளும் யாழ்ப்பாணம், சங்கானை மற்றும் மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவுகளில் தலா 10 வீடுகளும், வேலணையில் 9 வீடுகளும், ஊர்காவற்றுறையில் 8 வீடுகளும், காரைநகரில் 2 வீடுகளும், நெடுந்தீவில் ஒரு வீடும் என மொத்தம் 170 வீடுகள் பூர்த்தி செய்யப்பட்டு மக்களிடம் அதிதிகளால் கையளிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

வீடற்ற மற்றும் போதிய வீட்டு வசதிகளற்ற குடும்பங்களுக்கு பாதுகாப்பானதும் கௌரவமானதுமான வாழ்விடத்தை வழங்கி, அவர்களின் வாழ்வில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும் நோக்கில் இவ்வீடமைப்புத் திட்டம் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.