;
Athirady Tamil News

சவுதி விமான நிலையம் மீது ஹவுதி தாக்குதல்; இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கண்டனம்

0

ஜெருசலேம்,

சவுதி விமான நிலையம் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலுக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஏமன் உள்நாட்டுப்போர்

ஏமனில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த உள்நாட்டுப்போரில் அரசுப்படையினருக்கு சவுதி அரேபியாவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆதரவு அளித்து வருகின்றன.

ஈரான், சவுதி அரேபியா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் ஏமனில் இரு நாடுகளும் மறைமுக மோதலில் ஈடுபட்டு வருகின்றன.

இதனிடையே, ஏமனில் உள்நாட்டுப்போர் கடந்த சில வாரங்களாக தீவிரமடைந்து வருகிறது. அரசுப்படையினரும், ஹவுதி கிளர்ச்சியாளர்களும் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மோதலின்போது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அவ்வப்போது சவுதி அரேபியா மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

சவுதி விமான நிலையம் மீது தொடர் தாக்குதல்

அந்த வகையில் கடந்த சில நாட்களாக சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் கலீத் சர்வதேச விமான நிலையம் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

அதன்படி, கடந்த 7ம் தேதி நடந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 8 பேர் படுகாயமடைந்தனர். இதனை தொடர்ந்து 8ம் தேதி நடந்த தாக்குதலில் சவுதி அரேபியாவை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, 10ம் தேதி நடந்த தாக்குதலில் இந்தியர் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். மேலும், நேற்று நடந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். இதன் மூலம் சவுதி விமான நிலையம் மீது கடந்த சில நாட்களாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் மொத்தம் 18 பேர் உயிரிழந்தனர்.

நெதன்யாகு கண்டனம்

இந்நிலையில், சவுதி அரேபியா விமான நிலையம் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நெதன்யாகு வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

ரியாத்தில் உள்ள கிங் கலீத் சர்வதேச விமான நிலையத்தில் 12 பேர் உயிரிழப்புக்கும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்ததற்கும் காரணமான பயங்கரவாத தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன்.

தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இஸ்ரேலின் சார்பில் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் முழுமையாக குணமடைய பிரார்த்திக்கிறேன்.

அப்பாவி மக்களை குறிவைத்து அவர்களிடம் பயம் மற்றும் நிலையற்றத்தன்மையை உருவாக்குவதே பயங்கரவாதத்தின் நோக்கமாக உள்ளது. அதை நாம் எதிர்கொள்ள வேண்டும்.

அச்சுறுத்தல்களுக்கு எதிராக ஒன்றுபட்டு நின்று, மக்களை பாதுகாத்து, பிராந்தியத்தின் அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பு, ஒத்துழைப்பு மற்றும் செழிப்பு நிறைந்த எதிர்காலத்தை உருவாக்கும் ஒரு வலிமையான மத்திய கிழக்கை இஸ்ரேல் எதிர்நோக்கியுள்ளது.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.