புங்குடுதீவில் குடிநீர் விநியோகத்தில் சீர்கேடு!
புங்குடுதீவில் குடிநீர் விநியோகத்தில் சீர்கேடு!
புங்குடுதீவு பிரதேசத்திலுள்ள கிராமங்களுக்கு நீர் விநியோகம் தாமதம் – மக்கள் விசனம்!!
………
தீவுப்பகுதியில் நன்னீர் தேவைப்பாடு மிக அதிகமாக காணப்படுகின்ற புங்குடுதீவு பிரதேசத்தின் பிரதான வீதிகளில் எட்டு வருடங்களுக்கு முன்பே நீர்க்குழாய்கள் அமைக்கப்பட்டபோதிலும் பெரும்பாலான வீடுகளுக்கு இதுவரையும் நீர் விநியோகம் மேற்கொள்ளப்படவில்லையென்றும் ஆரம்பத்திலேயே பதிவு செய்தவர்களுக்கு விநியோகிக்கப்படாமல் அண்மைக்காலத்தில் பதிவு செய்த சிலருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும் இதன் பின்னணியில் அரசியல் தலையீடுகள் மற்றும் பணப்பரிமாற்றங்கள் இருப்பதாக பொதுமக்கள் சந்தேகப்படுவதாகவும் அறியக்கிடைத்துள்ளதாக சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் ( சூழகம் ) ஒருங்கிணைப்பாளர் திரு. கருணாகரன் குணாளன் தெரிவித்துள்ளார்.
அதேபோன்று புங்குடுதீவில் உள்ளக வீதிகள் ஊடாக கிராம மக்களுக்கு தாளையடி குடிநீரை விநியோகிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக, மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
யாழ். குடாநாட்டின் குடிநீர்த் தேவையை நிவர்த்தி செய்யும் நோக்கில், மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக செயற்பட்ட காலத்தில் முன்மொழியப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்து வரும் திட்டமே வடமராட்சி தாளையடி கடல்நீர் சுத்திகரிப்பு திட்டமாகும்.
குறிப்பாக தீவகப் பகுதிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் திட்டமிடப்பட்டு யாழ்ப்பாணம் நோக்கி முன்னெடுக்கப்பட்ட போதும், இந்தத் திட்டத்தின் மூலம், புங்குடுதீவு பிரதேசத்தில் வாழும் மக்கள் குடிநீரை பெற்றுக்கொள்வதில் தொடர்ந்தும் தாமதம் நிலவி வருவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
புங்குடுதீவின்
பிரதான வீதிகளில் குறித்த குடிநீர் திட்டத்துக்கான குழாய் இணைப்புகள் பல ஆண்டுகளுக்கு முன்பே காணப்படுகின்ற போதிலும்,நீரை விநியோகிப்பதற்கான உள்ளகக் குழாய் இணைப்புப் பணிகள் உரிய முறையில் முன்னெடுக்கப்படவில்லை எனவும் மக்கள் குற்றஞ்சாட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.
பல மாதங்களுக்கு முன்பே தீவகத்தின் சில பகுதிகளுக்கு நீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்ட போதிலும் புங்குடுதீவு பிரதேசம் முற்றாக புறக்கணிக்கப்பட்டதோடு சாட்டி குடிநீரை புங்குடுதீவு மக்கள் பௌசர் ஊடாக பணம் கொடுத்து பெற்றுக்கொள்வதையும் சிலர் தடுப்பதாகவும் கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற தீவகம் தெற்கு பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சூழகம் அமைப்பின் செயலாளர் திரு. கருணாகரன் நாவலன் காட்டமாக உரையாற்றியிருந்தார்.
குறிப்பாக 2023 ம் ஆண்டு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினருடன் இணைந்து சூழகம் அமைப்பினர் புங்கு டுதீவு அம்பலவாணர் அரங்கில் தீவுப்பகுதியில் விரைவாக தாளையடி குடிநீர் விநியோகத்திட்டத்தினை மேற்கொள்வது தொடர்பாக மாபெரும் கருத்தரங்கு நிகழ்வொன்றினை நடாத்தியிருந்தனர். அதற்கான நிதிச்செலவாக திரு. கருணாகரன் நாவலன் அவர்கள் எழுபத்தைந்தாயிரம் ( 75000) ரூபா நிதியை வழங்கியிருந்தார்.
அவ்வாறிருந்தும் குடிநீர் விநியோகத்தில் புங்குடுதீவு பிரதேசம் புறக்கணிக்கப்பட்டமை தொடர்பாகவே திரு. க. நாவலன் காட்டமாக கருத்துக்களை முன்வைத்திருந்தார் என்பதனையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
குறிப்பாக, கடந்த இரண்டு வருடங்களாக உள்ளக வீதிகளில் குழாய்களைப் பதிக்கும் பணிகள் எதுவும் முன்னெடுக்கப்படாமல் திட்டம் முடங்கியுள்ளதாகப் பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுவதுடன்,
தாளையடி குடிநீர் திட்டத்தின் பிரதான நோக்கங்களில் ஒன்றான மக்களுக்கான குடிநீர் விநியோகத்தை உறுதிப்படுத்தும் வகையில், புங்குடுதீவு பிரதேசத்தின் கிராமப்புறங்களுக்கான குழாய் இணைப்புப் பணிகளை விரைவுபடுத்தி, குடிநீர் விநியோகத்தைச் சீரமைக்க உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திரு. கருணாகரன் குணாளன் கோரிக்கை விடுத்துள்ளார்.
