;
Athirady Tamil News

உக்ரைனில் ஸ்டார்லிங்க் சேவை மட்டுப்படுத்தப்பட்டது! – மஸ்க்

0

ரஷ்யாவிற்கு எதிரான உக்ரைனின் பாதுகாப்பிற்கு மிகவும் அவசியமான ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவையை தமது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் மட்டுப்படுத்தியிருந்ததாக இளான் மாஸ்க் ஒப்புக்கொண்டுள்ளார்.

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக முன்னணி இராணுவ நடவடிக்கைகளைப் பாதித்த இந்த சேவைக்கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, ஸ்டார்லிங்க் மற்றும் ஸ்டார்ஷீல்ட் செயற்கைக்கோள் இணைப்புகள் மீண்டும் பழைய வேகத்திற்கு மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலென்ஸ்கி தெரிவித்திருந்த நிலையிலேயே மாஸ்க் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.

சேவை மீட்டெடுக்கப்பட்டதாக உக்ரைன் கூறியதையடுத்து சமூக ஊடகத்தில் பதிவிட்ட மாஸ்க், சிவிலியன் வர்த்தக சேவையான ஸ்டார்லிங்கை தாக்குதல் நடத்தும் ட்ரோன்களுக்குப் பயன்படுத்துவது அனுமதிக்கப்படவில்லை என்றும், உக்ரைனிய இராணுவம் இதன் சேவை விதிமுறைகளை மீறியதால் அந்த வழிமுறை கடந்த வாரம் அடைக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இராணுவத் தேவைகளுக்கான ‘ஸ்டார்ஷீல்ட்’ அமைப்பின் கட்டுப்பாடுகள் அமெரிக்க அரசிடமே உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இணைய வேகம் பழையநிலைக்குத் திரும்பியதை அடுத்து, இராணுவ விநியோகங்கள்மற்றும் ரஷ்யாவின் ஷாஹெட் ட்ரோன்களுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகள் மீண்டும் வலுவடைந்துள்ளதாக செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உக்ரைனின் கார்கிவ் பிராந்தியத்தில் உள்ள லோசோவா நகர் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர்.

பதிலுக்கு, உக்ரைன் படைகள் ரஷ்யாவின் தொல்யாட்டி நகரில் உள்ள இரசாயன ஆலை மற்றும் ஓரியோல் நகரில் உள்ள மின்னணு ஆலை ஆகியவற்றின் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளதை உக்ரைன் இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.