;
Athirady Tamil News

நன்னீர் மீன்பிடி விருத்திக்காக வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த 12 குளங்களுக்கு மீன் தடுப்பு வலைகள் வழங்கி வைப்பு

0

நன்னீர் மீன்பிடி விருத்திக்காக வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த 12 குளங்களுக்கு 17.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான மீன் தடுப்பு வலைகள் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.

வட மாகாணத்தில் முடங்கியுள்ள நன்னீர் மீன்பிடித்துறையை மேம்படுத்தும் நோக்கில், குளங்கள் மற்றும் நீர்தேக்கங்களில் சிறிய மீன்களைப் பாதுகாப்பதற்காக மீன் தடுப்பு வலைகளை வழங்கும் நிகழ்வு வவுனியா மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.

இதன் முதற்கட்டத்தின் கீழ், 17.5 மில்லியன் ரூபாய் செலவில் வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த 12 குளங்களுக்கு மீன் தடுப்பு வலைகள் வழங்கி வைக்கப்பட்டன.

“வளமான நாடு – அழகான வாழ்க்கை” என்ற அரசாங்கத்தின் தேசியக் கொள்கைக்கமைய, தேசிய நீர்ப்பரப்பு மற்றும் நீர்ப்பயிரிடற் கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் இத்திட்டத்தைச் செயற்படுத்துவதற்காக 270 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நன்னீர் மீன்பிடித்துறைக்குத் தேவையான மீன் குஞ்சுகளை விடும் போது, மழை காலத்தில் குளங்கள் வான் பாய்வதுடன், அக்குஞ்சுகள் குளத்தை விட்டு வெளியேறிவிடும்.

இந்நிலையானது இத்தகைய மீன் தடுப்பு வலைகளைப் பயன்படுத்துவதன் மூலம் தடுத்துக்கொள்ளப்படுவதுடன், இது மீன்பிடி மக்களின் மீன் அறுவடையை அதிகரிப்பதற்குப் பெரும் உதவியாக அமையும்.

இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர்,

நன்னீர் மீன்பிடி உற்பத்தினை அதிகரிப்பதும், உள்நாட்டு மீன்பிடிச் சமூகங்களுக்கு நிலையான பொருளாதாரத்தை ஏற்படுத்துவதும் இத்திட்டத்தின் நோக்கமாகும் எனத் தெரிவித்தார்.

அத்துடன், நன்னீர் மீன்பிடித்துறையை மேம்படுத்துவதற்காக ‘பிரஜா சக்தி’ வேலைத்திட்டத்துடன் இணைத்து பல திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 2028 ஆம் ஆண்டளவில் நன்னீர் மீனவர்களைத் தொழில்நுட்ப ரீதியில் வலுவூட்டுவதும் இதன் நோக்கமாகும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் வவுனியா மாவட்டச் செயலர் பி.ஏ. சரத்சந்திர, தேசிய நீர்ப்பயிரிடற் கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட நீர்ப்பயிரிடற் திட்ட அதிகாரி நிஷாந்தன் யோகராசன் உள்ளிட்ட நன்னீர் மீன்பிடிச் சங்கங்களின் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.