;
Athirady Tamil News

நிலவில் மனிதக் குடியேற்றத்திற்குத் தயாராகும் வல்லரசுகள் ; அணு உலைகள் அமைக்கத் திட்டம்

0

நிலவின் மேற்பரப்பில் உள்ள வளங்களை ஆராய்ச்சி செய்யவும், அங்கு அமைக்கப்படும் மனித தளங்களுக்குத் தேவையான தடையற்ற மின்சாரத்தைப் பெறவும் அணு உலைகளை நிறுவுவதில் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய வல்லரசு நாடுகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

நிலவின் தென் துருவப் பகுதியில் உள்ள ஆழமான பள்ளங்களில் உறைந்த நிலையில் இருக்கும் பனிக்கட்டியைத் தோண்டி எடுத்து, அதனை குடிநீர், ஒட்சிசனாக மாற்றுவதற்கு இந்த அணு உலைகள் பிரதானமாகப் பயன்படுத்தப்படவுள்ளன.

நிலவில் தொடர்ந்து இரண்டு வாரங்கள் இருள் சூழும் என்பதால் சோலார் பேனல்கள் மூலமாகத் தொடர்ச்சியான மின்சாரத்தைப் பெற முடியாது.

இதன் காரணமாகவே அணுசக்தியைப் பயன்படுத்த நாடுகள் முன்வந்துள்ளன. அமெரிக்காவின் நாசா (NASA) அமைப்பு வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் 20 கிலோவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட அணு உலையை நிலவுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளது.

அதேவேளையில், ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் இணைந்து 2036 ஆம் ஆண்டிற்குள் ‘செலினா’ (Selena) என்ற பெயரிலான 10 கிலோவாட் அணு உலையைச் சீனக் கூட்டுத் தளத்திற்காக அமைக்க இலக்கு வைத்துள்ளன.

விண்வெளி மேலாதிக்கம் மற்றும் புவிசார் அரசியல் போட்டியே இந்த அவசரத்திற்குக் காரணம் எனக் கூறப்படும் நிலையில், நிலவில் அணு உலைகளைப் பாதுகாப்பாகத் தரையிறக்குவது மற்றும் கதிரியக்க மாசுபாடற்ற சூழலை உறுதி செய்வதே அறிவியலாளர்களுக்குப் பெரும் சவாலாக உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.