;
Athirady Tamil News

அடுத்தடுத்து நடந்த பரபரப்பு சம்பவங்கள்… தற்காலிகமாக மூடப்பட்ட அமெரிக்க வெள்ளை மாளிகை

0

வாஷிங்டன்,

அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை அருகே லபாயெட் சதுக்கம் அமைந்துள்ளது. இந்த சதுக்கத்தில் பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய பூங்கா உள்ளது. அந்த பூங்காவிற்கு வெளியே இருக்கும் நடைபாதையில், நேற்று கார் ஒன்று போஸ்ட் கம்பத்தின் மீது மோதி விபத்திற்குள்ளானது.

பரபரப்பு

வெள்ளை மாளிகைக்கு அருகில் உள்ள பகுதி என்பதால் அங்கு எப்போது பாதுகாப்பு அதிகமாக இருக்கும். இந்நிலையில், கார் விபத்து ஏற்பட்ட சில நொடிகளில் அங்கு காவல்துறையினர் விரைந்து வந்தனர். காரின் முன்பக்கத்தில் இருந்து புகை வந்து கொண்டிருந்தது.

காருக்குள் இருந்த நபர் சுயநினைவுடன் இருக்கிறார் என்பதை உறுதி செய்த பிறகு, அவரை காரை விட்டு வெளியே வருமாறு காவல்துறையினர் கூறினர். ஆனால் அந்த நபர் வெளியே வர மறுத்தார். பின்னர் சிறிது நேரத்திற்குப் பிறகு வெளியே வந்த அவர், தீடீரென அங்கிருந்த காவலர்கள் மீது பாய்ந்து தாக்குதலில் ஈடுபட முயன்றார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக அந்த நபரை போலீசார் மடக்கிப் பிடித்து தரையில் கிடத்தினர். பின்னர் அவரை கைது செய்து அங்கிருந்து அழைத்துச் சென்றனர். அதோடு, விபத்திற்குள்ளான காரை போலீசார் தீவிரமாக சோதனை செய்தனர். காரில் சந்தேகத்திற்குரிய பொருள் எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பின்னர் அந்த கார் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது.

மற்றொரு சம்பவம்

இதே சமயத்தில், லபாயெட் பூங்காவின் மற்றொரு பகுதியில் மர்ம நபர் ஒருவர் காவல்துறையினர் தடுப்புகளை தாண்டி குதிக்க முயன்றுள்ளார். அந்த நபரையும் போலீசார் மடக்கிப் பிடித்து அதிரடியாக கைது செய்தனர். இந்த 2 சம்பவங்களும் நடைபெற்றபோது அமெரிக்க அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்தார்.

தற்காலிக மூடல்

எனவே பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ளை மாளிகை தற்காலிகமாக மூடப்பட்டது. மேலும் வெள்ளை மாளிகைக்கு அருகில் இருக்கும் லபாயெட் சதுக்கத்திற்கு செல்லக் கூடிய சாலைகளும் மூடப்பட்டன. பாதுகாப்பு அச்சுறுத்தல் எதுவும் இல்லை என உறுதி செய்யப்பட்ட பிறகு வெள்ளை மாளிகை மீண்டும் திறக்கப்பட்டது. தொடர்ந்து அருகில் உள்ள சாலைகளில் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.