;
Athirady Tamil News

திருப்பதி பிரம்மோற்சவ விழா: பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுக..!!

0

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 27-ந்தேதியில் இருந்து அக்டோபர் மாதம் 5-ந்தேதி வரை வருடாந்திர (சாலகட்ல) பிரம்மோற்சவ விழா நடக்கிறது. அதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்வார்கள், என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது தொடர்பாக ஆய்வு நடத்தி ஆலோசனை செய்வது தொடர்பாக அனந்தபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ரவிபிரகாஷ் திருமலைக்கு வந்தார். அவர், திருமலையில் உள்ள கோவில், மாட வீதிகள், தரிசன வரிசைகள், பக்தர்கள் ஓய்வறைகள், விடுதிகள், அன்னதானக்கூடம், புஷ்கரணி உள்பட பல்வேறு இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:- பிரம்மோற்சவ விழாவையொட்டி திருமலைக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது நமது கடமை. பக்தர்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளப்படும். பிரம்மோற்சவ விழாவின் முதல் நாளான செப்டம்பர் மாதம் 27-ந்தேதி கொடியேற்றம் நடக்கிறது. அன்று முதல்-மந்திரி ஒ.எஸ்.ஜெகன்மோகன்ரெட்டி பட்டு வஸ்திரம் சமர்ப்பணம் செய்ய திருமலைக்கு வருகிறார். கருடசேவை அன்று அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் திருமலைக்கு வருவார்கள். வாகனச் சேவையின்போது அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படும். அசம்பாவிதங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தீவிரவாத செயல்களை முறியடிக்க தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படும். பிரம்மோற்சவ விழா வெற்றிகரமாக நடந்து முடிய போலீசாரின் அறிவுரைகளை பின்பற்றி பக்தர்கள் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். அதைத்தொடர்ந்து திருமலையில் உள்ள அமைனிட்டி காம்ப்ளக்ஸ் 4-ல் உள்ள கட்டுப்பாட்டு அறை கூட்ட அரங்கில் பிரம்மோற்சவ விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும் படை துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளுடன் கூட்டாக ஆய்வு நடத்தினார். கூட்டத்தில் திருமலை-திருப்பதி தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும் படை துறை அதிகாரி நரசிம்மகிஷோர் பங்கேற்று, இந்த ஆண்டு நடக்கும் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவில் மேற்கொள்ளப்பட உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கினார். மேலும் அனந்தபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. திருமலை 2-டவுன் காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு, என்ன மாதிரியான குற்றங்கள் நடக்கின்றன, குற்றங்களை கட்டுப்படுத்த போலீசார் என்ன நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்? என்பதைக் கேட்டறிந்தார். ஆய்வின்போது திருமலை-திருப்பதி ேதவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும் படை துறை அதிகாரி நரசிம்மகிஷோர், திருப்பதி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரமேஸ்வர்ரெட்டி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முனிராமையா, பறக்கும்படை அதிகாரி பாலிரெட்டி, போக்குவரத்துப் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு வேணுகோபால், திருமலை-2 டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் உள்பட பலர் உடனிருந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.