;
Athirady Tamil News

ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் மோடி..!! (புகைப்படத் தொகுப்பு)

0

கேரளா மாநிலம் கொச்சியில் நாட்டின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி . கடற்படையினரின் அணிவகுப்பு மரியாதையை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து இந்திய கடற்படைக்கு புதிய கொடியை அறிமுகம் செய்து வைத்தார் பிரதமர் மோடி. கடற்படைக்காக, ஐ.என்.எஸ்., விக்ராந்த் என்ற பிரமாண்ட விமானம் தாங்கி போர் கப்பலை உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. இந்திய கடற்படைக்கு சொந்தமான, ‘வார்ஷிப் டிசைன் பீரோ’ என்ற நிறுவனம் இந்த கப்பலை வடிவமைத்தது. கேரளாவின் கொச்சியில் உள்ள அரசு பொதுத் துறை நிறுவனமான, ‘கொச்சி ஷிப்யார்ட் லிமிடெட்’ இந்த கப்பலை உருவாக்கியது. முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களால் இந்த கப்பல் உருவாக்கப்பட்டது. முன்னணி தொழில் நிறுவனங்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் உபகரணங்களை தயாரித்து தந்துள்ளன.

மொத்தம், 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கப்பல், 860 அடி நீளமும், 203 அடி அகலமும் உடையது. 4.30 கோடி கிலோ எடையை சுமக்கும் திறன் உடையது. மணிக்கு 56 கி.மீ., வேகத்தில் பயணிக்கக் கூடியது. 2,200 பிரிவுகளுடன், 1,600 வீரர்கள் பயணிக்க கூடிய இந்த கப்பல், பெண் வீராங்கனையருக்கான பிரத்யேக வசதிகளுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், உயர்தர மருத்துவமனையில் இருக்கக் கூடிய அத்தனை வசதிகளும் இடம்பெற்று உள்ளன. சமீபத்திய நவீன மருத்துவ உபகரணங்கள், ‘பிசியோதெரபி’ பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, பரிசோதனை கூடங்கள் ஆகியவை உள்ளன.இந்த கப்பலில், ‘மிக்29கே’ ரக போர் விமானங்கள், ‘கமோவ் 31, எம்.எச்.,60ஆர்’ ரக ஹெலிகாப்டர்கள், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நவீன இலகுரக ஹெலிகாப்டர்கள், இலகுரக விமானங்கள் உட்பட, 30க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்கும் வசதி உள்ளது. இந்த கப்பலில் மிக குறுகிய துாரத்தில் விமானம் மேல் எழுப்பி செல்லும் நவீன, ‘ஸ்டோபார்’ தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது. இந்த கப்பலை உருவாக்கியதன் வாயிலாக, உள்நாட்டில் விமானம் தாங்கி போர் கப்பலை வடிவமைத்து உருவாக்குவதற்கான திறனை உடைய அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, சீனா, பிரான்ஸ் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளின் குழுவில் இந்தியாவும் இணைந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.