;
Athirady Tamil News

முல்லைத்தீவில் தொடரும் அவலம்!! (PHOTOS)

0

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது அமர்வில் இலங்கை பற்றிய உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் ‘பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம்’ பற்றிய உபதலைப்பின் கீழான ‘காணிகளை மீளளித்தல்’ எனும் பகுதியில் ‘வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பௌத்த மரபுகளை நிர்மாணிப்பது, காடுகளை பாதுகாப்பதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் காணித்தகராறுகளை ஏற்படுத்தியுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது அமர்வின் ஆரம்பநாளன்று இலங்கை பற்றிய உயர்ஸ்தானிகரின் அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றிய பதில் உயர்ஸ்தானிகர் நாடா அல்-நஷீப் ‘வடக்கு, கிழக்கில் இந்து அல்லது முஸ்லிம் இடங்களில் பௌத்த மரபுகளை நிறுவுவது அல்லது படையினரின் நிலைகளை விரிவுபடுத்தல் காணித் தகராறுகளை தொடருவதற்கு வழிவகுத்துள்ளதோடு நல்லிணக்கத்தை மேலும் குலைத்து புதிய பதற்றங்களை உருவாக்கியுள்ளது” என்று ஆணித்தனமாக குறிப்பிட்டிருக்கிறார்.

மேலேயுள்ள இந்தக்கூற்றுக்கள் வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் ‘எமது பிரச்சினையை ஐ.நா.கவனத்தில் கொண்டுள்ளது” என்ற நிம்மதிப்பெருமூச்சு விட்டுக்கொள்ளவதற்கு உதவுவதாக இருக்கலாம்.

அதேநேரம், ‘தமிழர் தாயகம் ஆக்கிரமிக்கப்படுகின்றது” என்று ஆக்ரோஷமாக கோசமிட்டு ஐ.நா. நோக்கி படையெடுத்துக் கொண்டிருப்பவர்களுக்கும் அடுத்துவரும் நாட்களில் உள்ளுர் அரசியல் மேடைகளில் ‘திட்டமிட்ட இனவழிப்பு’ என்று முழக்கமிடவுள்ளவர்களுக்கும் ஐ.நாவின் மேற்படி சுட்டிக்காட்டல்கள் மார்பு தட்டுவதற்கு வாய்ப்பாகலாம்.

ஆனால் இற்றைவரையில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களும், புலங்களும் ஆக்கிரமிக்கப்பட்டவையாகத் தான் உள்ளன. ஆக்கிரமிப்புக்கள் அடையாளப்படுத்தப்பட்டு சர்தேசம் வரையில் பதிவாகிவிட்டது என்பதால் மீளளக்கப்பட்டன என்றோ அல்லது ஆக்கிரமிப்புச் செயற்பாடுகள் தற்காலிகமாவது நிறுத்தப்பட்டனவென்றோ கூறுவதற்கு எந்தவிமான நிகழ்வுகளும் நிகழவில்லை.

இற்றைக்கு 73ஆண்டுகளுக்கு முன்னதாக, 1949ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28இல் ‘கல்லோயா ஆற்றுப்பள்ளத்தாக்கு அபிவிருத்தித்திட்டம்’ என்ற பெயரில் கிழக்கு மாகாணத்தின் பட்டிப்பளை ஆறு இடைமறிக்கப்பட்டு ‘சேனநாயக்க சமுத்திரத்தை’ அமைத்து அதனைச்சுற்றி 38சிங்கள குடியேற்றங்களை செய்திருந்தார் அப்போதைய பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கா.

அன்றிலிருந்து அரச இயந்திரங்களின் துணையுடன் தமிழர்களின் தாயக பிரதேசங்களை ஆக்கிரமித்து குடிப்பரம்பலை மாற்றியமைக்கும் ‘திட்டமிட்ட நிகழ்ச்சி நிரல்’ தங்குதடையின்றி முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இதனால், தடம் தெரியாதுபோன பாரம்பரிய தமிழ்க் கிராமங்களும், அடையாளங்களும் ஆயிரமாயிரம். அவ்வாறு உருத்தெரியாதுபோனவற்றை வெறும் ஏட்டுப்பதிவாக பேணுவதற்கு கூட இயலாதளவுக்கு எந்தவொரு அடிச்சான்றுகளும் இன்றளவில் இல்லாது போயிருக்கின்றமை தமிழினத்தின் துர்ப்பாக்கியமே.

இந்தநிலையில், வன பரிபாலன திணைக்களம், தொல்பொருளியல் திணைக்களம், மகாவலி அதிகாரசபை, முப்படைகள் உள்ளிட்ட அரச இயங்திரங்களினால் ஆக்கிரமிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மைய நாட்களில் இரண்டு பாரம்பரிய தமிழ்ப் பகுதிகளை கையகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதில் முதலாவது, கொக்குத்தொடுவாய் வடக்கு கிராமசேவகர் பிரிவில் உள்ள மண்கிண்டிமலை. இப்பகுதி, முல்லைத்தீவு மாவட்டத்தில் சிங்கள பெரும்பான்மை சமூகத்தின் ஆக்கிரமிப்பு குடியிருப்புக்களால் உருவாக்கப்பட்ட 9கிராமசேவர் பிரிவுகளைக் கொண்ட வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவையும், கரைத்துரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவையும் தனது எல்லைகளாகக் கொண்டிருக்கின்றது.

மண்கிண்டிமலையைப் பொறுத்தவரையில் 1984ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய், கொக்குகிளாய், கருநாட்டுக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 3100 தமிழ் மக்கள் பலவந்தமாக இலங்கை அரச படைகளால் வெளியேற்றப்பட்டபோது வெறுமையாக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாகும்.

மண்கிண்டிமலை இயல்பாகவே மலைக்குன்றுபோன்ற தரைத்தோற்றத்தைக் கொண்டிருப்பதால் படைகளுக்கு கண்காணிப்பைச் செய்வதற்கு இலகுவானதாக இருக்கும் என்ற நோக்கில் அங்கு படைமுகாமொன்று அமைக்கப்பட்டிருந்தது. இருப்பினும் 1993ஆம் ஆண்டு ஜுலை 25ஆம் திகதி ‘இதயபூமி-01’ என்ற நடவடிக்கையின் மூலம் தமிழீழ விடுதலைப்புலிகள் குறித்த படைமுகாமைத் தகர்த்து மண்கிண்டிமலையை மீட்டிருந்தனர்.

குறித்த தாக்குதல், மணலாறு வெலிஓயாவாகி விரிவடைந்து மண்கிண்டிமலையை ஆக்கிமிப்பதற்கு தற்காலிக முற்றுப்புள்ளியை வைத்திருந்தது. பின்னரான காலத்தில் மீண்டும் படைகள் மண்கிண்டிமலையை கைப்பற்றி 59ஆவது படைப்பிரிவின் கீழ் படைமுகாமை அமைத்துள்ளனர் என்பது வரலாறு.

இவ்வாறான நிலையில், ‘ஒதுக்கப்பட்ட தொல்பொருளியல் பூமியை பிரகடனப்படுத்தல்; கரைத்துரைப்பற்று தொல்பொருளியல் பூமியின் பொருட்டு நிலஅளவைக் கட்டளை வழங்குதல்’ எனும் தலைப்பில் கரைத்துரைப்பற்று பிரதேச செயலாளருக்கு தொல்பொருளியல் திணைக்களத்தின் பணிப்பாளர் பேராசிரியர் அநுர மனதுங்கவால் அறிவுறுத்தல் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்தக்கடிதத்தில், “முல்லைத்தீவு கரைத்துரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின், கொக்குத்தொடுவாய் கிராமசேவகர் பிரிவில் உள்ள ‘பன்சல்கந்த’ (மண்கிண்டிமலை) தொல்பொருளியல் இடமாக பிரகடனப்படுத்தப்பட வேண்டிய தொல்பொருட்களுடன் கூடிய பூமியாகும்.

இதன்பொருட்டு, வனபரிபாலனத்திணைக்களத்தின் பணிப்பாளருடைய அனுமதி கிடைத்துள்ள நிலையில் குறித்த பூமிக்கன நிலஅளவை கட்டளையை வழங்குமாறு கோருகின்றேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், பிரதேச செயலாளருக்கு பின்னிணைப்பாக அனுப்பபட்டுள்ள வனபரிபாலனத்திணைக்களத்தின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதை உறுதிப்படுத்துவதற்கான சான்றுப் பிரதியில், மண்கிண்டிமலை ஆண்டான்குளம் ஒதுக்ககாடுகள் பிரிவினுள் உள்ளீர்க்கப்பட்டு 1921ஆம் ஆண்டு ஜுலை 10ஆம் திகதி வெளியான 7182இலக்கமுடைய வர்த்தமானி அறிவித்தல் மூலமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஆனால், ‘மண்கிண்டிமலை’ எப்போது ‘பன்சல்கந்த’ என்று பெயர் மாற்றம்பெற்றது என்பது பற்றிவிளக்கமளிக்கப்பட்டிருக்கவில்லை. அதேநேரம், நிலஅளவியல் திணைக்களத்தின் பதிவுகளிலும் ‘பன்சல்கந்த’ என்பது குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.

ஆக, மண்கிண்டிமலையில் உள்ள படைமுகாமிற்கு சமய ஆராதனைகளுக்காக அவ்வப்போது சென்றுவரும் வெலிஓயாவின் ஜனகபுர விகாரதிபதியின் முன்முயற்சியில் பெயர்மாற்றம் இடம்பெற்றிருக்கலாம் என்கிறனர் பிரதேசவாசிகள்.

அவ்வாறு நிகழ்ந்திருந்தால், முல்லைத்தீவில் படைகளின் பாதுகாப்புடன் பௌத்தமதத்தின் பெயரால் விரிவாக்கப்படும் மற்றொரு ஆக்கிரமிப்புக்கு தொல்பொருளியல் திணைக்களமும் துணைபோகின்றது என்பது மீண்டுமொருதடவை உறுதியாகின்றது.

இராண்டவாது, கிராமம், தண்ணிமுறிப்பு. ‘குருந்தாவசோக’ ராஜமாஹா விகாரை எனப்பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ள குருந்தூர்மலைக்கு அண்மையில் உள்ளது. இக்கிராமம் உள்ளிட்ட 341ஏக்கர் நிலங்கள் தொல்பொருளியல் திணைக்களத்திற்கு சொந்தமானவை என்று கூறப்பட்டு அரச விடுமுறை தினமான கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று எல்லைக்கற்கள் நாட்டப்பட்டுள்ளன.

இதனைச்செய்வதற்வதற்கு கடந்த நான்கு ஆண்டுகளாக தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்ட நிலையில் தற்போது அம்முயற்சி செயல்வடிவம் பெற்றிருக்கின்றது. 2018இல் போஹஸ்வெவவிலிருந்து படையினர் புடைசூழ குருந்தூர் மலைக்கு வருகைதந்திருந்த சம்புமல்ஸ்கட விகாராதிபதி கல்கமுவே சந்தபோதி தேரர் குருந்தூர்மலையை கையகப்படுத்தியிருந்தார்.

அத்துடன் அவர் அடக்கிவாசித்திருக்கவில்லை. மக்கள் கிளர்ச்சியால் பதவி விலகிய கோட்டாபய ஜனாதிபதியாக இருந்தபோது அனுப்பிய கடிதமொன்றில், “1930ஆண்டு வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் வரலாற்றுச் சிறப்பு மிக்க குருந்தூர் மலையில் 80ஏக்கர்கள் விகாரைக்குச் சொந்தமானது என்றும் 320ஏக்கர்கள் விஸ்தரிப்புக்கு கரைத்துரைப்பற்று பிரதேச செயலாளர் தடையாக இருக்கின்றார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனாலும், குருந்தூர் மலையில் மலைப்பகுதியில் காணப்படும் 58ஏக்கர்களும் குளம் உள்ளிட்ட அண்மித்த பகுதியில் உள்ள 20ஏக்கர்களுமாக 78ஏக்கர்களே தொல்பொருளியல் திணைக்களத்தினால் ஆய்வுக்குரிய பகுதியாக வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1984 டிசம்பரில் ஒதியமலைக் கிராமத்தில் அரங்கேற்றப்பட்ட மிலேச்சத்தனமான படுகொலைகளின் பின்னர் தண்ணிமுறிப்பு குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்தனர் என்பது வரலாறு.

அதுமட்டுமன்றி, 23குடும்பங்களுக்குச் சொந்தமான நிலங்களும், 48ஏக்கர்கள் வரையிலான புலங்களும் தற்போதும் உறுதிகளுடன் காணப்படுகின்தோடு தண்ணிமுறிப்பு அ.த.க.பாடசாலை, தபாலகம், நெற்களஞ்சியசாலை உள்ளிட்டவற்றின் எச்சங்கள் ஏற்கனவே பொதுமக்கள் இப்பகுதியில் வாழ்ந்தமையை உறுதிப்படுத்துவதாக உள்ளன.

முன்னதாக, குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய விவகாரம் தொடர்பில் நடைபெற்றுவரும் வழக்கில், ‘குருந்தூர்மலை தொல்லியல் பகுதியாக பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர் மேற்கொள்ளப்பட்ட நிர்மாணங்களை நீக்கினால் தொல்லியற்சின்னங்களும் நீங்கும் என்பதால் அவற்றைப் பாதுகாக்க வேண்டியமையால் குறித்த நிர்மாணங்கள் நீக்கப்படவேண்டும் என்ற கட்டளை கைவாங்கப்படுகின்றது’ என்று முல்லைத்தீவு நீதிமன்றம் நீதிபதி ரி.சரவணராஜா திருத்திய கட்டளையை பிறப்பித்துள்ளார்.

அதேநேரம், தமிழ் அரசியல் பிரதிநிதிகள் ஐவர் தமது வழிபாடுகளுக்கு இடையூறு அளிப்பதாக முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் நிலையத்தில் சந்தபோதி தேரர் உள்ளட்டவர்களால் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாகஞ்சோலை ஒதுக்ககாடுகள் மற்றும் தண்ணிமுறிப்பில் பொதுமக்களுக்குச் சொந்தமான குடியிருப்புக்காணிகள், வயல்காணிகள் உள்ளடங்கலாக ஏக்கர் கணக்கான நிலங்கள் திடீரென எவ்வாறு தொல்பொருளியல் பூமியாக பிரகடனப்படுதப்பட்டது என்பது பெருங்கேள்வியாகும். இதுகுறித்து நீதித்துறையும், காவல்துறையும் என்ன செய்யப்போகின்றன?

அதுமட்டுமன்றி, தண்ணிமுறிப்பை தொல்பொருளியல் திணைக்களம் எல்லைக்கற்கள் மூலம் தம்வசப்படுத்தியுள்ள நிலையில் மண்கிண்டிமலையும் தொல்பொருளியல் பணிப்பாளரின் உத்தரவுகளுக்கு அமைவாக, நிலஅளவை நிறைவு பெற்று தொல்பொருளியில் பகுதியாக பிரகடனம் செய்யப்பட்டால், அது நிச்சயமாக வெலிஓயா பிரேதச செயலாளர் பிரிவு விரிவாக்கமடைவதற்கே வழிசமைப்பதாகவே இருக்கும்.

ஏனெனில், மண்கிண்டிமலையிலிருந்து வடக்காக 12கிலோமீற்றர் தொலைவில் தான் குருந்தூர்மலையும், தொல்பொருளியல் திணைக்களத்தால் எல்லைக்கற்கள் போடப்பட்டுள்ள தண்ணிமுறிப்பு கிராமமும் உள்ளன.

அதேபோன்று, மண்கிண்டிமலையிலிருந்து வடமேற்காக 9கிலோமீற்றர் தொலைவில் உள்ள நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தை ‘குருகந்த’ என்று பெயர்மாற்றம் செய்து சொந்தம்கொண்டாடுவதற்கான போராட்டம் நீறுபூத்தநெருப்பாகவே உள்ளது.

இதனடிப்படையில், குறிப்பிட்ட இடைவெளிகளில் உள்ள ஆக்கிரமிப்பு பௌத்த மையங்களான ‘குருந்தாவசோக ரஜமஹாவிகாரை’ (குருந்தூர்மலை), ‘பன்சல்கந்த’ மண்கிண்டிமலை, ‘குருகந்த விகாரை’ (நீராவியடிப்பிள்ளையார்) ஆகியன இணைக்கப்படும் வகையில் நேர் எதிரான விரிவாக்கம் முன்னெடுக்கப்படுவதற்கே அதிக சந்தர்ப்பங்கள் உள்ளன.

அந்த விரிவாக்கங்கள் தொல்பொருளியலுக்குச் சொந்தமான பகுதிகள், புனித பூமிகள் என்ற வடிவங்களில் இடம்பெற்றலாம். அதனுள் காணப்படும் ஒதுக்ககாட்டுப்பகுதிகளை வனபரிபாலன திணைக்களமும் அள்ளிவழங்குவதற்கு பின்னிற்கப்போவதில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.