;
Athirady Tamil News

அலங்காநல்லூரில் கிராமிய பொங்கல்- பொங்கல் வைத்து நடனமாடிய வெளிநாட்டு பெண்கள்!!

0

மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலக பிரசித்தி பெற்றது. இதனை கண்டு களிப்பதற்காக ஆண்டு தோறும் வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இதன் ஒரு பகுதியாக இந்தியாவுக்கான மலேசிய தூதர் தலைமையில் கனடா, ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்த 134 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நேற்று மதுரை வந்தனர். மதுரை மாவட்ட சுற்றுலா அலுவலகத்தில் அவர்கள் ஏற்கனவே பதிவு செய்திருந்தனர்.

அவர்களை மாவட்ட சுற்றுலா அதிகாரி பாலமுருகன் மாலை அணிவித்து வரவேற்றார். பின்பு அவர்கள் அனைவரும் பஸ்சில் அலங்காநல்லூருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் குறவன்குளம் பகுதியில் மாவட்ட சுற்றுலா துறை சார்பில் நடந்த கிராமிய பொங்கல் விழாவில் கலந்து கொண்டனர்.

அங்குள்ள கிராம மந்தையில் கரகாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட பல கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடந்தன. வெளிநாட்டுப் பயணிகள் பொங்கல் வைக்கும் முறை குறித்து அங்குள்ள பெண்களிடம் ஆர்வத்துடன் கேட்டறிந்தனர். குறவன் குளம் கிராமத்தில் நாட்டுப்புற நடன நிகழ்ச்சிகள் அரங்கேறியது. அப்போது வெளி நாட்டு பயணிகள், கலைஞர்களுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டனர். இதனால் அங்கு பொங்கல் திருவிழா நிகழ்ச்சிகள் களை கட்டியது. இதனைத் தொடர்ந்து அவர்கள் மீண்டும் மதுரைக்கு அழைத்து வரப்பட்டனர்.

அலங்காநல்லூரில் நாளை நடைபெறும் ஜல்லிக்கட்டிலும் அவர்கள் பங்கேற்று பார்வையிடுகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் ரேணுகாஈஸ்வரி, துணை தலைவர் சுவாமிநாதன், செயல் அலுவலர் ஜீலான் பானு, சுற்றுலா வழிகாட்டி பிரபு மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.