;
Athirady Tamil News

தமிழ்மக்கள் பூரண அதிகாரப்பகிர்வைப் பெறுவதற்கு சிங்கள மக்கள் அனுமதிக்கும் நாளே எமக்கான விடிவுநாள் – சி.வி.விக்னேஸ்வரன்!!

0

ஒற்றையாட்சி முறையில் மாற்றத்தை ஏற்படுத்தி நாட்டில் வாழும் தமிழ் மக்கள் என்று பூரண அதிகாரப் பகிர்வைப் பெற சிங்கள மக்கள் அனுமதிக்கின்றார்களோ அன்றே தமிழ் மக்களின் விடிவு நாள்.

அதுவரையில் வருடந்தோறும் பெப்ரவரி 4 ஆம் திகதி என்ற கரிநாள் வந்து போய்க்கொண்டிருக்கும்.

நாமும் அன்றைய தினம் எமது மனோநிலையை வெளிப்படுத்திக்கொண்டேயிருப்போம் என்று தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் யாழ்மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்றைய சுதந்திரதினம் வட,கிழக்கு மக்களால் கரிநாளாக அனுட்டிக்கப்படவுள்ள நிலையில், இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே சி.வி.விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவ்வறிக்கையில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

பெப்ரவரி மாதம் 4ம் திகதி சிங்களப் பெரும்பான்மையினருக்கு சுதந்திர தினமாக அமையினும், அவ்வாறு அவர்கள் கொண்டாடுவார்கள் எனினும் வட கிழக்குவாழ் தமிழ்பேசும் மக்களுக்கு அது சுதந்திரமற்ற, உரிமைகளற்ற, சிங்கள ஏகாதிபத்தியத்திற்கு அடிமைப்பட்டிருக்கும் ஒரு நாளாகவே அவர்கள் அதனைப் பார்க்கின்றார்கள்.

எனவே தான் யாழ் பல்கலைக்கழக மாணவ ஒன்றியமும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களும் ஒன்றிணைந்து குறித்த நாளை கரிநாளாக அடையாளப்படுத்தியுள்ளனர்.

அவ்வாறு குறித்த நாளைப் பிரகடனப்படுத்த முன் அவர்கள் மக்கள் பிரதிநிதிகள், சிவில் சமூகத்தினர், மதத்தலைவர்கள் போன்றோருடன் கலந்துரையாடிய பின்னரே இந்தத் தீர்மானத்தை எடுத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்படி இன்று (04) வடக்கு, கிழக்கு தழுவிய வர்த்தக சமூகத்தினர், கடற்றொழிலாளர்கள், தனியார் மற்றும் அரச பேரூந்து உட்பட அனைத்து தொழிற்சங்கங்களும் தொழில் புறக்கணிப்பிலும் முழுமையான கடையடைப்பிலும் ஈடுபட உள்ளனர்.

எமது மனோநிலையை மன ஏக்கத்தை உலகுக்கு வெளிப்படுத்த இது ஒரு நல்ல சந்தர்ப்பமாக அமைந்துள்ளது.

பிரித்தானியரின் ஆதிக்கத்தினுள் இருந்து சிங்களப்பெரும்பான்மையினரின் ஆதிக்கத்தினுள் இந்நாடு 1948ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ம் திகதியன்று சென்றமையை சுட்டிக்காட்டும் நாளாக இந்த நாள் அமைகின்றது.

ஒற்றையாட்சி மூலம் சிங்களப் பெரும்பான்மையினர் பெற்ற அரசியல் ஆதிக்கத்தை கடந்த 75 ஆண்டுகளாக சிங்கள அரசியல்வாதிகள் கட்டிக்காத்து வருகின்றனர்.

தந்திரமாக அவர்கள் பெற்றுக்கொண்ட ஒற்றையாட்சி முறையில் மாற்றத்தை ஏற்படுத்தி நாட்டில் வாழும் தமிழ் மக்கள் பூரண அதிகாரப் பகிர்வைப்பெற சிங்கள மக்கள் எப்போது அனுமதிக்கின்றார்களோ அன்றே தமிழ் மக்களின் விடிவு நாள். அதுவரையில் வருடந்தோறும் பெப்ரவரி 4 ஆம் திகதி என்ற கரிநாள் வந்து போய்க்கொண்டிருக்கும். நாமும் அன்றைய தினம் எமது மனோநிலையை வெளிப்படுத்திக்கொண்டேயிருப்போம்.

இளைஞர் யுவதிகளின் பேரணியை வரவேற்கும் அதே நேரத்தில் அவர்கள் பயணம் பாதுகாப்புடனும் பொறுப்புடனும் வெற்றியுடனும் நடந்தேற வேண்டும் என்று இறைவனை இறைஞ்சுகின்றேன் என்று அவ்வறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.