;
Athirady Tamil News

ரஷ்யா, யுக்ரேன் விவகாரம்: நேரு வழியில் பயணிக்கிறாரா பிரதமர் மோதி?

0

யுக்ரேன் மீது ரஷ்யாவின் தாக்குதல் கடந்த ஒரு வருடமாக நடந்து வருகிறது. பிப்ரவரி 24 அன்று, ரஷ்ய தாக்குதலின் ஒரு ஆண்டு பூர்த்தியானது.

இந்த போரில் யார் வெல்வார்கள், யார் தோற்பார்கள் என்பது இதுவரை தெளிவாக தெரியவில்லை. ஆனால், இந்தப் போரின் காரணமாக கடந்த ஒரு வருடத்தில் உலகம் மோசமாகப் பிளவுபட்டுள்ளது.

வெளியுறவுக் கொள்கை விஷயத்தில் இந்தியாவும் பல முனைகளில் போராடியது. இந்தியா தன்னை உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் என்று கூறிக்கொள்ளும் நிலையில் ரஷ்யா, ஒரு ஜனநாயக நாடான யுக்ரேனை தாக்கியுள்ளது.

யுக்ரேன் மீதான ரஷ்ய தாக்குதலை மேற்குலகின் ஜனநாயக நாடுகள் வெளிப்படையாகக் கண்டித்து யுக்ரேனுக்கு ஆதரவளித்தன. ஒரு ஜனநாயக நாடு என்ற நிலையில் ரஷ்யாவின் தாக்குதலை கண்டனம் செய்ய இந்தியா மீது அழுத்தம் இருந்தது, ஆனால் ரஷ்யா இந்தியாவின் பாரம்பரிய நண்பராக இருந்து வருகிறது.

ரஷ்யாவுக்கு எதிராக மேற்கத்திய நாடுகள் கடுமையான தடைகளை விதித்துள்ளன. ஐரோப்பாவில் உள்ள நாடுகள் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதி செய்வதில் பெரும் வெட்டுக்களைச் செய்துள்ளன. யுக்ரேன் தன்னை தற்காத்துக் கொள்ள யாருமே எதிர்பார்க்காத விதமாக ஆயுதங்கள் அங்கிருந்து அனுப்பப்பட்டுள்ளன. ஆனால், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா, யுக்ரேன் மீதான தாக்குதலுக்காக ரஷ்யாவை கண்டிக்கவில்லை.

யுக்ரேன் நெருக்கடியிலும் கூட, இந்தியா மற்றும் ரஷ்யா இடையிலான கூட்டாண்மையில் எந்த பாதிப்பும் இதுவரை ஏற்படவில்லை.கடந்த ஆண்டு செப்டம்பரில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை சந்தித்தார். ரஷ்யாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நட்புறவு பிரிக்க முடியாதது என்று இரு தலைவர்களும் கூறினர்.

இப்போது போருக்கான நேரம் இல்லை என்று பிரதமர் மோதி ரஷ்ய அதிபரிடம் கேமரா முன் கூறினார். ஆனால், போர் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்த போதிலும், இந்தியா இதற்காக ரஷ்யாவை குறை கூறவில்லை, கண்டனமும் தெரிவிக்கவில்லை.

ஒருபுறம் ஐரோப்பா, ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் மற்றும்எரிவாயு வாங்குவதை கிட்டத்தட்ட நிறுத்தியது. மறுபுறம், ரஷ்யாவிலிருந்து இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி அதிகரித்தது. இந்த நிதியாண்டில் இதுவரை, ரஷ்யாவிலிருந்து இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி கிட்டத்தட்ட 400% அதிகரித்துள்ளது. ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் சலுகை விலையில் கிடைப்பதால் இறக்குமதியில் இந்த ஏற்றம் ஏற்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டின் முதல் 10 மாதங்களில், இந்தியாவின் சரக்கு இறக்குமதியில் ரஷ்யா நான்காவது இடத்தில் இருந்தது. அதே சமயம், சீனா முதலிடத்திலும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இரண்டாவது இடத்திலும், அமெரிக்கா மூன்றாவது இடத்திலும் உள்ளன.

இந்த நிதியாண்டில் ரஷ்யாவிலிருந்து இந்தியாவின் இறக்குமதி 37.31 பில்லியன் டாலராக உள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 7.71 பில்லியன் டாலராக இருந்தது.

“ரஷ்யாவிடம் இருந்து இந்தியா அதிக அளவில் கச்சா எண்ணெயை வாங்கி அதை சுத்திகரித்து பெட்ரோலியப் பொருளாக விற்றுள்ளது” என்று இந்தியாவின் வர்த்தகச் செயலர் சுனில் பார்த்வால், நிக்கி ஏஷியா வார இதழிடம் தெரிவித்தார்.

இதன் காரணமாக இந்தியாவில் இருந்து பெட்ரோலியப் பொருட்களின் ஏற்றுமதியும் வெகுவாக அதிகரித்துள்ளது.

2022 ஏப்ரல் மற்றும் 2023 ஜனவரிக்கு இடையில் இந்தியாவில் இருந்து பெட்ரோலியப் பொருட்களின் ஏற்றுமதி 78.58 பில்லியன் டாலராக இருந்தது. இது முந்தைய நிதியாண்டில் 50.77 பில்லியன் டாலராக இருந்தது.

இது தவிர, ரஷ்யாவில் தயாரிக்கப்படும் ஆயுதங்களையும் இந்தியா தொடர்ந்து வாங்குகிறது. உணவுப் பாதுகாப்பு, பணவீக்கம் மற்றும் கடன் அதிகரிப்பு போன்ற முக்கியமான பிரச்சனைகளில் இருந்து மக்கள் கவனத்தை திசைதிருப்பவே மேற்கத்திய நாடுகள் யுக்ரேன் மீது கவனம் செலுத்துவதாக இந்தியா மட்டுமின்றி உலகின் பிற வளர்ந்துவரும் நாடுகளும் கருதுகின்றன.

யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதலில் இந்தியாவின் நிலைப்பாட்டை தைரியமான ஒன்று என்று பலர் அழைக்கிறார்கள். பலர் அதை இந்தியாவின் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையுடன் தொடர்புபடுத்துகிறார்கள். மறுபுறம், இந்தியா தனது நலன்களுக்கு ஏற்ப முடிவுகளை எடுக்கிறது என்று சிலர் நம்புகிறார்கள்.

யுக்ரேன் நெருக்கடியின் போது இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை மோதி அரசு முன்னோக்கி கொண்டு சென்றதற்குப் பின்னால் முக்கியமாக நான்கு காரணங்கள் கூறப்படுகின்றன.

வரலாற்று பின்னணி, எரியாற்றல், ஆயுதம் மற்றும் செல்வாக்கு ஆகியவை இந்த நான்கு காரணங்கள். இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான உறவு வரலாற்று சிறப்புமிக்கது. 1900 ஆம் ஆண்டு இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்தபோது சோவியத் யூனியன் இந்தியாவில் முதல் துாதரகத்தைத் திறந்தது. ஆனால் பனிப்போரின் போதுதான் இரு நாடுகளுக்கிடையேயான உறவு வலுவடைந்தது.

சுதந்திரத்திற்குப் பிறகு சோவியத் யூனியன் மீதான இந்தியாவின் செயல் உத்தி அனுதாபம் தொடர்ந்து இருந்து வருகிறது. காலனித்துவ எதிர்ப்பு மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வுகளே இதற்குக் காரணம் என்று அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷனின் அரசியல் விஞ்ஞானி பிள்ளை ராஜேஸ்வரி எழுதியுள்ளார்.

இந்த உணர்வு பனிப்போரின் போது உச்சத்தை அடைந்தது. இந்த உணர்வு சில நேரங்களில் மேற்கத்திய எதிர்ப்பு மற்றும் அமெரிக்க எதிர்ப்பு என்று கூறப்படுகிறது. பனிப்போருக்குப் பிறகும் ரஷ்யா மீதான இந்தியாவின் அனுதாபம் முடிவுக்கு வரவில்லை. யுக்ரேன் போரில் கூட இந்தியாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.

யுக்ரேன் நெருக்கடியில் இந்தியாவின் நிலைப்பாடு மேற்கு நாடுகளுக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கலாம். ஆனால் இந்திய வெளியுறவு அமைச்சர் நாட்டின் கொள்கையை கடுமையாகவும் வலுவாகவும் பாதுகாத்து வருகிறார்.

ஐரோப்பாவின் ஏமாற்றம் மற்றும் இந்தியாவின் நிலைப்பாடு குறித்த கேள்விகளுக்கு ஜெய்சங்கர் மிகவும் ஆக்ரோஷமான முறையில் பதிலளித்து வருகிறார். கடந்த ஆண்டு ஜூன் முதல் வாரத்தில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஸ்லோவாக்கியாவின் தலைநகர் பிராட்டிஸ்லாவாவில் நடைபெற்ற மாநாட்டில், “தனது பிரச்னைகள் உலகின் பிரச்னைகள். ஆனால் உலகின் பிரச்னைகள் ஐரோப்பாவின் பிரச்னைகள் என்ற மனநிலையில் ஐரோப்பா வளர்ந்து வந்துள்ளது” என்று கூறினார்.

ஜிண்டல் குளோபல் சட்டப் பள்ளியின் பேராசிரியர் பிரபாஷ் ரஞ்சன், ஜெய்சங்கரின் இந்தக் கருத்தை 1948 நவம்பர் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் நேரு ஆற்றிய உரையுடன் இணைத்தார்.

“ஐரோப்பாவின் பிரச்னைகளைத் தீர்ப்பதில் எனக்கும் சமமான ஆர்வம் உண்டு. ஆனால் உலகம் ஐரோப்பாவிற்கு அப்பாலும் உள்ளது என்பதை நான் சொல்ல விரும்புகிறேன். ஐரோப்பாவின் பிரச்னைதான் உலகின் முதன்மையான பிரச்னை என்ற எண்ணத்தில் உங்கள் பிரச்னையை தீர்க்க முடியாது. பிரச்னைகள் முழுமையாக விவாதிக்கப்பட வேண்டும். உலகின் எந்த ஒரு பிரச்னையை நீங்கள் புறக்கணித்தாலும், அந்தப் பிரச்னையை நீங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று பொருள். ஆசியாவின் பிரதிநிதியாக நான் பேசுகிறேன். ஆசியாவும் இந்த உலகின் ஒரு பகுதி,” என்று நேரு கூறியிருந்தார்.

”இந்திய வெளியுறவு அமைச்சரின் கருத்துகளில் அர்த்தம் உள்ளது. ஆனால் சர்வதேச உறவுகளில் விதிகள் உறுதியாக பின்பற்றப்பட்டால் இது ஐரோப்பாவின் பிரச்னையாக மட்டும் இருக்காது,” என்று ஜெய்சங்கரின் கருத்துகளை மேற்கோள் காட்டி, ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷால்ட்ஸ் இந்த மாதம் ம்யூனிக் பாதுகாப்பு மாநாட்டில் தெரிவித்தார்,

ஜெர்மனி அதிபர் பிப்ரவரி 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். இந்தியாவுக்கு வந்த ஜெர்மன் அதிபர் தனது ட்விட்டர் பக்கத்தில்,“ சவாலான காலங்களில் ஜி-20க்கு இந்தியா தலைமை வகிக்கிறது. யுக்ரேன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பின் மிகவும் பயங்கரமான விளைவுகள் முன்னுக்கு வந்துள்ளன. அதன் தாக்கம் உலகின் மீது மிக மோசமாக இருந்தது. இந்தியாவுடன் இணைந்து போரை நிறுத்த நாங்கள் முயற்சிக்கிறோம்.” என்று பதிவிட்டிருந்தார்.
நேரு காட்டிய பாதையில் மோதி அரசு?

மேற்கத்திய நாடுகளின் அழுத்தத்தை நிராகரிப்பதில் இந்தியாவின் ஆக்ரோஷத்தின் அடிப்படை என்ன? சொல்லும் பாணி கடுமையாக இருந்தாலும் இந்தியாவின் இந்த அணுகுமுறை புதிதல்ல என்று பலர் நம்புகிறார்கள்.

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அணிசேராக் கொள்கைக்கு அடித்தளமிட்டார். அதன் பிறகு வந்த எல்லா அரசுகளும் இந்த கொள்கையை அவரவர் வழியில் பின்பற்றி வந்தன.

ஹங்கேரியில் சோவியத் யூனியன் தலையிட்டு ஒரு வருடம் கழித்து 1957ல் அப்போதைய இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு, இந்த விவகாரத்தில் சோவியத் ஒன்றியத்தை இந்தியா ஏன் கண்டிக்கவில்லை என்று நாடாளுமன்றத்திடம் கூறினார்.

“உலகில் ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு நாளும் பல விஷயங்கள் நடக்கின்றன. பொதுவாக இவற்றை நாம் விரும்புவதில்லை. ஆனால் நாம் அவற்றை கண்டனம் செய்வதில்லை. ஏனென்றால் ஒரு நபர் ஒரு பிரச்னைக்கு தீர்வைத் தேடும்போது, கண்டனம் உதவாது,” என்று நேரு கூறினார்.

நேருவின் இந்தக் கொள்கை மோதல் நேரத்தில், குறிப்பாக இந்த மோதல் இந்தியாவின் இரண்டு கூட்டாளிகளுக்கு இடையே இருக்கும்போது, இந்தியாவுக்கு வழிகாட்டுகிறது என்று ’தி இந்து’ நாளேட்டின் சர்வதேச ஆசிரியர் ஸ்டான்லி ஜானி எழுதியுள்ளார்.

சோவியத் யூனியன் 1956ல் ஹங்கேரியில், 1968ல் செக்கோஸ்லோவாக்கியாவில் மற்றும் 1979ல் ஆப்கானிஸ்தானில் தலையிட்ட போதிலும் சரி, இந்தியாவின் நிலைப்பாடு ஏறக்குறைய இதுதான்.

2003-ல் இராக் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியபோதும் இந்தியாவின் அணுகுமுறை இப்படித்தான் இருந்தது. யுக்ரேன் மீதான தாக்குதலுக்கு ரஷ்யாவைக் கண்டிக்காததும், ஐநா கண்டனத் தீர்மானத்தில் வாக்களிக்காமல் இருப்பதும் அடிப்படையில், இந்தியாவின் வரலாற்று நடுநிலை நிலைப்பாட்டிலிருந்து, வேறுபட்டதல்ல என்று ஸ்டான்லி ஜானி எழுதியுள்ளார்.

ஆனால் இந்தியா மட்டுமே இந்த நிலைப்பாட்டை கடைப்பிடிக்கிறது என்று சொல்லமுடியாது. இந்தியாவைப் போலவே மற்ற நடுத்தர சக்தி நாடுகளான தென்னாப்பிரிக்கா, இந்தோனேஷியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் யுக்ரேன் நெருக்கடி தொடர்பான நிலைப்பாடும் இந்தியாவைப் போலவே உள்ளது.

துருக்கி நேட்டோவின் உறுப்பினர். நேட்டோ வெளிப்படையாக யுக்ரேனை ஆதரிக்கிறது. ஆயினும் துருக்கியின் அதிபர் எர்தோகனின் வழி முற்றிலும் வேறுபட்டது. நேட்டோவில் உறுப்பினராக இருந்தாலும் யுக்ரேனுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளில் துருக்கி சேரவில்லை.

யுக்ரேன் நெருக்கடியில் இந்தியாவின் நிலைப்பாட்டை, தடுமாற்றம் நிறைந்தது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வர்ணித்துள்ளார். கடந்த ஆண்டு ஏப்ரலில், அமெரிக்காவின் துணை என்எஸ்ஏ தலீப் சிங் இந்தியா வந்திருந்தார். ரஷ்யாவுடன் இந்தியா வர்த்தகத்தை தொடர்ந்தால், அதன் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கூறியிருந்தார். ஆனால் இந்தியா இந்த அச்சுறுத்தல்களைப் பற்றி சிறிதும் கவலைப்படவில்லை.

அமெரிக்கா தனது பாணியை மாற்ற வேண்டியிருந்தது. இப்போது ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதை அமெரிக்கா விரும்பாவிட்டாலும் அதை எதிர்க்கவில்லை. பிப்ரவரி 8 அன்று, ஐரோப்பிய மற்றும் யூரேசிய விவகாரங்களுக்கான அமெரிக்க துணை அமைச்சர் கரேன் டான்ஃபிரைட், ’யுக்ரேன் நெருக்கடியில் இந்தியாவின் நிலைப்பாட்டால் அமெரிக்கா அசௌகரியமாக உணரவில்லை’ என்று ஒரு தொலைதொடர்பு ஊடகத்திடம் கூறினார்.

“இந்தியாவுக்கு எதிராக எந்த வகையான தடைகள் பற்றியும் அமெரிக்கா சிந்திக்கவில்லை என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இந்தியாவுடனான எங்கள் உறவு மிகவும் முக்கியமானது,” என்று அவர் குறிப்பிட்டார்.

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் விவகாரத்தில் கூட வெளியுறவு அமைச்சர் எந்தவிதமான மூடிமறைத்தலும் இல்லாமல் இந்தியாவின் பக்கத்தை முன்வைத்து வருகிறார். இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் நல்ல ஒப்பந்தம் கிடைக்கும் இடத்தில் இருந்து எண்ணெய் வாங்கும் என்று கடந்த ஆண்டு டிசம்பரில் எஸ் ஜெய்சங்கர் நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்.

“ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் விஷயத்தில் எங்கள் நிறுவனங்களுக்கு எந்த அறிவுறுத்தலும் வழங்க முடியாது என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். எங்கே நல்ல ஆப்ஷன் கிடைக்கிறதோ, அங்கே அவர்கள் ஒப்பந்தம் செய்துகொள்வார்கள். இது சந்தையைப் பொருத்தது. இது ஒரு நாசூக்கான கொள்கை. இந்தியர்களுக்கு நல்லது செய்யும் ஒப்பந்தத்துடன் நாங்கள் செல்வோம். அதைத்தான் நாங்கள் செய்ய முயற்சிக்கிறோம்,” என்று அவர் தெரிவித்தார்.

யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை ஜனநாயகம் மற்றும் திறந்த உலகத்தின் மீதான தாக்குதல் என்று அமெரிக்கா விவரிக்க முயன்றது, ஆனால் இந்த முயற்சி வெற்றிபெறவில்லை. அமெரிக்காவின் இந்த சிந்தனையுடன் இந்தியா சேரவில்லை. ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளை முக்கியமாக மேற்குலக நாடுகளே விதித்தன.

ஜப்பான், தென் கொரியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய மூன்று ஆசிய நாடுகள் மட்டுமே யுக்ரேனுக்கு எதிரான மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளில் இணைந்துள்ளன. சீனா உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரம் மற்றும் ரஷ்யாவிற்கு எதிரான மேற்கத்திய தடைகளை அது நிராகரித்துள்ளது. இந்தியாவும் ரஷ்யாவுடனான வர்த்தகத்தை நிறுத்தவில்லை, இதன் விளைவாக மேற்கத்திய தடைகள் அதிகம் வெற்றியடையவில்லை.

யுக்ரேன் நெருக்கடியானது பனிப்போருக்குப் பிறகு ஏற்பட்ட மிக முக்கியமான உலகளாவிய நெருக்கடி என்று கூறப்படுகிறது. கடந்த 30 ஆண்டுகளில் ரஷ்யாவைத் தவிர மேற்கு நாடுகளுடனும் இந்தியா உறவுகளை மேம்படுத்தியுள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் யாருடைய பக்கமும் நிற்பது இந்தியாவுக்கு அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை.

விதி அடிப்படையிலான உலகத்தைப் பற்றி பேசுவதற்கு அமெரிக்காவிற்கு தார்மீக உரிமை இல்லை என்பதையும் பலர் சுட்டிக்காட்டுகின்றனர்.

அமெரிக்கா ஒரு விதி அடிப்படையிலான உலகத்தை நம்பினால், அது யேமனில் செளதி அரேபியாவை தடுத்து நிறுத்தியிருக்கும், கோலன் மற்றும் கிழக்கு ஜெருசலேமில் இஸ்ரேலை தடுத்து நிறுத்தியிருக்கும், சிரியாவில் துருக்கியை தடுத்து நிறுத்தியிருக்கும். இராக், ஆப்கானிஸ்தான் மற்றும் லிபியாவில் தன்னை தானே தடுத்து நிறுத்திக் கொண்டிருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் விஷயத்தில் மக்கள், அமெரிக்காவின் தார்மீக பகுத்தறிவை அதன் கடந்த காலத்தின் கண்ணாடியில் பார்க்கிறார்கள். விதிமுறை என்பது ரஷ்யாவிற்கு மட்டும் இருக்க முடியாது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

தென்னாப்பிரிக்காவில் ரேடியோ 702 இல் பிரபலமான மற்றும் செல்வாக்கு மிக்க பேச்சு நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கிளமென்ட் மன்யதேலா ஆவார். அவர் தனது நிகழ்ச்சியில் யுக்ரேன் நெருக்கடி குறித்தும் பல கேள்விகளைக் கேட்கிறார். யுக்ரேனைத் தாக்குவது அவசியம் என்று புதின் ஏன் கருதினார்? யுக்ரேனுக்கு ஆயுதம் கொடுத்து நேட்டோ போரைத் தூண்டுகிறதா? அமெரிக்காவே பல நாடுகளை தாக்கியுள்ள நிலையில், மற்ற உலக நாடுகள் அதன் பேச்சை ஏன் கேட்க வேண்டும்?

“இராக்கை அமெரிக்கா தாக்கியது. லிபியாவைத் தாக்கியது. இந்தத் தாக்குதல்கள் தொடர்பாக அமெரிக்கா தனது சொந்த வாதங்களைக் கொண்டுள்ளது. இந்த வாதங்களில் எனக்கு உடன்பாடில்லை. இப்போது உலகம் முழுவதையும் ரஷ்யாவுக்கு எதிராக திருப்ப அமெரிக்கா முயற்சிக்கிறது. இதுவும் ஏற்றுக்கொள்ள முடியாதது. வேறு எந்த நாட்டையும் தாக்குவதன் லாஜிக் எனக்கு இன்னும் புரியவில்லை. உண்மையைச் சொல்வதானால், அமெரிக்கா நம்மை அச்சுறுத்துவதாகத் தெரிகிறது,” என்று வாஷிங்டன் போஸ்ட்டிடம் கிளெமென்ட் மன்யதேலா கூறினார்.

“யுக்ரேன் நெருக்கடியால் உலகம் ஆழமாக பிளவுபட்டுள்ளது. இதனுடன், மாறிவரும் உலக ஒழுங்கில் அமெரிக்காவிற்கும் ஒரு வரம்பு உள்ளது என்பதையும் இது காட்டியது. இதற்கு உறுதியான உதாரணங்கள் உள்ளன. புதினை தனிமைப்படுத்தும் முயற்சி தோல்வியடைந்துள்ளது.

புதினை தனிமைப்படுத்த சீனாவும் இரானும் ஒத்துழைக்காது என்பது எதிர்பார்த்த விஷயம்தான். ஆனால் யுக்ரேன் நெருக்கடிக்குப் பிறகு ரஷ்யாவுடனான தனது வர்த்தகம் 400% அதிகரித்துள்ளது என்று இந்தியா கடந்த வாரம் அறிவித்தது,” என்று வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது..

ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோஃபை, ஒன்பது ஆப்பிரிக்க நாடுகள் வரவேற்றன. லாவ்ரோஃப்பை வரவேற்க தென்னாப்பிரிக்க வெளியுறவு அமைச்சர் நலேடி பண்டோரும் வந்திருந்தார். பண்டோரா ரஷ்யாவை தனது நண்பர் என்று அழைத்தார்.

“யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் சர்வாதிகாரத்திற்கும் ஜனநாயகத்திற்கும் இடையிலான போர் என்று பைடன் நினைக்கிறார். ஆனால் அது அப்படி இல்லை. தென்னாப்பிரிக்கா, இந்தியா மற்றும் பிரேசில் ஆகியவை ரஷ்யாவிற்கு எதிரான மேற்கத்திய முகாமில் சேர மறுத்தன,” என்று ஜோஹேனஸ்பர்க்கை தளமாகக் கொண்ட ’டெமாக்ரஸி வொர்க்ஸ் ஃபவுண்டேஷனின்’ தலைவர் வில்லியம் கமேதே, வாஷிங்டன் போஸ்ட்டிடம் கூறினார்.

ஒருபுறம், யுக்ரேன் மீதான ரஷ்ய தாக்குதலை விதி அடிப்படையிலான சர்வதேச அமைப்பு மற்றும் ஜனநாயகத்திற்கு எதிரானது என்று அமெரிக்கா விவரிக்க முயல்கிறது. மறுபுறம், யுக்ரேன் மீதான தாக்குதலை நேட்டோவுடனான போர் என்று புதின் அழைக்கிறார். இந்த சண்டை,மேற்கு மற்றும் உலகின் பிற பகுதிகளுக்கு இடையிலானது என்ற தோற்றத்தை அளிக்க ரஷ்யா முயற்சிக்கிறது.

டாக்டர். ராஜன் குமார் டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் ரஷ்ய மற்றும் மத்திய ஆசிய ஆய்வுகள் மையத்தில் இணைப் பேராசிரியராக உள்ளார். “யுக்ரேன் மீதான ரஷ்ய தாக்குதலை ஜனநாயகத்திற்கும் சர்வாதிகாரத்திற்கும் இடையிலான சண்டையாக அமெரிக்கா காட்ட முயன்றது, ஆனால் உலகளாவிய தெற்கு நாடுகள் அதை நம்பவில்லை,” என்று டாக்டர். ராஜன் குமார் கூறுகிறார்,

செளதி அரேபியாவில் மன்னராட்சி முறை உள்ளது என்பதும், அமெரிக்கா தனது நலன்களுக்காக அந்த நாடு கூறும் அனைத்தையும் கடைப்பிடிக்கிறது என்பதும் அனைவரும் அறிந்ததே. யுக்ரேன் மீதான தாக்குதலால் ஒட்டுமொத்த உலகமும் ரஷ்யாவுக்கு எதிராக திரும்பியுள்ளது என்றும் சொல்ல முடியாது.

உலக மக்கள்தொகையில் சுமார் 36 சதவிகிதம் பேர் இந்தியாவிலும் சீனாவிலும் வாழ்கின்றனர், இரு நாடுகளும் ரஷ்யாவுக்கு எதிரானவை அல்ல. இந்தோனேஷியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் கூட அமெரிக்காவின் பேச்சைக் கேட்கவில்லை.

மறுபுறம், யுக்ரேன் மீதான தாக்குதலில் ரஷ்யாவிற்கு எதிரான கண்டனத்தீர்மானம் மீது ஐக்கிய நாடுகள் சபையில் நடந்த வாக்களிப்பில் 193 நாடுகள் பங்கேற்றதாகவும், அவற்றில் 141 நாடுகள் ரஷ்யாவிற்கு எதிராக வாக்களித்ததாகவும் அமெரிக்கா வாதிடுகிறது. இந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, யுக்ரேன் நெருக்கடியில் பெரும்பாலான நாடுகள் மேற்குலகுடன் இருப்பதாகவே தெரிகிறது. ஆனால் ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளில் 33 நாடுகள் மட்டுமே சேர்ந்துள்ளன. மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு வாழும் நாடுகள் ரஷ்யாவை கண்டனம் செய்ய மறுத்துவிட்டன.

“141 நாடுகளின் ஆதரவைப் பற்றி பேசப்பட்டு வரும் நிலையில், இதில் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கை இல்லாத நாடுகள் அதிக அளவில் உள்ளன. அவர்களை உருட்டி மிரட்டி தங்கள் பக்கம் வர வைக்க முடியும்,” என்று டாக்டர் ராஜன் குமார் குறிப்பிட்டார்.

யுக்ரேன் மீதான ரஷ்ய தாக்குதல் தொடர்பான மோதி அரசின் வெளியுறவுக் கொள்கை சுதந்திரமானது மற்றும் நெருகுதல் இல்லாதது என்று டாக்டர் ராஜன் குமார் விவரிக்கிறார். இந்தியாவின் வெளியுறவு விவகாரங்களில் இதுபோன்ற மூன்று காலகட்டங்கள் இருந்தன. இங்குள்ள அரசு அமெரிக்காவின் அழுத்தத்திற்கு அடிபணிய மறுத்து நாட்டின் நலன்களை வலுவாகப் பாதுகாத்ததாக அவர் கூறுகிறார்.

“மேற்கத்திய மேலாதிக்கத்திற்கு அடிபணிய மறுத்தார் நேரு. அணிசேரா பாதையை நேரு நாடினார். ஆயினும் சோவியத் யூனியனுடன் நட்புறவு கொண்டார். இது அமெரிக்காவுக்குப் பிடிக்கவில்லை. ஆனால் நேரு அதைப் பற்றி கவலைப்படவில்லை.

வங்கதேசத்தை பாகிஸ்தானில் இருந்து பிரித்த போது அமெரிக்கா அதை எதிர்த்தது. இந்திரா காந்தியும் மிகுந்த தைரியத்துடனும் புத்திசாலித்தனத்துடனும் செயல்பட்டார்.

யுக்ரேன் மீதான ரஷ்ய தாக்குதலில் மேற்குலகின் அழுத்தத்தை ஒரு இம்மியளவும் மோதி ஏற்கவில்லை. மோதியின் துணிச்சலைப் பார்க்கும்போது இதன் வழியையும் நேருதான் காட்டியுள்ளார். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் அணிசேராக் கொள்கையின் தொடர்ச்சி இருக்கிறது,” என்று ராஜன் குமார் கூறுகிறார்.

யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் மாறிவரும் உலக முறைமையாகவும் பார்க்கப்படுகிறது. இதில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க இந்தியா முயற்சிக்கிறது.

2008 இல் ஜார்ஜியா போர் மற்றும் 2014 இல் யுக்ரேனிலிருந்து கிரைமியாவை பிரித்து ரஷ்யாவுடன் இணைத்தது ஆகியவை மாறிவரும் உலக ஒழுங்கின் ஆரம்ப அறிகுறிகளாக பார்க்கப்பட்டன. பின்னர் அமெரிக்கா தனது படைகளை ஆப்கானிஸ்தானில் இருந்து திரும்பப்பெற்று, தாலிபன்களுக்கு எதிரான 20 ஆண்டுகால போரை தாலிபன்களிடமே ஒப்படைத்தது.

2022ம் ஆண்டு ரஷ்யா மீண்டும் யுக்ரேன் மீது தாக்குதல் நடத்தியது. இவை அனைத்தும் மாறிவரும் உலக ஒழுங்கோடு இணைத்து பார்க்கப்படுகின்றன. ஏனெனில் அமெரிக்கா அவற்றைத் தடுக்கத் தவறிவிட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.