;
Athirady Tamil News

தோனி, அபிஷேக் பச்சன் பெயரில் ‘கிரெடிட் கார்டு’ வாங்கி பல லட்சம் மோசடி: 5 பேர் கைது!!

0

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக பெரும்பாலான மக்கள் டிஜிட்டல் முறையிலான பண பரிவர்த்தனைக்கு மாறிவிட்டனர். இதன் எதிரொலியாக தற்போது இணைய மோசடி குற்றங்கள் (சைபர் கிரைம்) அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் டெல்லியை சேர்ந்த ஒரு கும்பல் சினிமா மற்றும் கிரிக்கெட் பிரபலங்களின் பான்கார்டு விவரங்களை பயன்படுத்தி போலி கிரெடிட் கார்டுகளை பெற்று பல லட்சம் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இணையதளத்தில் இருந்து பிரபலங்களின் ஜி.எஸ்.டி அடையாள எண்கள் மூலமாக அவர்களது பான்கார்டு விவரங்களை தெரிந்து கொண்ட கும்பல் அதன் மூலமாக பிரபலங்களின் பெயர்களிலேயே கிரெடிட் கார்டுகளை பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளது.

இந்த கும்பல் பாலிவுட் நட்சத்திரங்களான அபிஷேக் பச்சன், ஷில்பா ஷெட்டி, மாதுரி திக்ஷித், எம்ரான் ஹஷ்மி மற்றும் பிரபல கிரிக்கெட் வீரர் தோனி உள்ளிட்டோரின் பெயரை பயன்படுத்தி, புனேவை சேர்ந்த ‘ஒன்கார்டு’ என்ற நிறுவனத்திடம் இருந்து கிரெடிட் கார்டுகளை வாங்கியுள்ளது. கிரெடிட் கார்டுகளை வழங்கிய ‘ஒன்கார்டு’ நிறுவனம் இந்த மோசடியை கண்டு பிடிப்பதற்கு முன்பாகவே அந்த கும்பல் சில கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி ரூ.21.32 லட்சம் மதிப்பில் பொருட்களை வாங்கிவிட்டது.

இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்ததும் அந்த நிறுவனம் உடனடியாக டெல்லி போலீசில் புகார் அளித்தது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணையை தொடங்கினர். அதனை தொடர்ந்து இந்த நூதன மோசடியில் ஈடுபட்ட டெல்லியை சேர்ந்த 5 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மோசடி குறித்து போலீசார் கூறுகையில், “ஜி.எஸ்.டி அடையாள எண்களில் முதல் 2 இலக்கங்கள் மாநிலக் குறியீடு என்பதையும் அடுத்த 10 இலக்கங்கள் பான்கார்டு எண் என்பதையும் நன்கு அறிந்திருந்த அந்த கும்பல் இணையதளத்தில் இருந்து பிரபலங்களின் பான்கார்டு விவரங்களை பெற்றுள்ளனர்.

அதே பாணியில் ஆதார்கார்டு விவரங்களையும் பெற்ற அந்த கும்பல் இரண்டையும் சேர்த்து பிரபலங்களின் பெயர், பிறந்த தேதி உள்ளிட்டவற்றுடன் தங்கள் புகைப்படத்தை இணைத்து, கிரெடிட்கார்டுக்கு விண்ணபித்துள்ளனர். அதை நம்பி ‘ஒன்கார்டு’ நிறுவனமும் அவர்களுக்கு ரூ.10 லட்சம் வரையிலான கடன் வரம்பு கொண்ட கிரெடிட் கார்டுகளை வழங்கியுள்ளது. இது குறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறோம்” என கூறினர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.