;
Athirady Tamil News

முதல்-அமைச்சர் ரங்கசாமி மீது முன்னாள் முதல்-அமைச்சர்-நாராயணசாமி கடும் தாக்கு!!

0

புதுவை மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய- மாநில அரசுகளை கண்டித்து தொகுதி வாரியாக பாதயாத்திரை நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக லாஸ்பேட்டை தொகுதியில் பாதயாத்தரை நடைபெற்றது. வைத்தியநாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மகாவீர் நகரில் தொடங்கிய பாதயாத்திரையை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- நாட்டில் 40 சதவிகிதம் பேர் வேலையில்லாமல் உள்ளனர். காங்கிரஸ் ஆட்சியில் ரூ,65 ஆக இருந்த பெட்ரோல் விலை தற்போது ரூ.100 ஆக உயர்ந்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் சமையல் எரிவாயுவிற்கு மானியம் கொடுக்கப்பட்டது. ஆனால் தற்போது சமையல் எரிவாயு விலை ரூ, 1150 என உயர்த்தப்பட்டுள்ளது, மானியமும் இல்லை. உலக அரங்கில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் நம் நாட்டில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது. அதானிக்காக மத்திய பா.ஜனதா ஆட்சி செயல்படுகிறது.

அதானிக்கு 13 துறைமுகங்கள், 6 விமான நிலையங்கள் தாரை வார்க்கப்பட்டுள்ளது. சோலார் மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்வதும் அவரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. புதுவையில் முதல் -அமைச்சர் ரங்கசாமி தலைமையில் டுபாக்கூர் ஆட்சி நடைபெறுகிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் புதுவை மக்களுக்கு அனைத்து திட்டங்களையும் கொடுப்போம் என பா.ஜனதா வாக்குறுதி கொடுத்தது. மாநில அந்தஸ்தை கொடுப்போம், சுற்றுலாவை வளர்ப்போம், வியாபாரத்தை பெருக்கு வோம் என்றார்கள். ஆனால் ஒன்று கூட நடக்கவில்லை. ஆனால், பா.ஜனதா- என்ஆர். காங்கிரஸ் ஆட்சியில் எல்லா துறைகளிலும் ஊழல் மட்டும் நடக்கிறது. கலால்துறை, பொதுப்பணித் துறை, உள்ளாட்சித்துறை, காவல்துறை என அனைத்து துறையிலும் ஊழல் நடைபெறுகிறது, புதுவையில் வளர்ச்சி இல்லை.

மக்கள் நலத்திட்டங் கள் முடக்கப்பட்டுள்ளன. பா.ஜனதா எம்.எல்.ஏ. புதுவையில் பா.ஜனதா ஆட்சி அமைப்போம் என கூறுகிறார். முன்னுக்கு பின் முரணான கூட்டணியாக உள்ளது. புதுவையில் தடுக்கி விழுந்தால் மதுபானக்கடையில் தான் விழ வேண்டும். புதுவையில் மதுபான கடைகளை திறந்து புதுவை கலாச்சாரத்தை முதல்-அமைச்சர் ரங்கசாமி சீரழித்துவிட்டார். கஞ்சா, போதை பொருள் அதிகரித்து விட்டது. எனவே, மக்கள் இந்த ஆட்சியை தூக்கி எறிய வேண்டும்.

இவ்வாறு நாராயணசாமி பேசினார். பாதயாத்திரையில் மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன், வைத்திலிங்கம் எம்.பி. முன்னாள் அமைச்சர்கள் ஷாஜகான், கந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. அனந்தராமன், சீனியர் துணை தலைவர் தேவதாஸ், பொதுசெயலாளர் கருணாநிதி சிறப்பு அழைப்பாளர் வினோத் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஊர்வலம் மகாவீர்நகர் போலீஸ் நிலையம், உழவர்சந்தை, குளுனி பள்ளி வழியாக ஜீவானந்தபுரத்தில் வந்து நிறைவடைந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.