மத்திய கிழக்கு பதற்ற நிலையால் இலங்கையின் பொருளாதாரத்துக்கு என்ன நடக்கும்?

ரொபட் அன்டனி
இலங்கையின் பொருளாதாரம் தற்போதைய நிலையில் குறிப்பிடத்தக்க ஸ்திரத்தன்மையுடன் பயணிப்பதை அவதானிக்க முடிகிறது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள ஏப்ரல் மாதத்துக்கான வெளிநாட்டு வர்த்தகக் குறிகாட்டிகள் வர்த்தகம் ஒரு நிலையான சூழலில் சென்று கொண்டிருப்பதைக் காட்டுகின்றன. மேலும் இலங்கை வந்த நாணய நிதியத்தின் முதல் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத்தும் இலங்கையின் மீள் வருகை உலக நாடுகளுக்கு சிறந்த முன்னுதாரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் சவால்கள் இன்னும் நீடிக்கின்றன. குறிப்பாக, மத்திய கிழக்கில் தற்போது நிலவும் போர் மற்றும் பதற்ற நிலைமை இலங்கையின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்தப் பதற்ற நிலைமையினால் எழும் சவால்களை சரியான முறையில் முகாமைத்துவம் செய்வதற்கான நடவடிக்கைகள் அரசாங்கத்தால் எடுக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமையினால், மசகு எண்ணெயின் விலை அதிகரித்துள்ளது. இது இலங்கையின் வர்த்தகத்திலும் பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஏனெனில், ஒரு நாட்டின் அனைத்து பொருளாதாரச் செயற்பாடுகளும் மசகு எண்ணெயின் விலையிலேயே தங்கியுள்ளன. இன்றைய உலகப் பொருளாதாரத்தில், மசகு எண்ணெய் விநியோகத்தில் மத்திய கிழக்கு நாடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே, அங்கு ஏற்படும் போர் நிலைமை மற்றும் பதற்றங்கள் எண்ணெய் வர்த்தகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இது இலங்கை போன்ற நாடுகளுக்கு நெருக்கடியைக் கொடுக்கும்.
அதுமட்டுமன்றி எண்ணெய் விநியோகத்தில் தாமதங்கள், விநியோகச் செலவு அதிகரிப்பு மற்றும் விநியோக ஸ்தம்பிதம் போன்ற நெருக்கடிகள் ஏற்படலாம். எண்ணெய் விலை அதிகரிக்கும்போது, இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும். உதாரணமாக, எண்ணெய் விலை அதிகரிக்கும்போது, உற்பத்திச் செலவு அதிகரிப்பதால் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும், போக்குவரத்துக் கட்டணங்கள் உயரும், மின்சாரக் கட்டணங்கள் உயர்வடையும். இது பணவீக்கத்துக்கு வழிவகுத்து, மக்களின் வாழ்க்கைத் தரத்தைப் பாதிக்கும். எனவே, இவ்வாறான சூழ்நிலைக்கு இலங்கை சரியாகத் திட்டமிட்டு முகங்கொடுக்க வேண்டியுள்ளது. மேலும் தற்போது மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றமானது இலங்கையின் டொலர் உள்வருகையிலும் தாக்கத்தை செலுத்தும். காரணம் இஸ்ரேலில் இலங்கையர்கள் பணிபுரிகின்றனர். அதேபோன்று ஈரானில் அதிகளவானோர் பணிபுரியாவிட்டாலும் கூட அதனை சுற்றியுள்ள மத்திய கிழக்கு நாடுகளில் அதிகளவு இலங்கையர்கள் பணிபுரிகின்றனர். எனவே இங்கு பதற்றம் அதிகரிக்கும் பட்சத்தில் மத்திய கிழக்கில் பணிபுரிகின்ற இலங்கையர்களின் செயற்பாடுகளிலும் தாக்கம் அதிகரிக்கும். அது இலங்கைக்கு அனுப்பப்படுகின்ற அந்நிய செலாவணியில் சிக்கலைக் கொண்டுவரும். தற்போது வருடம் ஒன்றுக்கு ஆறு பில்லியனுக்கும் அதிகளவான டொலர்கள் மத்திய கிழக்கில் பணிபுரிகின்ற இலங்கையர்களினால் அனுப்பப்படுகின்றன. மத்திய கிழக்கில் ஏற்படும் பதற்றம் மத்திய கிழக்கில் பணிபுரிகின்ற இலங்கையர் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும். 90களில் இடம்பெற்ற மத்திய கிழக்கு பிரச்சினையின் போது இவ்வாறான சிக்கல் ஏற்பட்டது. அதனால் இந்த நிலைமைகளுக்கு முகம்கொடுக்கக் கூடிய வகையில் இலங்கை தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
இது இவ்வாறிருக்க தற்போதைய நிலைவரப்படி, இலங்கையின் பொருளாதாரக் குறிகாட்டிகள் ஒரு ஸ்திரமான நிலையை நோக்கிப் பயணிப்பதைக் காட்டுகின்றன. இலங்கை வளர்ச்சிப் பாதையில் உள்ளது என்பதை சில தரவுகள் உறுதிப்படுத்துகின்றன:
ஏப்ரல் 2025இல் இலங்கையின் வெளிநாட்டு வர்த்தக நிலைவரத்தை அவதானிக்கும் போது, ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இடையிலான வித்தியாசம் 717 மில்லியன் அமெரிக்க டொலர்களாக எதிர்மறையாகக் காணப்படுகிறது. அதாவது, ஏப்ரலில் இலங்கை 968 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஏற்றுமதி செய்திருக்கின்றது. அதே மாதத்தில், இலங்கை 1,686 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு இறக்குமதி செய்திருக்கிறது. எப்போதும் இலங்கையில் ஏற்றுமதி வருமானத்தை விட இறக்குமதி செலவே அதிகரித்து காணப்படும் நிலையில், இம்முறையும் அதே நிலைமை காணப்படுகிறது.
சுற்றுலாத்துறை ஊடான வருமானமும் அதிகரித்துள்ளது. ஏப்ரல் 2025 இல் 174,608 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திருக்கின்றனர். இது ஏப்ரல் 2024 இல் பதிவான 148,000 சுற்றுலாப் பயணிகளுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பாகும். ஏப்ரல் மாதத்தில் சுற்றுலாத்துறை மூலம் 257 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் அனுப்பும் அந்நிய செலாவணியின் அளவும் அதிகரித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் 646 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அந்நிய செலாவணியாக இலங்கைக்குக் கிடைத்துள்ளன. இந்த இரண்டு துறைகளின் வருமானமும் ஏற்றுமதி- இறக்குமதிக்கு இடையிலான வர்த்தகப் பற்றாக்குறையை ஈடுசெய்ய உதவுகிறது.
எனினும் ரூபாவின் பெறுமதியில் ஒரு வீழ்ச்சி அவதானிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் ஒரு அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் மதிப்பு 292 ரூபாவாகக் காணப்பட்டது. ஆனால் தற்போது, ஒரு அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் மதிப்பு 299 ரூபாவாகக் காணப்படுகிறது. இது சுமார் 2.3 சதவீத வீழ்ச்சியாகும்.
இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 6.3 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. இதில் சீன மக்கள் வங்கியுடன் மேற்கொள்ளப்பட்ட 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பரஸ்பர பரிமாற்றல் வசதியும் அடங்கும். இருப்பினும், வருட ஆரம்பத்தில் காணப்பட்ட வெளிநாட்டு கையிருப்புடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி அவதானிக்கப்படுகிறது.
ஏப்ரல் 2025இல் இறக்குமதி செலவுகள் அதிகரிப்பதற்கான ஒரு காரணம், தற்போது வாகன இறக்குமதி நடைமுறையில் இருப்பதுதான். வாகன இறக்குமதிக்கு அதிக அளவில் டொலர்கள் வெளியே செல்வதால், இறக்குமதிச் செலவு அதிகரித்துள்ளது.
இலங்கையின் பொருளாதாரம் குறிப்பிடத்தக்க வகையில் பயணித்துக் கொண்டிருந்தாலும், மிக வேகமான வளர்ச்சி வீதம் ஒன்று தற்போது இலங்கைக்குத் தேவைப்படுகிறது. தற்போது இலங்கை வெளிநாட்டு கடன்களை மீளச் செலுத்துவதில்லை. இந்தக் கடன் தவணைகள் செலுத்தப்படாமையினால், மாதாந்தம் கிடைக்கும் டொலர்கள் மற்றும் வெளியேறும் டொலர்களைக் கொண்டு நிலைமையை சமாளிக்கக்கூடியதாக உள்ளது. சுற்றுலாத்துறை வருமானம் மற்றும் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் அனுப்பும் வருமானம் போன்றவற்றினால் தற்போதைய நிலைமையை சமாளிக்க முடிகிறது.
ஆனால், 2027 ஆம் ஆண்டிலிருந்து இலங்கை வருடம் ஒன்றுக்கு கிட்டத்தட்ட 4 அல்லது 5 பில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடனாகச் செலுத்த வேண்டியிருக்கும். இது ஒரு மிகப்பெரிய நெருக்கடியாக மாறும். தற்போதைய சூழலில், வருடம் ஒன்றுக்கு ஏற்றுமதி வருமானமாக 12 பில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இறக்குமதி செலவு 22 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்வடையும் போது, 10 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வித்தியாசம் இருக்கும்.
சுற்றுலாத்துறை மூலம் 4 பில்லியன் அமெரிக்க டொலர்களும், வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் அனுப்பும் அந்நிய செலாவணி மூலம் 6 பில்லியன் அமெரிக்க டொலர்களும் இலங்கைக்குக் கிடைக்கும். இவை இரண்டும் சேர்ந்து சுமார் 10 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டுவதால் ஏற்றுமதி- , இறக்குமதி செலவு இடைவெளியை நிரப்ப முடியும். இங்கு பொருளாதார வளர்ச்சியை அதிகரித்துக்கொள்வது அவசியமாகும்.
மக்கள் அதிக அளவில் பொருளாதாரச் செயற்பாடுகளில் ஈடுபடுவது அவசியம். அப்போதுதான் ஏற்றுமதி அதிகரிக்கும். ஏற்றுமதி உற்பத்திகளில் இலங்கை அதிகளவில் ஈடுபட வேண்டும். ஏற்றுமதி வருமானம் அதிகரிக்கப்பட வேண்டும். சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்க வேண்டும். வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் சட்டரீதியாக டொலர்களை அனுப்ப வேண்டும். சேவை ஏற்றுமதியை இலங்கை அதிகரித்துக் கொள்வதும் அவசியமாகின்றது.இவற்றின் மூலமாகவே இலங்கை தனது டொலர் உள்வருகையை அதிகரித்துக் கொள்ள முடியும். அப்போதுதான் 2027 ஆம் ஆண்டிலிருந்து இலங்கை கடன்களை மீளச் செலுத்த முடியுமான சூழல் ஏற்படும்.
எந்தக் காரணம் கொண்டும் மத்திய வங்கியில் கையிருப்பில் காணப்படும் டொலர்களைக் கொண்டு கடன்களைச் செலுத்த முடியாது. 2022ஆம் ஆண்டு இந்தத் தவறு விடப்பட்டது. அந்த நிதியானது எப்போதும் ஒரு மூன்று மாதத்துக்கான அவசரத் தேவைகளைச் சமாளிப்பதற்காகப் பயன்படுத்தப்பட வேண்டும். எனவே, வெளிநாட்டுக் கையிருப்பைக் கொண்டு வெளிநாட்டுக் கடன்களை மீளச் செலுத்த முடியாது. அந்தத் தவறை மீண்டும் செய்யக்கூடாது. எனவே, பொருளாதார வளர்ச்சி அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கிறது.
இந்தச் சூழலிலேயே மத்திய கிழக்கில் ஏற்பட்டிருக்கும் பதற்ற நிலை நாட்டின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பொருளாதார நிபுணர்களின் கருத்தாக அமைந்திருக்கிறது. நிச்சயமாக மத்திய கிழக்கில் ஏற்பட்டிருக்கும் இந்தப் பதற்ற நிலையைச் சரியான முறையில் இலங்கை ஆராய்ந்து, அதனை எதிர்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திடீரென எரிபொருட்களின் விலைகள் பாரியளவில் அதிகரிக்கும்பட்சத்தில், அதனை இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்து வரும் பொருளாதாரங்களால் தாங்கிக் கொள்ள முடியாது. அதுமட்டுமன்றி, வான் போக்குவரத்து மற்றும் கடல் போக்குவரத்தில் சிக்கல்கள், விநியோகச் சங்கிலி தாமதம் போன்ற பல நெருக்கடிகள் தோன்றும். இவை அனைத்தையும் சரியான முறையில் திட்டமிட்டு இலங்கை முகாமைத்துவம் செய்ய வேண்டியிருக்கிறது.
இவற்றில் சரியான முறையில் விடயங்களை இனங்கண்டு, அவற்றை திட்டமிட்டு, உரிய வகையில் அந்தப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து பதிலளிக்க வேண்டும். அப்போதுதான் நெருக்கடியைச் சமாளித்து மேலே வர முடியும். எனவே, மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடியின் விளைவாக அரசாங்கம் எவ்வாறு அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்கப்போகிறது என்ப தில்தான் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியும், பொருளாதார நிலைமைகளும் தங்கியுள்ளன.
இலங்கைக்கு வந்துள்ள நாணய நிதியத்தின் பிரதிநிதி கீதா கோபிநாத்தும் உலகின் தற்போதைய நிச்சயமற்ற நிலை தொடர்பாக சுட்டிக்காட்டியிருக்கிறார். மேலும் இலங்கை சரியான முறையில் தனது ஆற்றலைப் பயன்படுத்தி சீர்திருத் தங்களை மேற்கொள்ளும் போது நாணய நிதியத்தை தொடர்ந்து நம்பியிருக்க வேண்டிய சூழல் ஏற்படாது என்றும் குறிப்பிட்டிருக்கிறார். அதற்கேற்ற வகையில் இலங்கை பயணிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.