20 ஆண்டுகளாக கோமாவில் இருந்த சௌதி இளவரசர் கண் விழித்தாரா? வைரலாகும் விடியோ

சௌதி அரேபியாவின் அரசக் குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் அல்-வாலீத் விபத்தில் சிக்கி சுமார் 20 ஆண்டுகளாக கோமாவில் இருந்த நிலையில், அவர் கண் விழித்துப் பார்த்து, தனது குடும்பத்தாருடன் இணைந்ததாக விடியோக்கள் வைரலாகி வருகிறது.
அந்த விடியோவில், மருத்துவமனை படுக்கையில் ஒருவர் இருக்கிறார். அவர் யார் என்று அடையாளம் காணப்படவில்லை. அவரைச் சுற்றிலும் சௌதி அரேபிய கோடீஸ்வரர்கள், தொழிலதிபர்கள் சூழ்ந்துள்ளனர். இந்த விடியோ தவறானது என்றும், அல்-வாலீத் கண் விழிக்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உறங்கும் இளவரசர் என்று அழைக்கப்படும் அல்-வாலீத், ஒரு சாலை விபத்தில் சிக்கி, தலையில் படுகாயமடைந்து, கோமா நிலைக்குச் சென்றார்.
சுமார் 20 ஆண்டுகளாக அவர் கோமா நிலையிலேயே வைத்து கவனிக்கப்பட்டு வரும் நிலையில், மிகச் சரியாக 20 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் கண் விழித்ததாக ஒரு சில நாள்களுக்கு முன்பு விடியோக்கள் வெளியிடப்பட்டன.
சௌதி அரேபியாவை ஆளும் அரசக் குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் அல்-வாலீத் பின் காலெத் பின் தலால், தூங்கும் இளவரசர் என்றே அழைக்கப்படுகிறார். உண்மையில் இவர் உறங்கவில்லை. கோமாவில் இருக்கிறார். சௌதி அரேபியாவை நிறுவிய முன்னாள் மன்னர் அப்துல் அஜீஸின், கொள்ளுப்பேரன்தான் இவர்.
இவர் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 36வது பிறந்தநாளைக் கடந்துள்ளார். சரியாக 16 வயது இருக்கும்போது அதாவது கடந்த 2005-ம் ஆண்டு ராணுவக் கல்லூரியில் பயின்றுகொண்டிருந்தபோது சாலை விபத்தில் சிக்கி தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் கோமா நிலையை அடைந்தார்.
அவரது குடும்பத்தினர், அவரை சௌதி தலைநகர் ரியாத்திலுள்ள மருத்துவமனையில் உயிர் காக்கும் கருவிகள் மூலம் கடந்த 20 ஆண்டுகளாக உயிருடன் வைத்துள்ளனர்.
உயிர் காக்கும் கருவிகள் மூலம் மட்டுமே அவர் உயிருடன் இருக்கும் நிலையில், உயிர் காக்கும் கருவிகளை அகற்ற அவரது தந்தை, இளவரசர் காலெத் பின் தலால் அல் சௌத் ஒப்புக்கொள்ளவில்லை. தன் மகன் ஒரு நாள் நிச்சயம் மீண்டு வருவார் என்ற நம்பிக்கையோடு கவனித்து வருகிறார்கள்.
அவ்வப்போது அவர் உடலில் அசைவுகள் இருப்பதாக தகவல்கள் வரும், ஆனால், அவர் கோமா நிலையிலிருந்து இதுவரை மீளவில்லை. அதுபோலவே தற்போது வெளியான விடியோ தவறானது என்று தெரிய வந்துள்ளது.