;
Athirady Tamil News

பாகிஸ்தான்: ஜாஃபர் எக்ஸ்பிரஸ் மீது மீண்டும் தாக்குதல்! தடம் புரண்ட பெட்டிகள்!

0

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில், ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை குறிவைத்து அதன் பாதையில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 6 பெட்டிகள் தடம் புரண்டன.

பெஷாவரிலிருந்து பலுசிஸ்தானின் குவேட்டா நோக்கி ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று (ஜூன் 18) சென்று கொண்டிருந்தது. ஜகோபாபாத் பகுதியில் கால்நடை சந்தைக்கு அருகிலுள்ள ரயில் தண்டவாளத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலினால், ரயில் பாதையில் 3 அடி ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டதுடன், 6 அடி நீளத்துக்கு தண்டவாளம் சேதமடைந்து, ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டுள்ளன.

இந்தச் சம்பவத்தில், ரயிலின் பயணிகள் யாருக்கும் எந்தவொரு ஆபத்தும் ஏற்படவில்லை எனக் கூறப்படும் நிலையில், அந்த வழியில் தற்போது ரயில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அப்பகுதி முழுவதும் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டதுடன், தாக்குதல் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாக உள்ளூர் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

சிந்து மாகாணத்தில் நடைபெறும் தாக்குதல்களுக்கு பெரும்பாலும் பலூசிஸ்தான் லிபரேஷன் ஆர்மி எனும் அமைப்பே காரணம் எனக் கூறப்படுகிறது. இருப்பினும், இந்தத் தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

முன்னதாக, கடந்த 4 மாதங்களில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் மீது 2 – வது முறையாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 11 ஆம் தேதியன்று பலூசிஸ்தான் தீவிரவாதிகளால் இந்த ரயிலானது கடத்தப்பட்டது.

பின்னர், பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்ட அதிரடி தாக்குதல் நடவடிக்கைகளின் மூலம் 33 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டு, ரயிலும் அதன் பயணிகளும் மீட்கப்பட்டனர். ஆனால், 21 பயணிகள் மற்றும் 4 ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.