;
Athirady Tamil News

நாளை முதல் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வருகிறது சென்னை அண்ணா நகர் டவர்!!

0

சென்னை அண்ணா நகரில் உள்ள ‘டவர்’ பூங்கா மிகவும் பழமையான பூங்காக்களில் ஒன்று ஆகும். இந்த பூங்கா அமைக்கும் பணி 1960ம் ஆண்டு தொடங்கப்பட்டு 1968ம் ஆண்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. இந்த பூங்காவில் 135 அடி உயர கோபுரம் உள்ளது. அண்ணாநகரின் முக்கிய அடையாளமாக இந்த ‘டவர்’ பூங்கா திகழ்ந்து வந்தது. பொதுமக்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டு இருந்த இந்த கோபுரத்தின் மேலே பொதுமக்கள் ஏறிச்சென்று சென்னை நகரின் இயற்கை அழகை ரசித்து வந்தனர். இந்த நிலையில், காதல் தோல்வி அடைந்த ஒரு சில காதலர்கள் இந்த டவரில் ஏறி கீழே குதித்து தற்கொலை செய்த சம்பவங்கள் நிகழ்ந்தது. இதையடுத்து, கடந்த 2011-ம் ஆண்டு முதல் கோபுரத்தின் மேல் ஏறிச்செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. கடந்த 12 ஆண்டுகளாக பொதுமக்கள் கோபுரத்தின் மேலே செல்ல அனுமதிக்க மறுக்கப்பட்டது.

மேலும், பூங்காவுக்கு வரும் பொதுமக்கள் நவீன பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த கோபுரம் மற்றும் பூங்காவை சீரமைத்து தர வேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மாநகராட்சி சார்பில் ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கோபுரம் நவீன பாதுகாப்பு வசதிகளுடன் சீரமைக்கப்பட்டு வந்தது. குறிப்பாக, கோபுரத்தின் பக்கவாட்டு பகுதிகள் அனைத்திலும் தடுப்பு கம்பிகள் மற்றும் இரும்பு வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளது.

கோபுரத்தின் மேலே ஏறிச்செல்லும் போது கீழே தடுமாறி விழுந்திடாத வகையில் இவை அமைக்கப்பட்டு இருக்கிறது. கோபுரத்தின் தடுப்பு சுவர் மற்றும் தூண்களில் தமிழ்நாட்டின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையிலான ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளது. தற்போது பூங்காவில் கோபுர பணிகள் அனைத்தும் முடிந்துள்ள நிலையில் நாளை இந்த கோபுரம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.