;
Athirady Tamil News

2 உயிர்களை காவு வாங்கிய அபாய நீர்வீழ்ச்சி: 30 அடி உயரத்தில் இருந்து வழுக்கி விழுந்ததால் தந்தை-மகள் பலி!!

0

சென்னை மந்தைவெளி பகுதியை சேர்ந்தவர் பாலமுரளி (வயது 43). இவர், ஐ.டி. நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி சந்திரலட்சுமி. இவர்களுக்கு சவுமியா (13), சாய் சுவேதா (3) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இவர்களில் சவுமியா சென்னையில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது 8-ம் வகுப்பு தேர்வு எழுதி இருந்தார். பள்ளி விடுமுறை விடப்பட்டதால் தனது குடும்பத்தினருடன் பாலமுரளி கடந்த வெள்ளிக்கிழமை ஏற்காட்டுக்கு சுற்றுலா வந்தார். ஏற்காட்டில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் தங்கி இருந்த அவர், குடும்பத்துடன் பல்வேறு பகுதிகளை சுற்றி பார்த்துள்ளனர். நேற்று மதியம் ஏற்காட்டில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நல்லூர் நீர்வீழ்ச்சிக்கு குடும்பத்துடன் சென்றார். இங்கு வழுக்கு பாறைகள் நிறைந்து காணப்படுவதால் அங்கு குளிப்பது ஆபத்தானது என்று வருவாய்த்துறையினர் எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.

அங்கு மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் பாலமுரளி உற்சாகமாக குளித்து மகிழ்ந்தார். இந்த மகிழ்ச்சி வெகு நேரம் நீடிக்கவில்லை. சவுமியா அங்குள்ள பாறையில் ஏறி விளையாடினாள். அப்போது உடை மாற்றும் அறை கட்டுவதற்காக நீர்வீழ்ச்சி அருகில் 30 அடி உயர பாறையில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு இருந்தன. அதில் சவுமியா ஏறினாள். மகள் ஏறுவதை பார்த்த பாலமுரளி, அங்கு செல்லாதே என்று கூறிக்கொண்டே பின்னால் அவரும் பாறையில் ஏறினார். பாறையின் உச்சிப்பகுதிக்கு சென்ற சிறுமி அங்கிருந்து எதிர்பாராதவிதமாக பாறையில் வழுக்கி கீழே விழுந்தாள். மகள் கீழே விழுந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த பாலமுரளி, மகளை பாய்ந்து பிடிக்க முயன்றார். ஆனால் அவரது முயற்சி பலனளிக்காமல் போகவே அவரும் பாறையில் இருந்து கீழே விழுந்தார். தந்தையும், மகளும் அடுத்தடுத்த பாறையில் மோதி நீர்வீழ்ச்சியில் விழுந்தனர்.

அவர்கள் இருவரது தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது தெரியவந்தது. கணவர், மகளின் உடலை கண்டு சந்திரலட்சுமி கதறி அழுத காட்சி அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது. ஏற்காடு போலீசார் இருவருடைய உடல்களையும் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 2 உயிர்களை பலி வாங்கிய இந்த நல்லூர் நீர்வீழ்ச்சியில் குறிப்பிட்ட சில மாதங்கள் மட்டுமே நீர்வரத்து இருக்கும். இதர காலங்களில் பாறைகளில் பாசி படிந்து காணப்படும். இந்த நீர்வீழ்ச்சி பாதுகாப்பில்லாதது என்பது, ஏற்காடு பகுதி மக்களுக்கு நன்றாக தெரியும். ஆனால் வெளியூரிலிருந்து ஏற்காட்டிற்கு சுற்றுலா வரும் பயணிகளுக்கு, இந்த இடத்தின் நிலை தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இதனால் அவர்கள் பாறை மீது ஏறி நீராடி மகிழ முற்படும் போது, நீர்வரத்து காரணமாக பாறையின் மேற்பரப்பில் படிந்துள்ள பாசி வெளியில் தெரிய வாய்ப்பில்லை. அதனால் வழுக்கி விழுந்து உயிரிழப்பு ஏற்படுகிறது. பாதுகாப்பில்லாத காட்டுப் பகுதிக்கு நடுவில் இந்த இடம் அமைந்துள்ளதால், பெரும்பாலும் ஆட்கள் நடமாட்டத்திற்கான வாய்ப்புகள் குறைவு. யாராவது ஆபத்தில் சிக்கி அபாயக்குரல் எழுப்பினாலும், பள்ளத்தாக்கு பகுதியென்பதாலும், தண்ணீர் பாறைகளின் மீதிருந்து ஆக்ரோசமாக விழுவதாலும், அந்த இரைச்சலில் அபாயக்குரல் கேட்பதற்கு வாய்ப்பில்லை. எனவே பாதுகாப்பு வளையங்கள் அமைத்து சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வரையிலும், இந்த நீர்வீழ்ச்சிக்கு செல்லவும், குளிக்கவும் தடை விதிக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். தந்தை, மகள் பலியானதை தொடர்ந்து நல்லூர் நீர்வீழ்ச்சியில் குளிக்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறைக்காக குழந்தைகளின் வற்புறுத்தலின்பேரில் அருவி, நீர்நிலைகளை கூகுள் மேப்பில் தேடி செல்லும் பெற்றோர்கள் அந்த அருவி, தடாகத்தின் தன்மை தெரியாமல் குளிக்கும் ஆர்வத்தில் சென்று அபாயத்தில் சிக்கி கொள்ள வேண்டாம் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.