;
Athirady Tamil News

ரஷ்யவில் வெடித்து சிதறிய பாலங்கள் ; ரயில்கள் தடம் புரண்டு 7 போ் உயிரிழப்பு

0

உக்ரைன் எல்லையையொட்டிய ரஷியாவின் பிரையன்ஸ்க் மற்றும் கூா்ஸ்க் பிராந்தியத்தில் 2 பாலங்கள் வெடிவிபத்தில் இடிந்து விழுந்ததில் 2 ரயில்கள் தடம் புரண்டன. இதில் 7 போ் உயிரிழந்தனா்; 12-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

ஆனால், வெடிவிபத்துக்கான காரணம் குறித்து இதுவரை எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை. உக்ரைன் எல்லையில் உள்ள பிரையன்ஸ்க் பிராந்தியத்தில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த முதல் வெடிவிபத்தில் பயணிகள் ரயிலின் மேல் பாலம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

தாக்குதல் சம்பவம்
இந்த விபத்து நடந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, கூா்ஸ்க் பிராந்தியத்தில் மேலும் ஒரு பாலம் வெடிவிபத்தால் இடிந்து விழுந்ததில் இரண்டாவது ரயில் தடம் புரண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

விபத்துக்குள்ளான அந்த சரக்கு ரயில் தண்டவாளத்திலிருந்து விலகி கீழே செல்லும் சாலையில் விழுந்ததாக உள்ளூா் ஆளுநா் (பொறுப்பு) அலெக்சாண்டா் கின்ஷ்டீன் தெரிவித்தாா். இந்த விபத்தில் தீ விபத்து ஏற்பட்டது. ஆனால், அதிருஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் அவா் கூறினாா்.

கடந்த காலங்களில், உக்ரைன் படையினா் ரஷியாவின் ரயில்வே உள்கட்டமைப்புகளைத் தாக்கியிருப்பதாக சில அதிகாரிகள் குற்றஞ்சாட்டுகின்றனா். எனினும், இதை உறுதிப்படுத்தும் அதிகாரபூா்வ தகவல்கள் குறைவாகவே உள்ளன.

இந்நிலையில், உக்ரைனின் ராணுவ உளவுத் துறை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், உணவு மற்றும் எரிபொருளை ஏற்றிச் சென்ற ரஷிய ராணுவ சரக்கு ரயில், கிரீமியாவுக்குச் செல்லும் வழியில் வெடித்துச் சிதறடிக்கப்பட்டதாகக் கூறியுள்ளது.

ஆனால், இத்தாக்குதல் உக்ரைனால் நடத்தப்பட்டதா என்பது குறித்தும், பாலம் இடிந்து விழுந்துள்ளது குறித்தும் அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. உக்ரைனுக்குச் சொந்தமாக இருந்த கிரீமியாவை ரஷியா கடந்த 2014-இல் கைப்பற்றி, தனது பிராந்தியமாக அறிவித்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.