காய்ச்சல் இருந்தால் பள்ளிக்கு வர வேண்டாம்!
சென்னை: தமிழகத்தில் இன்று கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டிருக்கும் நிலையில் காய்ச்சல் இருந்தால் பள்ளிக்கு வர வேண்டாம் என கடலூர் முதன்மை கல்வி அலுவலகம் அறிவுரை வழங்கியிருக்கிறது.
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திங்கள் – ஜூன் 2ஆம் தேதி திறக்கப்பட்டுள்ளன. மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வருகை தந்துள்ளனர். சுமார் ஒரு மாத காலத்துக்கும் மேலாக கோடை விடுமுறை விடபப்ட்டிருந்த நிலையில், மிக மகிழ்ச்சியோடு பெற்றோரும் தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி வத்துள்ளனர்.
முன்னதாக பள்ளிகளில் வளாகப் பராமரிப்பு, நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடுகள் பள்ளிகள் தரப்பில் முடிக்கப்பட்டு தயாா் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில், காய்ச்சல் உள்ள மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என்றும், காய்ச்சல் இருக்கும் நிலையில் பள்ளிக்கு வந்தால் மற்ற மாணவர்களுக்கும் அது பரவக்கூடாது என்பதால் முன்னெச்சரிக்கையாக கடலூர் முதன்மை கல்வி அலுவலகம் அறிவுரை வழங்கியிருக்கிறது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள 2,432 பள்ளிகளில் மாணவர்களுக்கு புத்தகங்கள், சீருடைகள் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறக்கப்பட்டுளள் முதல் நாளிலேயே அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு பாடநூல்கள், நோட்டுப் புத்தகங்கள் போன்ற நலத்திட்ட பொருள்களும் மாணவா்களுக்கு விநியோகம் செய்வதற்கான பணிகளும் தயாா்படுத்தப்பட்டுள்ளன.
புதிய பேருந்து பயண அட்டைகள் வழங்கப்படும் வரை, மாணவர்கள் தங்களிடம் உள்ள பழைய பயண அட்டையைக் கொண்டு பயணிக்கலாம் என போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதையடுத்து, பள்ளி வேலை நாள்கள், தோ்வுகள், விடுமுறை, ஆசிரியா் பயிற்சி, அட்டவணை உயா்கல்வி வழிகாட்டி முகாம் உள்பட பல்வேறு விவரங்கள் அடங்கிய 2025-2026 கல்வியாண்டுக்கான நாள்காட்டியை பள்ளிக்கல்வித் துறை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.