;
Athirady Tamil News

குடியாத்தத்தில் பக்தர்கள் வெள்ளத்தில் கெங்கையம்மன் சிரசு ஊர்வலம்- பக்தர்கள் சாமி தரிசனம்!!

0

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோபாலபுரம் கவுண்டன்ய மகாநதி கரையில் உள்ள கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழா இன்று கோலாகலமாக நடந்தது. விஷ்ணுவின் அம்சமான பரசுராமன் தனது தாயின் தலையை வெட்டி மீண்டும் உயிர்பித்த புராண கதையை நினைவுக்கூரும் விதமாக சிரசு திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது நேற்று தேரோட்டம் நடந்தது இன்று காலை 6 மணிக்கு தரணம்பேட்டையில் உள்ள முத்தியாலம்மன் கோவிலில் இருந்து கெங்கையம்மன் சிரசு பக்தர்களின் வெள்ளத்தில் புறப்பட்டது. பம்பை, உடுக்கை, சிலம்பாட்டம், புலி ஆட்டம் ஆகிய பாரம்பரிய கலைகள் முன்செல்ல, அம்மன் சிரசு ஊர்வலம் பக்தர்கள் வெள்ளத்தில் பவனியாக கொண்டு செல்லப்பட்டது. நடுப்பேட்டை, காந்திரோடு, ஜவஹர்லால் தெரு வழியாக கோபாலபுரத்தில் உள்ள கெங்கையம்மன் கோவிலை வந்தடைந்தது. சிரசு ஊர்வலம் நடைபெற்ற தரணம்பேட்டை முதல் கோபாலபுரம் வரை இருபுறமும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. வேலூர் மாவட்டத்தை சேர்ந்த மக்கள் மட்டுமின்றி ஆந்திரா மற்றும் கர்நாடகா பக்தர்களும் வந்திருந்தனர். லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்ததால் குடியாத்தம் நகரம் முழுவதும் திருவிழாக்கோலமாக காட்சி அளித்தது.

பக்தர்கள் வெள்ளத்தில் சிரசு கொண்டு செல்லப்பட்டபோது ஆங்காங்கே மரங்கள், சுற்றுச்சுவர்கள், வீட்டு மாடி மீது நின்றும் அம்மன் சிரசை பக்தர்கள் தரிசனம் செய்தனர். சிரசு ஊர்வலம் நடைபெற்ற வழிநெடுகிலும் கெங்கையம்மனுக்கு பூமாலை சாத்தியும், கற்பூரம் ஏற்றியும் தேங்காய்களை உடைத்து பக்தர்கள் வழிபட்டனர். பின்னர் கெங்கையம்மன் கோவில் சிரசு மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த இருந்த சண்டாளச்சி உடலில் அம்மன் சிரசு பொருத்தப்பட்டது. சிறப்பு பூஜைகளும், அதனைத்தொடர்ந்து கண் திறப்பு நிகழ்ச்சியும் வெகு விமரிசையாக நடந்தது. குடியாத்தம் நகரம் முழுவதும் பொதுமக்கள் மற்றும் சமூகநல ஆர்வலர்கள், பக்தர்கள், கல்வி நிறுவனங்களின் சார்பிலும் ஆங்காங்கே பந்தல்கள் அமைத்து நீர், மோர், கூழ், பானகம், குளிர்பானம், அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும் குடியாத்தம் நகராட்சி சார்பிலும் குடிநீர், சுகாதாரம், முதலுதவி மருத்துவ வசதிகள் செய்யப்பட்டிருந்தது. கோவிலில் அம்மன் கண் திறப்பு நிகழ்ச்சிக்கு பின்னர் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர். சிரசு ஊர்வலம் தொடங்கிய முத்தாலம்மன் கோவிலில் இருந்து கங்கையம்மன் கோவில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. காலையில் 6 மணிக்கு சிரசு ஊர்வலம் புறப்பட்டு ஒரு கிலோ மீட்டர் தொலைவை சுமார் 3 மணி நேரம் பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து சென்று கோவிலை அடைந்தது. எந்த ஆண்டும் இல்லாத வகையில் வரலாறு காணாத பக்தர்கள் கூட்டம் இருந்தது.

5 லட்சம் பக்தர்கள் இன்று அம்மன் சிரசு ஊர்வலம் மற்றும் கோவிலில் அம்மனை தரிசனம் செய்தனர். இன்று மாலை கவுண்டன்ய மகாநதி ஆற்றில் வாண வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் ஆகியோர் தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் பாஸ்கரன், கோடீஸ்வரன், குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி ஆகியோர் மேற்பார்வையில் 1,700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.