இறுதிச்சடங்கில் உயிருடன் எழுந்த 64 வயது நபர்

இந்திய மாநிலம் மகாராஷ்டிராவில் இறந்ததாக அறிவிக்கப்பட்ட நபர் ஒருவர், இறுதிச்சடங்கின்போது உயிருடன் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
மகாராஷ்டிரா மாநிலம் உல்ஹாஸ் நகரைச் சேர்ந்தவர் அபிமன் கிர்தர் தயாடே. 64 வயதான இவர் நீரிழிவு, மஞ்சள் காமாலை மற்றும் பிற உடல்நலக் குறைபாடுகளால் கடந்த 12ஆம் திகதி மயக்கமடைந்தார்.
இதனையடுத்து மருத்துவமனைக்கு அவரை கொண்டுசென்ற பின்னர், மருத்துவர் அவரை பரிசோதித்து நாடித் துடிப்பு இல்லை என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக குடும்பத்தாரின் வேண்டுகோளின்படி இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது. பின்னர் சொந்த ஊரில் அவருக்கு இறுதிச் சடங்குகள் நடந்தது.
அப்போது அபிமனின் மார்பு அசைவதையும், இதயத் துடிப்பையும் உறவினர்கள் கவனித்தனர். உடனே அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவசர சிகிச்சை தொடங்கப்பட்டு, 30 நிமிடங்களுக்குள் அவர் சுயநினைவு திரும்பினார். மருத்துவமனையின் தவறால் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதாக குடும்பத்தினர் கண்டித்தனர்.
அப்போது மருத்துவர் தனது தவறை ஒப்புக்கொண்டார். அவர் நாடித்துடிப்பை பார்க்கும் சமயம் சாலை கட்டுமான சத்தம் காரணமாக தவறு நேர்ந்துவிட்டதாக கூறினார்.