;
Athirady Tamil News

வலி வடக்கு காணிகள் விடுவிக்கப்படும்

0

யாழ்ப்பாணத்தின் வலி.வடக்கு பிரதேசத்தில் எதிர்காலத்திலும் படிப்படியாக காணிகள் விடுவிக்கப்படும் என எதிர்பார்ப்பதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் அன்ரூ பட்ரிக்ஸூக்குத் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர், ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் புதன்கிழமை வடக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இங்குள்ள முதலீட்டாளர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியதாக பிரிட்டன் தூதுவர் இந்தச் சந்திப்பின்போது ஆளுநரிடம் குறிப்பிட்டதுடன் முதலீட்டுக்கான சந்தர்ப்பங்கள் தொடர்பிலும் வினவினார்.

வடக்கில் அமையப்பெறவுள்ள மூன்று முதலீட்டு வலயங்களினதும் உட்கட்டுமான அபிவிருத்திக்குரிய ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக ஆளுநர் தெரிவித்தார்.

வேலை வாய்ப்புக்கான தேவையைப் பூர்த்தி செய்வதற்கு அவை அவசியம் எனச் சுட்டிக்காட்டிய ஆளுநர், ஆட்சிமாற்றத்தின் பின்னர் முதலீட்டாளர்கள் இங்கு அதிகளவில் வருகின்றனர் எனவும் குறிப்பிட்டார்.

இளையோரிடத்தில் புலம்பெயர்வுக்கான சிந்தனை மேலோங்கியிருக்கின்றது என்பதையும் ஏற்றுக்கொண்ட ஆளுநர், அவர்களுக்கான வேலைவாய்ப்புக்கள் இங்கே உருவாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்திலேயே முதலீட்டு வலயங்களை அமைக்கும் நடவடிக்கைகளும் அரசாங்கத்தால் எடுக்கப்பட்டு வருகின்றது எனக் குறிப்பிட்டார்.

சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்பிலும், விமான சேவை மற்றும் கப்பல் சேவைகள் தொடர்பாகவும் பிரிட்டன் தூதுவர் கேட்டறிந்துகொண்டார்.

யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் இடையிலான உள்ளூர் விமானசேவை ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் கட்டுநாயக்காவுக்கும் பலாலிக்கும் இடையிலான விமானசேவை ஆரம்பிப்பது பெருமளவு சுற்றுலாப் பயணிகளுக்கு உதவக்கூடியதாக இருக்கும் எனக் குறிப்பிட்ட ஆளுநர் இதற்குரிய கோரிக்கை அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

காணி உரித்து நிர்ணயத் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட வர்த்தமானி, தையிட்டி திஸ்ஸ விகாரை விவகாரம் மற்றும் செம்மணி புதைகுழி அகழ்வு என்பன தொடர்பாகவும் பிரிட்டன் தூதுவர் களநிலைமைகளைக் கேட்டறிந்து கொண்டார்.

கடந்த காலங்களில் பிரிட்டன் அரசாங்கம் ஐ.நா.வின் முகவர் அமைப்புக்கள் ஊடாக பல்வேறு நிதி உதவிகளை வழங்கியதை நினைவுகூர்ந்த ஆளுநர், தற்போதும் இந்தியாவிலிருந்து நாடு திரும்ப எதிர்பார்த்துள்ள அகதிகளுக்கான வாழ்வாதாரத்துக்கு உதவிகள் தேவை என்ற கோரிக்கையையும் ஆளுநர் முன்வைத்தார்.

மேலும், பிரதான வீதிகள் புனரமைக்கப்பட்டிருந்தாலும் கிராமிய வீதிகள், கிராமிய உட்கட்டுமானங்களுக்கான தேவைகள் மற்றும் பின்தங்கிய மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கான தேவைப்பாடுகள் இன்னமும் உள்ளன எனவும் ஆளுநர் பிரிட்டன் தூதுவருக்கு தெரியப்படுத்தினார்.

இந்தச் சந்திப்பில் ஆளுநரின் செயலாளர் மற்றும் ஆளுநரின் இணைப்புச் செயலாளர்கள் பங்கேற்றனர்.



You might also like

Leave A Reply

Your email address will not be published.