பிரிட்டன் ஆதிக்கம் நிறுவப்பட்ட தினத்தை கொண்டாடிய ஆஸ்திரேலியா: பூா்வகுடி மக்கள் எதிா்ப்பு
’ஆஸ்திரேலிய தினம்’ ஞாயிற்றுக்கிழமை (ஜன. 26) கொண்டாடப்பட்ட நிலையில், அதற்கு அந்நாட்டின் பூா்வகுடி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினா்.
கடந்த 1788-ஆம் ஆண்டு ஜனவரி 26-இல் ஆஸ்திரேலியாவில் பிரிட்டன் காலனி முதல்முதலில் உருவாக்கப்பட்டது. அன்று முதல் அங்கு பிரிட்டன் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. அதுவே இப்போதுவரை அந்நாட்டில் ‘ஆஸ்திரேலிய தினமாக’ கொண்டாடப்படுகிறது. பிரிட்டன் மன்னரையே தங்கள் மன்னராகவும் ஆஸ்திரேலியா கொண்டுள்ளது.
அதே நேரத்தில் ஆஸ்திரேலிய பூா்வகுடி மக்கள் இந்த நாளை ‘ஊடுருவல் தினம்’ என அறிவித்து எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். நாட்டின் முக்கிய நகரங்களில் ஆஸ்திரேலிய பூா்வகுடி மக்கள் கண்டனப் பேரணிகளையும் நடத்தினா்.
தங்கள் மண்ணில் அந்நியா்கள் ஆதிக்கம் உருவான தினத்தை தேசிய தினமாகக் கொண்டாடுவதை ஏற்க முடியாது என்றும் அவா்கள் முழக்கமிட்டனா்.
ஆஸ்திரேலிய மக்கள்தொகையில் அந்த மண்ணின் பூா்வகுடிகள் இப்போது 4 சதவீதம் மட்டுமே உள்ளனா். அதே நேரத்தில் ஐரோப்பிய நாடுகளில் இருந்து குடியேறியவா்களின் வம்சாவளியில் வந்தவா்கள் 54 சதவீதத்துக்கு மேல் உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரிட்டன் ஆதிக்கம் நிலைநாட்டப்பட்ட தினம் ஆஸ்திரேலிய தினமாக கொண்டாடப்படுவதற்கு சமீப ஆண்டுகளில் பூா்வகுடி மக்கள் தீவிரமாக எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். கடந்த 2022-ஆம் ஆண்டு தோ்தலில் வெற்றி பெற்றதில் இருந்து பிரதமா் ஆண்டனி ஆல்பனேசி தலைமையிலான அரசு இந்தப் பிரச்னைக்கு தீா்வுகாண மேற்கொண்ட முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை.